Published:Updated:

`ஷாஹீன் பாக்தான் இன்ஸ்பிரேஷன்!’ - சென்னையில் பெண்கள் முன்னெடுத்த போராட்டம் #CAA

சென்னைப் போராட்டம்
சென்னைப் போராட்டம் ( எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி )

சென்னையில் இஸ்லாமியர்கள் தொடர்ந்து 3வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் பெண்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வறு அரசியல் கட்சியினர், திரைத்துறை பிரபலங்கள் ஆகியோர் நேரில் சென்று அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சென்னைப் போராட்டம்
சென்னைப் போராட்டம்
வி.ஸ்ரீனிவாசுலு

இந்தநிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14ம் தேதி சி.ஏ.ஏ, என்.ஆர்.சி உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அனுமதியின்றி நடத்தப்பட்ட அந்தப் போராட்டத்தின்போது போலீஸார் லேசான தடியடி நடத்தினர். இதில், பலர் காயமடைந்ததாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதில், போலீஸாரும் காயமடைந்தனர்.

போராட்டக்காரர்களை சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல், போலீஸாரைக் கண்டித்து மதுரை, நெல்லை, விருதுநகர், தேனி எனத் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இணை ஆணையர் விஜயகுமாரி, ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் காலா, உதயகுமாரி ஆகியோரை கமிஷனர் விஸ்வநாதன், நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் அவர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது போராட்டம் குறித்து முதல்வரிடம் அவர் விவரித்ததாகத் தெரிகிறது. போராட்டத்தில் ஒருவர் இறந்ததாக வெளியான தகவல் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களுக்கு ஆணையர் விஸ்வநாதன் மறுப்பு தெரிவித்தார்.

காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

அதேபோல், ஜவாஹிருல்லா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினர். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், சி.ஏ.ஏவுக்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் இதை வலியுறுத்தி வரும் 19ம் தேதி சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.

போலீஸாரைக் கண்டித்தும் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள பென்சில் பேக்டரி அருகில் பெண்கள் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். ஷாஹீன் பாக் போராட்டத்தைப் போலவே பெண்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டைப் பகுதியில் இஸ்லாமியர்கள் நடத்திவரும் போராட்டம் 3வது நாளை எட்டியிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பேசுகையில், ``டெல்லி ஷாஹீன் பாக் போராட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. அதேபோல் நாங்களும் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம். மத்திய அரசு சி.ஏ.ஏவைத் திரும்பப் பெற வேண்டும்’’ என்றனர்.

அதேபோல், மதுரை மகபூப்பாளையம், நெல்லை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் இஸ்லாமியர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

மதுரையில் தொடரும் போராட்டம்
மதுரையில் தொடரும் போராட்டம்
ஈ.ஜெ.நந்தகுமார்

இந்தநிலையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களைக் கண்காணிக்கவும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் 6 அதிகாரிகளை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், மதுரை - அபய்குமார் சிங், நெல்லை - மகேஷ்குமார் அகர்வால், முருகன், தேனி - பாஸ்கரன், தூத்துக்குடி - மகேந்திரன், திண்டுக்கல் -ஜி.ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்து சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு