Published:Updated:

அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிராகப் போராட்டம் -`அறம்’ இயக்குநர் கைது!

ஐஷ்வர்யா

முன்பெல்லாம் கலவரம் என்றால் அதில் வயதான நபர்கள்தான் பெரும்பாலும் ஈடுபட்டிருப்பார்கள் - கோபி நயினார்

Ambedkar statue
Ambedkar statue

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காவல் நிலையம் அருகிலேயே வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையின் தலை உடைக்கப்பட்டது. வேதாரண்யத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் திருமணத்தில் கலந்துகொள்ள தென் மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்பின் தலைவர் ஒருவர் வந்தபோது, இரு பிரிவினரிடையே போக்குவரத்தில் சிறு பிரச்னை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

Clash in Vedaranyam
Clash in Vedaranyam

அந்தப் பிரச்னைதான் தற்போது பூதாகரமாக வெடித்து சிலை உடைப்பதுவரை வளர்ந்துள்ளதாக ஊர் மக்கள் குறிப்பிட்டுள்ளார்கள். சிலை உடைக்கப்பட்டதை அடுத்து அதன் எதிரிலேயே இருந்த காவல் நிலையமும் கல்வீசித் தாக்கப்பட்டிருக்கிறது.

அதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக இதுவரை அந்தப் பகுதியைச் சேர்ந்த 50 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது. கலவரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் சம்பவ இடத்தில் தற்போது புதிய அம்பேத்கர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பரவலாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Gopi Nainar Protest
Gopi Nainar Protest

சிலை உடைக்கப்பட்டதற்கு எதிராக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் `அறம்' இயக்குநர் கோபி நயினார் போராட்டம் நடத்தினார். போராட்டம் நடப்பதை அறிந்து உடனடியாக விரைந்த மீஞ்சூர் போலீஸார் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தி அவரைக் கைதுசெய்துள்ளனர். கைதுக்குப்பிறகு நம்மிடம் பேசிய கோபி நயினார், ``முன்பெல்லாம் கலவரம் என்றால் அதில் வயதான நபர்கள்தான் பெரும்பாலும் ஈடுபட்டிருப்பார்கள்.

ஆனால், நேற்று கலவரம் ஏற்படுத்திய அனைவருமே இளைஞர்கள். அதுவும் பெரும்பாலும் இரவில்தான் இதுபோலச் சிலைகளை உடைத்திருக்கிறார்கள். முதன்முறையாகப் பட்டப்பகலில் ஒரு சிலையை உடைத்திருக்கிறார்கள். அதுவும் காவல் நிலையம் எதிரிலேயே நடக்கிறது.

Gopi Nainar Protest
Gopi Nainar Protest

என்ன மாதிரியான நஞ்சு இந்த இளைஞர்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது என்பதை எண்ணினாலே அச்சம் விளைவிப்பதாக இருக்கிறது. இது தவறு என்று போராடச் சென்ற எங்களைப் போராடவிடாமல் சிறைப்பிடித்திருக்கிறார்கள்” என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.