Published:Updated:

`ஆஸ்துமாவை ஏற்படுத்தும் பார்த்தீனியம்!’- வேளாண் மையத்தை முற்றுகையிட்ட கோவில்பட்டி விவசாயிகள்

ஆஸ்துமா நோயை ஏற்படுத்தும் பார்த்தீனியச் செடிகளை அழிக்க வலியுறுத்தி முகத்தில் மாஸ்க் அணிந்து பார்த்தீனியச் செடிகளுடன் கோவில்பட்டியில் விவசாயிகள் முற்றுகையிட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முகமூடி அணிந்து முற்றுகை
முகமூடி அணிந்து முற்றுகை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேசிய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு, கையில் பார்த்தீனியச் செடிகளை ஏந்தியபடி வேளாண் விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். பின்னர், வேளாண் விரிவாக்க மைய கண்காணிப்பாளர் ராஜுவிடம் மனு அளித்தனர். இதன் தீமைகள் குறித்து விவசாயிகள் கூறுகையில்,

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள்
ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள்

``தென் அமெரிக்காவிலிருந்து நமது நாட்டுக்குள் பரவிய நச்சுத்தன்மையுடைய களைச்செடிகள்தான் இந்தப் பார்த்தீனியம். கொத்தமல்லி குடும்பத்தைச் சேர்ந்த இச்செடிகள் விவசாய நிலங்களில் தன்னிச்சையாக முளைக்கும் தன்மையுடையவை. வருடம் முழுவதும் இச்செடிகளைப் பார்க்க முடியும். வறட்சியான இடங்களில்கூட வேகமாக வளர்ந்து பூத்து நிற்கும்.

Vikatan

காற்றில் பரவும் இதன் பூக்களில் உள்ள மகரந்தங்கள், ஆஸ்துமா நோயை ஏற்படுத்துகிறது. காற்றடிக்கும் மாதங்களில் அதிகமாகப் பரவும். மழைக்காலங்களில்,வேகமாக முளைக்கும். பிடுங்கி எறிய எறிய முளைத்துஎழும் தன்மையுடைய இச்செடிகள் நிலத்தில் மற்ற செடிகளை, பயிர்களை வளரவிடுவதில்லை.

கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்
கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்

இதனால், மகசூல் கிடைப்பதில்லை. விவசாய நிலங்களைத் தவிர, தற்போது தெருக்களைச் சுற்றியும் வீடுகளைச் சுற்றியும்கூட அதிகமாகக் காணப்படுகின்றன. களைக்கொல்லிகளைத் தெளித்தாலும் கட்டுப்படாத தாவரமாகும். ஒரே ஒரு பார்த்தீனியச் செடி 2,000 முதல் 3,000 விதைகளைப் பரப்புகிறது” என்கின்றனர் வேதனையுடன்.

இதன் விதைகள் 20 ஆண்டுகள் வரைகூட உறக்கத்தில் இருந்து மீண்டும் முளைத்து எழும் தன்மையுடையது. இதன் வேர்கள் மண்ணை உவர்ப்பாக்கி விடும். இச்செடிகள் உடலில் பட்டால் அரிப்பு, சொறி போன்ற தோல்நோய்களை ஏற்படுத்தும். இத்தகைய நச்சுத்தன்மை மிகுந்த பார்த்தீனியத்தை தூத்துக்குடி மாவட்டம் மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

`ஆஸ்துமாவை ஏற்படுத்தும் பார்த்தீனியம்!’- வேளாண் மையத்தை முற்றுகையிட்ட கோவில்பட்டி விவசாயிகள்

விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும், மனித உடலுக்குள் பாதிப்புகளை ஏற்படுத்தும் இவற்றை அழிப்பதற்கு அரசு இதுவரையிலும் எந்தவித விழிப்புணர்வையும் விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தவில்லை. விவசாய நிலங்களிலிருந்து பார்த்தீனியச் செடிகளை அழிக்க ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும்” என்றனர்.