`மாணவர்கள்மீது தாக்குதல்; போராட்டம்; வன்முறை!' - நள்ளிரவில் போர்க்களமான டெல்லி #JamiaProtest

டெல்லி ஜே.எம்.இ பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸார் அத்துமீறி நுழைந்து, மாணவர்கள்மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா, நாகாலாந்து ஆகியவற்றிலும் மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில், டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், அதைக் கட்டுப்படுத்த போலீஸார் கண்ணீர்ப்புகை குண்டு வீசினர். டெல்லி போரட்டத்தின்போது, பேருந்துகள் சிலவும் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த போலீஸார், மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தினர். பல்கலைக்கழக நிர்வாகிகளின் அனுமதியின்றி வளாகத்துக்குள் நுழைந்த போலீஸார், நூலகம், விடுதிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மசூதி ஆகியவற்றில் இருந்த மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தினர்.
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில், போலீஸாரின் அத்துமீறலைக் கண்டித்து டெல்லி போலீஸ் தலைமையகம் முன்பாக நள்ளிரவில் கூடிய நூற்றுக்கணக்கானோர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதுகுறித்துப் பேசிய ஜே.எம்.இ பல்கலைக்கழக நிர்வாகி வாசிம் அகமது, ``போலீஸார் எங்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர். பணியாளர்கள் மற்றும் மாணவர்களை அவர்கள் தாக்கியதுடன் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர்'' என்றார்.

பல்கலைக்கழக வளாக சாலையில், மாணவர்கள் கைகளைத் தூக்கியவாறே நடந்துசெல்லும் புகைப்படமும், பல்கலைக்கழகத்தின் நூலகம், கழிவறை உள்ளிட்ட இடங்களில் போலீஸார் புகுந்து தாக்குதல் நடத்தும் வீடியோக்கள் வெளியாகி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த விவகாரத்தில், போலீஸாரின் நடவடிக்கையைக் கண்டித்து டெல்லி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஹைதராபாத் மௌலானா ஆசாத் உருது பல்கலைக்கழகம், மும்பை ஐஐடி உள்ளிட்டவைகளைச் சேர்ந்த மாணவர்கள் அமைதிப் பேரணி நடத்தினர். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது, மாணவர்கள் - போலீஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
டெல்லி போலீஸ் தலைமையகத்துக்கு வெளியே நடத்தப்பட்ட போராட்டத்தை அடுத்து, கைதுசெய்யப்பட்ட மாணவர்களைப் போலீஸார் அதிகாலையில் விடுதலை செய்தனர். இது, தங்களின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்றபடி, மாணவர்கள் அதிகாலையில் கலைந்துசெல்லத் தொடங்கினர்.

``வன்முறைச் சம்பவங்களில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று டெல்லி போலீஸ் செய்தித் தொடர்பாளர் டி.எஸ்.ரந்தவா தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பான விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாகவும் வன்முறைக்குப் பின்னணியில் இருப்பவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல், கைதுசெய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் டெல்லி கல்காஜி மற்றும் நியூகாலனி காவல் நிலையங்களில் இருந்து விடுவிக்கப்பட்டதாவும் அவர் கூறினார்.