Published:Updated:

டெல்லி போராட்டம்; பேச்சுவார்த்தையைப் புறக்கணித்த விவசாயிகள் - என்ன செய்யப்போகிறார் மோடி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டெல்லியில் போராடும் விவசாயிகள்
டெல்லியில் போராடும் விவசாயிகள்

வழக்கமாக டிசம்பர் மாதக் குளிரில் நடுநடுங்கும் தலைநகர் டெல்லி, லட்சக்கணக்கான விவசாயிகளின் போராட்ட உக்கிரத்தால் தகித்துக்கொண்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டெல்லியைச் சுற்றிலும் விவசாயிகள் முகாமிட்டுவிட்டார்கள். `பேச்சுவார்த்தைக்கு முன் நிபந்தனை விதிப்பது எங்களை அவமதிக்கும் செயல்' என்று கூறியிருக்கும் விவசாயிகள், முன்நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தையை ஏற்க முடியாது என்று அறிவித்துவிட்டனர். எனவே, டிசம்பர் 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று சொல்லப்பட்ட நிலையில், அதில், விவசாயிகள் பங்கேற்க மாட்டார்கள். மேலும், தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், டெல்லிக்குள் நுழைவதற்கான அனைத்துச் சாலைகளையும் முற்றுகையிடப்போவதாக விவசாயிகள் அறிவித்திருக்கிறார்கள். அதனால் அச்சமடைந்த அரசு, கூடுதலாக போலீஸாரைக் குவித்திருக்கிறது.

டெல்லியில் விவசாயிகள்
டெல்லியில் விவசாயிகள்

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து நவம்பர் 27-ம் தேதி `டெல்லி சலோ’ போராட்டத்தை ஆரம்பித்த விவசாயிகள், தற்போது டெல்லியின் எல்லைப் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். இரண்டில் ஒன்று பார்க்காமல் டெல்லியைவிட்டு நகருவதில்லை என்ற முடிவுடன் வந்திருக்கும் விவசாயிகள், ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை டிராக்டர்களிலும் லாரிகளிலும் ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

இந்தநிலையில், நவம்பர் 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று `மன் கி பாத்’ என்ற மாதாந்தர வானொலி நிகழ்ச்சியில் விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு எதிராக பிரதமரின் பேச்சு அமைந்தது. மத்திய பா.ஜ.க அரசு சமீபத்தில் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. ஆனால், இந்த மூன்று வேளாண் சட்டங்களும் மிகக் குறுகியகாலத்திலேயே நல்ல பலன்களை அளித்திருக்கிறது என்று பிரதமர் மோடி பேசினார்.

மேலும், `புதிய வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண்துறையில் கொண்டுவரப்பட்டிருக்கும் சீர்திருத்தங்கள், விவசாயத்துக்கும் அது தொடர்பான மற்ற துறைகளுக்கும் புதிய வடிவத்தைக் கொடுத்திருக்கின்றன. அவை, விவசாயிகளுக்கான புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்துவிட்டிருக்கின்றன’ என்று மோடி பேசினார்.

மோடி
மோடி
ANI

மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக இருக்கிறார்கள். அதை அவர்கள் வெளிப்படையாகவும் உறுதியாகவும் அரசிடம் முன்வைத்துவருகிறார்கள். ஆனால், `விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் அறிவிப்பை வெளியிட்டு, விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கும் நேரத்தில், பிரதமரின் இந்தக் கருத்து முரண்பாடான நிலைக்கு இட்டுச் செல்கிறது.

அதாவது, விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படாது என்பதை மறைமுகமாக `மன் கி பாத்’ பேச்சின் மூலம் உணர்த்தினார். அதன் மறுநாள் வாரணாசியில் பேசிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களை ஆதரித்துப் பேசியதுடன், விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாகக் குற்றம்சாட்டினார். இதையடுத்து, விவசாயிகளின் போராட்டம் அடுத்தகட்டத்துக்கு சென்றது. சாலைகளில் போலீஸார் அமைத்திருந்த இரும்புத் தடுப்புகளை டிராக்டர்களின் உதவியுடன் அப்புறப்படுத்தி, விவசாயிகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முட்டிமோதும் விவசாயிகள், ஒடுக்கும் அரசு... டெல்லி போராட்டத்தில் என்ன நடக்கிறது? #DelhiChalo

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மற்ற மாநிலங்கள் அனைத்திலும் போராட்டங்கள் தீவிரமடையத் தொடங்கியிருக்கின்றன. தமிழகம் முழுவதும் நவம்பர் 30-ம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்களை இடதுசாரி அமைப்புகள் நடத்தியிருக்கின்றன. டெல்லியில் நான்கு மாநில விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து டெல்லிக்கு விவசாயிகள் சென்றனர். ஜந்தர்மந்தருக்குச் செல்ல வேண்டும் என்பது உத்தரகாண்ட் விவசாயிகளின் திட்டம்.

அவர்களை ஜந்தர் மந்தருக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, புரார் மைதானத்தில் கொண்டுபோய் போலீஸார் விட்டுவிட்டார்கள். புரார் மைதானத்துக்கு விவசாயிகள் அனைவரும் செல்ல வேண்டும் என்பது அமித் ஷாவின் வேண்டுகோள். புரார் மைதானத்துக்குச் சென்றுவிட்டால், மறுநாளே பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அமித் ஷா நிபந்தனை விதித்தார். ஆனால், `அது ஒரு திறந்தவெளி சிறைச்சாலை’ என்று கூறி, அங்கு செல்வதற்கு விவசாயிகள் மறுத்துவிட்டனர். உத்தரகாண்ட் விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டுபோய் புராரி மைதானத்தில் விட்டுவிட்டனர்.

அமித் ஷா
அமித் ஷா

தலை உச்சியில் ஏறி உட்கார்ந்துகொண்டு கழுத்தைப் பிடித்து இறுக்குவதுபோல, தலைநகர் எல்லையில் முகாமிட்டு, மத்திய அரசுக்கு மிகப்பெரிய அழுத்தத்தையும் நெருக்கடியையும் விவசாயிகள் கொடுத்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான விவசாயிகள் அல்ல... ஒரு கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்கு திரண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. என்ன செய்வது என்று அமித் ஷாவும் நரேந்திர சிங் தோமரும், பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் அதிதீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், ``விவசாயிகள் போராட்டத்தின் அழுத்தத்தால் வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்குவதென்று அரசு முடிவெடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?” என்ற கேள்வியை பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம்.

``வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்குவதற்கு வாய்ப்பே கிடையாது. விவசாயிகளுக்கு நன்மையளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்களை எதற்காக வாபஸ் பெற வேண்டும்... இந்தப் போராட்டம், விவசாயிகள் என்ற போர்வையில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகளாலும் இடைத்தரகர்களாலும் தூண்டிவிடப்பட்டது. எனவே, இந்தச் சட்டங்களில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலையைச் சட்டமாகக் கொண்டுவர வேண்டும் என்று போராடும் விவசாயிகள் சொல்கிறார்கள். ஏற்கெனவே, குறைந்தபட்ச ஆதார விலையை எடுக்க மாட்டோம் என்று அரசு சொல்லியிருக்கிறது.

நாராயணன்
நாராயணன்

காங்கிரஸ் ஆட்சியில் மொத்தமே 7 – 8 சதவிகிதம் விவசாய விளைபொருள்கள்தான் குறைந்தபட்ச ஆதார விலையின் கீழ் வாங்கப்பட்டன. ஆனால், பா.ஜ.க ஆட்சியில் 30 சதவிகிதம் வாங்கப்படுகிறது. இது, காங்கிரஸ் அரசைவிட மூன்று மடங்கு அதிகம். எனவே, தற்போதைய பிரச்னை அது அல்ல. இந்த மூன்று வேளாண் சட்டங்களாலும் பாதிக்கப்படுவது இடைத்தரகர்களும் பெரு விவசாயிகளும்தான். அவர்கள்தான் விவசாயிகளைத் தூண்டிவிட்டு பிரச்னை செய்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெரு விவசாயிகள்தான், இந்தப் போராட்டத்துக்குக் காரணம். காங்கிரஸ் கட்சியின் ஆதரவுபெற்ற விவசாய சங்கங்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு மக்களைத் தூண்டிவிட்டு இப்படிச் செய்கின்றன.

இந்த வேளாண் சட்டங்களால் சிறு, குறு விவசாயிகளுக்கு மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். அவர்கள் விளைவிக்கும் விளைபொருள்களை எங்கு வேண்டுமானாலும் போய் விற்க முடியும். இவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை ஒப்பந்ததாரர்களோ, பெரு நிறுவனங்களோ உடனடியாக வாங்கிக்கொள்வார்கள். அதனால் அவர்களுக்கு உடனடியாகப் பணம் கிடைக்கும். அதனால் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் சிறு, குறு விவசாயிகளுக்கு ஏற்படாது. இதுபோல நிறைய பயன்கள் விவசாயிகளுக்கு இந்தச் சட்டங்களால் கிடைக்கும். அப்படிப்பட்ட வேளாண் சட்டங்களை மத்திய அரசு ஒருபோதும் திரும்பப் பெறாது” என்றார் நாராயணன் திருப்பதி.

விவசாயிகள் போராட்டம் குறித்து தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சு.கண்ணையனிடம் பேசினோம். ``இந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானவை. விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று உண்மையிலேயே மோடி அரசு நினைத்திருந்தால், விவசாயிகள் உள்ளிட்ட தரப்பினருடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துகளைக் கேட்டு இந்தச் சட்டங்களைக் கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால், மோடி அரசு அப்படிச் செய்யவில்லை.

`விவசாயிகளிடமிருந்து அரிசியையும் கோதுமையையும் கொள்முதல் செய்யக் கூடாது’ என்று உலக வர்த்தக அமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் உலக வர்த்தக அமைப்பின் மூலமாக இந்தியாவை நிர்பந்தித்து வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளாக அந்த நிர்ப்பந்தம் அதிகரித்துவருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையைக் கொடுக்கக் கூடாது, வேளாண் விளைபொருள்களை அரசு கொள்முதல் செய்யக் கூடாது, இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் உணவுப்பொருள்களை அரசு வாங்கிவைக்கக் கூடாது என்று உலக வர்த்தக அமைப்பு கடும் அழுத்தம் கொடுத்துவருகிறது. அதன் விளைவாகத்தான் இந்த மூன்று சட்டங்களையும் அரசு கொண்டுவந்திருக்கிறது.

கண்ணையன்
கண்ணையன்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க பா.ஜ.க அரசு தொடர்ந்து முயன்றுவருகிறது. அதேபோல, இந்த வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படுகிறது என்ற தோற்றத்தை உருவாக்க பா.ஜ.க அரசு முயல்கிறது. விளைபொருள்களை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்று சொல்கிறார்கள். நடைமுறையில் அதற்குச் சாத்தியமே இல்லை. விளைபொருள்களை உடனே விற்றுவிடலாம் என்று சொல்கிறார்கள். நான் விளைவித்த மூன்று டன் உருளைக்கிழங்கை ஒரு கார்ப்பரேட் கம்பெனியிடம் விற்றபோது, ஒரு டன் உருளைக்கிழங்கை மட்டுமே எடுத்துக்கொண்டார்கள். இரண்டு டன் உருளைக்கிழங்கை கழித்துவிட்டார்கள். கொள்முதல் தொடர்பான அவர்களின் கொள்கை அப்படி இருக்கிறது. எனவே, இந்த வேளாண் சட்டங்கள் முழுக்க முழுக்க கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதமாகவும், விவசாயிகளுக்கு எதிராகவும் இருப்பதால், அதை உணர்ந்த விவசாயிகள் உறுதியுடன் போராடுகிறார்கள்.

புதிய வேளாண் சட்டங்கள்: அடக்குமுறைக்கு அஞ்சாத விவசாயிகள் போராட்டம்- இறங்கி வருமா மோடி அரசு?

விவசாயிகளை யாரோ தூண்டிவிடுகிறார்கள் என்று சொல்வதெல்லாம் நியாயமற்ற குற்றச்சாட்டு. யாராவது தூண்டிவிட்டால் ஒரு கோடிக்கு மேற்பட்ட விவசாயிகள் திரண்டுவருவார்களா என்ன... வரலாறு காணாத அளவுக்கு டெல்லியில் விவசாயிகள் திரண்டிருக்கிறார்கள். அவர்களுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையை அரசு நடத்த வேண்டும்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

அமித் ஷா, நிர்மலா சீதாராமன் என்று அமைச்சர்களை அனுப்பாமல், பிரதமரே நேரடியாக விவசாயிகளுடன் பேச வேண்டும். சொந்த நாட்டின் விவசாயிகளிடம் பேசுவதில் பிரதமருக்கு என்ன பிரச்னை... நடிகர், நடிகைகளையும் கார்ப்பரேட் அதிபர்களையும் சந்தித்துப் பேசும் பிரதமர், ஒருமுறை விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் கோரிக்கையை விசாரிக்கக் கூடாதா?” என்றார் கண்ணையன்.

இன்று காலையில் (டிச.1) சாலையின் குறுக்கே போலீஸார் அமைத்திருந்த இரும்புத்தடுப்புகளை அப்புறப்படுத்தி விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். இந்தநிலையில், நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுடன் அமித் ஷா ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு