மதுரை: இழப்பீடு அறிவிக்காமல் உடல்களை வாங்க மாட்டோம்! 3 தொழிலாளர்களின் உறவினர்கள் சாலைமறியல்

மதுரையில் பழைய கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மூன்று தொழிலாளர்களின் குடும்பத்தினர் அவர்களின் உடல்களை வாங்காமல் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வணிகக் கட்டடத்தை புதுப்பிக்கும் பணி நடந்துகொண்டிருந்தபோது திடீரென இடிந்து விழுந்தது. இதில், அங்கு பணியாற்றிய மூன்று தொழிலாளர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை மேலமாசி வீதி வடம்போக்கி தெருவில் 50 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட வாசுதேவன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது கட்டடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்கிடையே தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். உடனே தீயணைப்புத் துறையினர்விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இதில், இடிபாடுகளுக்கிடையே ராமர், சந்திரன், ஜெயராமன் ஆகிய மூன்று தொழிலாளர்கள் இறந்தநிலையில் மீட்கப்பட்டனர். மூன்று தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

எந்தவிதப் பாதுகாப்பு வசதியுமில்லாமல் கட்டட மராமத்துப் பணியில் ஈடுபட்டதால்தான் இந்தத் பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது. கட்டட உரிமையாளர் வாசுதேவன், ஒப்பந்ததாரர் கருப்பையா ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.

மாநகராட்சியின் அலட்சியத்தால் மதுரையில் பழைய கட்டடங்கள் இடிந்து விழுந்து, அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாகிவருகிறது. கடந்த தீபாவளியன்று மதுரை நவபத்கானா தெருவில் மிகவும் பழைய கட்டடத்தில் இயங்கிய ஜவுளிக்கடையில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்கள் இருவர் இடிபாடுகளுக்குள் சிக்கி மரணமடைந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்குப் பின்பு பழைய கட்டடங்களைக் கணக்கெடுத்து நோட்டீஸ் வழங்கியது மாநகராட்சி நிர்வாகம். தொடர்ந்து பழைய கட்டடங்களை அடையாளம் காணாமலும், மாநகராட்சி விதிகளை சரிவர நடைமுறைப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.
சில நாள்களுக்கு முன்னர் மீனாட்சி திரையரங்குக்கு அருகில் பழைய மாடி வீடு ஒன்று பூமிக்குள் இறங்கி இடிந்தது. அதில் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்தநிலையில், மேலமாசி வீதி வடம்போக்கி தெருவில் பழைய கட்டடம் நேற்று இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் பலியானது மக்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று தொழிலாளர்கள் பலியான நிலையில், உடற்கூறாய்வுக்குப் பின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். `அரசு இழப்பீடு அறிவிக்காமல் உடல்களை வாங்க மாட்டோம்’ என்று மூவரின் குடும்பத்தினரும், ஊர்க்காரர்களும் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனை முன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

நம்மிடம் பேசிய உறவினர்கள்,``இறந்தவர்கள் குடும்பங்களுக்குத் தலா பத்து லட்ச ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவித்தால்தான் உடல்களை வாங்குவோம்" என்றனர். மாவட்ட அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.