Published:Updated:

ஹசாரே கட்சி தொடங்க ஆதரவாளர்கள் எதிர்ப்பு!

Vikatan Correspondent
ஹசாரே கட்சி தொடங்க ஆதரவாளர்கள் எதிர்ப்பு!
ஹசாரே கட்சி தொடங்க ஆதரவாளர்கள் எதிர்ப்பு!
ஹசாரே கட்சி தொடங்க ஆதரவாளர்கள் எதிர்ப்பு!

புதுடெல்லி:  கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள அன்னா ஹசாரேவுக்கு அவரது  ஆதரவாளர்களில் ஒருபிரிவினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட  பல்வேறு   கோரிக்கைகளை வலியுறுத்தி,டெல்லி ஜந்தர் மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து  வந்த ஹசாரே மற்றும் அவரது 'ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பில்  இடம்பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால்  உள்ளிட்டவர்களின் உடல் நிலை மிகவும்  பலவீனமடைந்தது.

இந்த நிலையில், உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு அன்னா  ஹசாரே உள்ளிட்ட குழுவினருக்கு 22 முக்கிய பிரமுகர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி வி.கே.சிங், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி  வி.ஆர்.கிருஷ்ண அய்யர், முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் ஜே.எம்.லிங்டோ,  பி.வி.ராஜகோபால் உள்ளிட்டோர் ஹசாரே குழுவுக்கு ஒரு கடிதம் எழுதினர்.
கடித விவரம்

அந்த கடிதத்தில், "அன்னா ஹசாரே குழுவின் உண்ணாவிரதத்தை மத்திய அரசு  கண்டுகொள்ளவில்லை.எதிர்க்கட்சியும் சிறப்பாக செயல்படவில்லை.இந்த  அரசியல்வாதிகளிடம் எதையும் எதிர்பார்க்க வேண்டாம்.இவர்களுக்கு மாற்றாக ஒரு  அரசியல் இயக்கத்தை உருவாக்க வேண்டும்.இந்த வரலாற்று சவாலை ஏற்றுக்கொண்டு  உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்”என்று கூறப்பட்டு இருந்தது.

இதனையடுத்து இன்று மாலை 5 மணியுடன் தனது உண்ணாவிரத  போராட்டத்தை  முடித்துக்கொள்வதாக நேற்று அறிவித்த அன்னா ஹசாரே, அரசியலில் ஈடுபட்டு,  மக்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கட்சி தொடங்கலாமா என்று மக்கள் கருத்தைக்கேட்டு ஹ்சாரே குழுவின் ட்விட்டர்  தளத்தில் கருத்துக்கணிப்பும் நடத்தப்பட்டு வருகிறது.

எதிர்ப்பு

இந்நிலையில், கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள அன்னா ஹசாரேவுக்கு அவரது  ஆதரவாளர்களில் ஒருபிரிவினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது ஊழல்களுக்கு எதிராக இதுநாள் வரை போராடிவிட்டு  , கட்சி தொடங்குவதாக ஹசாரே கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று  அவர்கள் கூறுகின்றனர்.

'ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றும் தருணம் இதுவல்ல என்று கூறும் அவர்கள்,ஹசாரேவின் முடிவு தங்களுக்கு ஏமாற்றத்தையும்,அதிர்ச்சியையும் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

வெறிச்சோடிய மைதானம்

இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் ஹசாரே குழுவினரின் உண்ணாவிரதம் இன்று மாலை 5 மணிக்குதான் முடிவுக்கு வருகிறது என்றபோதிலும், உண்ணாவிரத மைதானத்தில் இன்று தொண்டர்களை காணமுடியவில்லை.மிக சொற்பமானவர்களே காணப்படுகின்றனர்.

தொண்டர்கள் மற்றும் மக்கள் ஆதரவு குறைந்ததற்கு ஹசாரேவின் நேற்றைய அறிவிப்பே காரணம் எனக்கூறப்படுகிறது.

இந்த எதிர்ப்பு காரணமாக ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள முன்னணி  செயல்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.