Published:Updated:

`முகத்தில் சாம்பல், விறகு அடுப்பு, கையில் ஆடு, மாடு!'- வேதாந்தாவுக்கு எதிராகக் கொந்தளித்த கிராம மக்கள்

எம்.திலீபன்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரியலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் செயல்படுத்த, ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது.

மக்கள் போராட்டம்
மக்கள் போராட்டம் ( எம்.திலீபன் )

அரியலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனம் அனுமதி கேட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முகத்தில் சாம்பல் பூசியும், புல் மற்றும் ஆடு மாடுகளுடன் விறகு அடுப்பு மூட்டி நூதன முறையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம்.

அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 27-ம் தேதி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரியலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் செயல்படுத்த ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. இந்தச் செய்தி வெளியானது முதல் தங்களது எதிர்ப்பை பல்வேறு கிராமங்களில் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள்மூலம் பதிவு செய்துவருகின்றனர்.

போராட்டம்
போராட்டம்

கடந்த 29-ம் தேதி ஜெயங்கொண்டத்திலும், ஜூன் 2-ம் தேதி ஆண்டிமடத்திலும் நடைபெற்ற ரத்தக் கையெழுத்திட்ட மனுவை தமிழக முதல்வருக்கு சென்றுசேரும் வகையில் இரண்டு வட்டாட்சியர் மூலம் அனுப்பிவைக்கும் வகையில் வட்டாட்சியர்களிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் விவசாயிகள்.

இந்த நிலையில், இன்று ஜெயங்கொண்டம் அருகேயுள்ள புதுக்குடி தெற்கு கரைமேடு கிராமத்தில் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் மண்ணை மலடாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க, ஆண்டிமடம் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டும் கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால், அதை போலீஸ்காரர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.

நூதன போராட்டம்
நூதன போராட்டம்

பின்னர், காவிரி பாசனப் பகுதியை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், அதனை சட்ட வடிவமாக்கி தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க உறுதியான தீர்வை எட்ட வலியுறுத்தியும், அறவழியில் புதுக்குடி தெற்கு கரைமேடு கிராமத்தில் அனுமதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டது.

போலீஸார் அனுமதி மறுத்ததை அடுத்து, தடையை மீறி இன்று தெற்குக் கரைமேடு கிராம மக்கள் முகத்தில் சாம்பலை பூசிக்கொண்டும், ஆடு மாடுகளுடன் விறகு அடுப்பு, மூச்சுக்காற்றுக்காக பலூனில் காற்றை நிரப்பிக்கொண்டும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

`முகத்தில் சாம்பல், விறகு அடுப்பு, கையில் ஆடு, மாடு!'- வேதாந்தாவுக்கு எதிராகக் கொந்தளித்த கிராம மக்கள்

தடையை மீறியும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால், போலீஸாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.