Published:Updated:

நீலகிரி: பேச்சுவார்த்தைக்கு வர மறுத்த வனத்துறை - மறியலில் குதித்த கூடலூர் எம்.எல்.ஏ!

பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியிருப்புகளுக்கு வரும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த முடியாத வனத்துறையைக் கண்டித்து கூடலூர் எம்.எல்.ஏ உட்பட உள்ளூர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டாரp பகுதிகளில் காட்டு யானை தாக்கியதில், இந்த மாதத்தில் மட்டும் தந்தை, மகன் உட்பட நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

கூடலூர் எம்.எல்.ஏ
கூடலூர் எம்.எல்.ஏ

மனிதர்களைத் தாக்கும் குணம்கொண்ட யானையான ஷங்கர் என்ற ஒற்றை யானையைப் பிடிக்க வனத்துறையினர் களமிறங்கினர். குறிப்பிட்ட அந்த யானை, கேரள அடர் வனத்துக்குள் சென்றுவிட்டதால், அதைப் பிடிக்கும் திட்டத்தை தற்போதைக்கு கைவிட்டுள்ளனர்.

இந்தநிலையில், செப்பந்தோடு, குழிவயல் பகுதி கிராமங்களின் அருகில் பத்துக்கும் அதிகமான யானைகள் முகாமிட்டிருக்கின்றன. இந்த யானைகளை கும்கி மூலம் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், வனத்துறையோ எந்தக் கோரிக்கைக்கும் செவிசாய்க்காமல், இங்கிருந்த கும்கி யானைகளை முகாம்களுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று சேரம்பாடி வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கூடலூர் எம்.எல்.ஏ மறியல்
கூடலூர் எம்.எல்.ஏ மறியல்

இதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வுகாணப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்தனர்.

பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளூர் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வந்திருந்தனர். ஆனால், வனத்துறை பேச்சுவார்த்தைக்கு வர மறுத்தது. இதில், மேலும் ஆத்திரமடைந்த கூடலூர் எம்.எல்.ஏ மற்றும் உள்ளூர் மக்கள், சுங்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கூடலூர்: `ஒரே வாரத்தில் 4 பேர் பலி’ - தொடரும் யானை - மனித எதிர்கொள்ளலால் கொதிக்கும் மக்கள்

இது குறித்து கூடலூர் எம்.எல்.ஏ (தி.மு.க) திராவிட மணி கூறுகையில், ``கிராமப் பகுதிகளுக்குள் வரும் யானைகளை விரட்டுவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் வனத்துறையினர் மெத்தனமாக இருக்கிறார்கள். பேச்சுவார்த்தைக்கும் வர மறுத்துவிட்டார்கள். வனத்துறை அதிகாரிகளைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டோம். இதே அலட்சியப் போக்குடன் வனத்துறை செயல்பாடு இருந்தால் மேலும் போராட்டம் வெடிக்கும்"என்றார்.

கூடலூர் எம்.எல்.ஏ மறியல்
கூடலூர் எம்.எல்.ஏ மறியல்

இது குறித்து வனத்துறையினர்,``ஊருக்குள் நுழையும் யானைகளைக் கண்காணிக்க சிறப்புக்குழு ஒன்றை அமைத்திருக்கிறோம். குடியிருப்புகளை ஒட்டியுள்ள பகுதிகளில் முகாமிட்டிருக்கும் யானைகளையும் 24 மணி நேரமும் கண்காணித்துவருகிறோம். மக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தேவருகிறோம்" என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு