Published:Updated:

டெல்லி: `நாங்களே கொண்டுவந்திருக்கிறோம்!’- அரசு வழங்கிய டீ, உணவை ஏற்க மறுத்த விவசாயிகள்

விவசாயிகள்
விவசாயிகள் ( ANI )

பேச்சுவார்த்தையின்போது,`எங்களுக்கான உணவை நாங்களே கொண்டுவந்திருக்கிறோம்’ என்று கூறி அரசு வழங்கிய உணவை விவசாயிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில், இன்று 40 விவசாயிகள் அடங்கிய குழுவினர், மத்திய அமைச்சர்கள், அரசுப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தைக்கு விஞ்ஞான்பவனுக்கு வந்தனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
Manish Swarup

காலையில் தொடங்கிய பேச்சுவார்த்தை நீண்டநேரம் நடைபெற்றது. அப்போது அரசுத் தரப்பில் விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்கியிருக்கிறார்கள். ஆனால், விவசாயிகள் அந்த உணவை ஏற்றுக்கொள்ள மறுத்து, தாங்கள் கொண்டுவந்த உணவை அறையின் ஓர் ஓரத்தில் அமர்ந்து சாப்பிட்டார்கள்.

விவசாயிகள் போராட்டம்: வீட்டுக்கொரு போராளி; விருதுகளைத் திருப்பியளிக்கும் பஞ்சாப் வீரர்கள்!

``அரசுத் தரப்பில் தரப்பட்ட டீ உள்ளிட்ட எந்த உணவையும் நாங்கள் ஏற்கவில்லை. எங்களுக்கான உணவை நாங்களே எடுத்து வந்திருந்தோம்" என்று கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயச் சங்கத் தலைவர் ஒருவர் தெரிவித்தார். உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்கள் விவசாயச் சங்க பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு முன்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இன்று அமித் ஷாவை சந்தித்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் போராட்டம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ``இந்தச் சட்டத்துக்கு மீண்டும் என் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறேன். நடைபெற்றுவரும் போராட்டத்துக்கு விரைவில் நல்ல தீர்வு காணும்படி வலியுறுத்தியிருக்கிறேன். இந்தப் போராட்டம் மூலம் பஞ்சாப் மாநில வளர்ச்சி மற்றும் தேசத்தின் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்பதால் விரைந்து பிரச்னையைத் தீர்க்கும்படி கேட்டுக்கொண்டேன்’’ என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு