Published:Updated:

‘தலைவருக்கு அடி... தலைவி மானபங்கம்!’ - அதிமுக தொழிற்சங்க ரகளை

எஸ்.மகேஷ்
‘தலைவருக்கு அடி... தலைவி மானபங்கம்!’ -  அதிமுக  தொழிற்சங்க ரகளை
‘தலைவருக்கு அடி... தலைவி மானபங்கம்!’ - அதிமுக தொழிற்சங்க ரகளை

அண்ணா தொழிற்சங்க பேரவைக் கூட்டம் அடிதடியில் முடிவடைந்துள்ளது. கூட்டத்தில் தலைவரை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த தாடி ம. ராசு மற்றும் அவரது மகள் பவானி ஆகியோர் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளனர். 

சென்னை எழும்பூரில் அண்ணா தொழிற்சங்க பேரவைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தலைவர் தாடி ம.ராசு, பொதுச் செயலாளர் சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திடீரென கூட்ட மேடையில் தாடி ம ராசுவுக்கும் சின்னசாமிக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தாடி ம.ராசுவை சிலர் தாக்கியுள்ளனர். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தாடி ம ராசுவின் மகளும் போக்குவரத்து கழக நிர்வாக பணியாளர்கள் சங்கத்தின் தலைவியாக இருக்கும் பவானி, மேடைக்குச் சென்று தகராறை தட்டிக் கேட்டுள்ளார். மேடையிலேயே தான் தாக்கப்பட்டதாகவும், சிலர் தன்னை மானபங்கம்படுத்தியதாகவும் பவானி தெரிவித்தார். 

இதுகுறித்து பவானியிடம் பேசினோம். "என்னுடைய அப்பா தாடி ம ராசு, அண்ணா தொழிற்சங்கத்தில் தலைவராக இருக்கிறார். அந்தப்பதவி அம்மா (ஜெயலலிதா) கொடுத்தது. அம்மா மீது மிகுந்த மரியாதை வைத்திருந்ததால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அப்பாவுக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டது. அப்பாவின் வளர்ச்சி, தொழிற்சங்கத்தில் உள்ள சிலருக்குப்பிடிக்கவில்லை. குறிப்பாக சின்னசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களும் அப்பாவுக்கு எதிராகவே செயல்பட்டுவந்தனர். இந்தச் சூழ்நிலையில் பேரவைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தலைவர் பதவியிலிருந்து அப்பாவை நீக்கியதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை அப்பா தட்டிக்கேட்டார். என்னை நீக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை என்று சொன்னார். இதனால், அவரை மேடையிலேயே சரமாரியாகத் தாக்கினர். இதைப்பார்த்தவுடன் மேடைக்குச் சென்று தட்டிக்கேட்டேன். அப்போது தகாத வார்த்தையால் என்னை திட்டியதோடு என்னையும் அடித்து உதைத்தனர். திடீரென என் சேலையைப் பிடித்தும் இழுத்து மானபங்கம்படுத்த முயன்றனர். இந்த சம்பவம் குறித்து எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கஉள்ளேன். அப்பா, மயங்கியதால் அவரை சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்" என்றார் கண்ணீர்மல்க. 

தாடி ம ராசுவை போனில் தொடர்பு கொண்டோம். அவரது மகன் பாலாஜி, அப்பா மயக்கத்தில் இருக்கிறார். அப்பாவை சின்னசாமியும் அவரது ஆதரவாளர்களும் தாக்கிவிட்டனர்" என்றார்.

அரசு போக்குவரத்து கழக வட்டாரங்கள் கூறுகையில், “அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கத்தில் கோஷ்டி பூசல் சில மாதங்களாக உள்ளது. ஸ்டிரைக் மற்றும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது அது பகிரங்கமாகவே தெரிந்தது. அண்ணா தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள விடாமல் சிலர் தடுத்தனர். ஆனால், தாடி ம.ராசு, கூட்ட அரங்குக்குள் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி நுழைந்துவிட்டார். அப்போது, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த  நிர்வாகி ஒருவர், தாடி ம ராசுவை யார் உள்ளே விட்டது. அவரை உடனடியாக வெளியே அனுப்புங்கள் என்று போக்குவரத்து கழக உயரதிகாரியிடம் தெரிவித்தார். அதற்கு தாடி ம. ராசு, நான் தொழிற்சங்கத்தின் தலைவர் என்ற முறையில் கலந்து கொள்ள அதிகாரம் இருக்கிறது என்று சொன்னார். இவ்வாறு அ.தி.மு.க. தொழிற்சங்கத்தில் நடந்துவந்த நீண்ட கால கோஷ்டி பூசல் இன்று பேரவைக் கூட்டத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது" என்றனர்.

சின்னசாமியிடம் பேசினோம். "கடந்த ஆறு மாதங்களாக தாடி ம.ராசுவின் செயல்பாடுகள் தொழிற்சங்கத்துக்கு எதிராகவே இருந்தது. ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையின்போது ஒவ்வொரு சங்கத்திலிருந்தும் இரண்டு பேர் பங்கேற்பது வழக்கம். அதுபோல அண்ணா தொழிற்சங்கத்திலிருந்து பொதுச்செயலாளர் மற்றும் துணை செயலாளரும் பங்கேற்றோம். அந்த கூட்டத்துக்கு புரட்சி பாரத அமைப்பு என்று சொல்லி தாடி ம ராசு பங்கேற்று பேசினார். அதை நான் தட்டிக்கேட்டேன். அதற்கு நான் அண்ணா தொழிற்சங்க தலைவர் இல்லை என்று தாடி ம ராசுவே தெரிவித்தார். இந்தச் சூழ்நிலையில் இன்று நடந்த கூட்டத்துக்கு தாடி ம ராசு வந்திருந்தார். அவர் மினிட் புத்தகத்தை கிழித்து எரிந்தார். இதனால், அவரை கூட்டத்திலிருந்து வெளியேற்றினார்கள். தாடி ம ராசுக்கும் அவரது மகள் பவானிக்கு தலைவர் பதவி வாங்கி கொடுத்ததே நான்தான். அந்த நன்றிகூட அவர்களுக்கு இல்லை. தாடி ம ராசுவின் இத்தயை செயல்பட்டால் அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்கி விட்டு துணை தலைவராக இருந்த கோவிந்தராஜை நியமித்துள்ளோம். இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பவானி சொல்வதைப் போல அவரை யாரும் மானபங்கப்படுத்தவில்லை. போலீஸில் புகார் கொடுத்தாலும் அதை எதிர்கொள்ள நான் மற்றும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் தயாராக இருக்கிறோம்" என்றார்.