Published:Updated:

போராட்டத்துக்குச் செல்லத் தடை; தமிழக போலீஸுக்கு டிமிக்கி - டெல்லி போலீஸிடம் சிக்கிய அய்யாக்கண்ணு!

தடுப்புக் காவலில் அய்யாக்கண்ணு
தடுப்புக் காவலில் அய்யாக்கண்ணு

அய்யாக்கண்ணு டெல்லி வந்திருப்பதாகத் தமிழக போலீஸார் தகவல் அளித்ததன் பேரில், அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்ற டெல்லி போலீஸார், அவரைத் தடுப்புக் காவலில்வைத்தனர்.

தமிழக போலீஸாருக்குத் தெரியாமல் டெல்லி சென்ற அய்யாக்கண்ணுவைப் போராட்டத்துக்குச் செல்ல விடாமல் டெல்லி போலீஸார் தடுப்புக் காவலில்வைத்திருக்கிறார்கள்.

தடுப்புக் காவலில் அய்யாக்கண்ணு
தடுப்புக் காவலில் அய்யாக்கண்ணு

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்துசெய்யும்வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். அவர்களின் இந்தப் போராட்டம் 13 நாள்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தநிலையில் அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதிலுமுள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்க அமைப்புகள், சமூகநல அமைப்புகள் மற்றும் விவசாயச் சங்கங்கள் போராட்டத்தை நடத்திவருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

எலிக்கறி தின்னும் போராட்டம்
எலிக்கறி தின்னும் போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு டெல்லி செல்வதைத் தடுக்கும் வகையில் திருச்சி அண்ணாமலை நகரிலுள்ள அவரது வீட்டில் போலீஸார் தொடர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். கடைசியாக எலிக்கறி தின்னும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

 திருச்சி: 'டெல்லி செல்வதைத் தடுத்துவிட்டனர்!' - எலிக்கறிப் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு

டெல்லி போராட்டத்தில் தன்னைக் கலந்துகொள்ள்விடாமல் தமிழ்நாடு போலீஸார் தடுத்து வருவதாக அய்யாக்கண்ணு குற்றம்சாட்டவந்தார். நேற்று மாலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செல்வதாகக் கூறிச் சென்ற அய்யாக்கண்ணு, மதுரையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றிருக்கிறார்.

டெல்லி போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த அய்யாக்கண்ணு
டெல்லி போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த அய்யாக்கண்ணு

டெல்லி விமான நிலையத்திலிருந்து கரோல்பார்க் வரை உள்ள பகுதிகள் போலீஸார் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் இருக்கின்றன. அய்யாக்கண்ணு டெல்லி வந்திருப்பதாகத் தமிழக போலீஸார் தகவல் அளித்ததன் பேரில், அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு டெல்லி போலீஸார் சென்றனர். அவரை வெளியில் செல்லவிடாமல் தடுத்தனர். அதோடு போராட்டத்துக்குச் செல்ல முயன்ற அய்யாக்கண்ணுவைத் தடுத்து போலீஸார் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு