Published:Updated:

விவசாயிகள் போராட்டத்தில் `ஷாஹீன் பாக்' பாட்டி கலந்துகொண்டாரா... - கங்கனா பதிவு உண்மையா? #FACTCHECK

விவசாயிகள் போராட்டத்தில் `ஷாஹீன் பாக்' பாட்டி
விவசாயிகள் போராட்டத்தில் `ஷாஹீன் பாக்' பாட்டி

கடந்த செப்டம்பர் மாதத்தில், டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட `2020-ம் ஆண்டின் செல்வாக்குமிக்க 100 நபர்'களின் பட்டியலில் பில்கிஸ் பானுவும் இடம்பெற்றார்.

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி `டெல்லி சலோ' என்கிற போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள் இந்திய விவசாயிகள். பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லிக்குப் படையெடுத்திருக்கிறார்கள். தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவசாயப் போராட்டத்தில் கலந்துகொண்டதாகச் சொல்லி, ஒரு பாட்டியின் புகைப்படம் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ஹைதராபாத்: ஓவைசி vs யோகி - மாநகராட்சித் தேர்தலுக்கு பா.ஜ.க இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

அந்தப் பாட்டி குறித்த சமூக வலைதளப் பதிவுகள் அனைத்திலும் இரண்டு புகைப்படங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று, ஷாஹீன் பாக் போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், மற்றொன்று, பஞ்சாபிலிருந்து விவசாயிகள் டெல்லி நோக்கிப் புறப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பாட்டியின் புகைப்படங்களைப் பகிரும் பலரும், ``இதே பாட்டிதான் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான `ஷாஹீன் பாக்' போராட்டத்திலும் கலந்துகொண்டார். தற்போது பஞ்சாப் விவசாயிபோல வேடம் அணிந்து விவசாயப் போராட்டத்திலும் கலந்துகொள்கிறார். இவரைக் காசு கொடுத்து அழைத்து வந்திருக்கிறார்கள். காசு கொடுத்தால் எந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்வார் இந்தப் பாட்டி. பாட்டியின் தொடர்புக்கு, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அல்லது காங்கிரஸ் அலுவலகம், 24, அக்பர் ரோடு, புதுடெல்லி என்ற முகவரியில் அணுகலாம்'' என்றெல்லாம் பதிவிட்டு பாட்டியின் புகைப்படங்கள் பகிரப்பட்டுவருகின்றன.

கங்கனா ரணாவத் பதிவு
கங்கனா ரணாவத் பதிவு
நகராத பெண்கள்... நகருக்கு ஒரு ‘ஷாஹீன் பாக்’

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தும் இந்தப் பாட்டியின் புகைப்படங்களை ரீட்வீட் செய்து, ``டைம் பத்திரிகையில் மிகவும் சக்திவாய்ந்த இந்தியர்களின் பட்டியலில் இடம்பெற்ற அதே பாட்டிதான் இவர்... 100 ரூபாய் கொடுத்தால் போராட்டத்துக்கு வருவார்'' என்று கிண்டலடிக்கும்விதமாகப் பதிவிட்டிருந்தார். பின்னர் இந்தப் பதிவை அடுத்த நாள் நீக்கிவிட்டார் கங்கனா.

உண்மை என்ன?

அந்த இரண்டு புகைப்படங்களில், முதல் புகைப்படத்தை கூகுள் தேடலின் ரிவர்ஸ் இமேஜ் வசதியைப் பயன்படுத்தித் தேடிப் பார்த்ததில், அது ஷாஹீன் பாக் போராட்டத்தில் எடுக்கப்பட்டதுதான் என்பது தெரியவந்தது. அந்தப் பாட்டியின் பெயர் பில்கிஸ் பானு (Bilkis Bano). 82 வயதாகும் இந்தப் பாட்டி குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஷாஹீன் பாக் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தை முன்னின்று நடத்தினார். இதன் காரணமாக இவருக்கு, `தாதி ஆஃப் ஷாஹீன் பாக்', அதாவது `ஷாஹீன் பாக்கின் பாட்டி' என்ற பெயர் கிடைத்தது.

பில்கிஸ் பானு
பில்கிஸ் பானு
Twitter/ @aarifshaah
கடந்த செப்டம்பர் மாதத்தில், டைம் பத்திரிகை வெளியிட்ட `2020-ம் ஆண்டின் செல்வாக்குமிக்க 100 நபர்'களின் பட்டியலில் பில்கிஸ் பானுவும் இடம்பெற்றார். பிபிசி கடந்த மாதம் வெளியிட்ட 2020-ம் ஆண்டுக்கான `உலகின் 100 சிறந்த பெண்கள்' பட்டியலிலும் பில்கிஸ் பானு இடம்பிடித்திருக்கிறார்.

ਪੰਜਾਬ ਦੇ ਕਿਸਾਨਾਂ ਨੂੰ ਸੰਘਰਸ਼ ਕਰਦਿਆਂ ਉਮਰਾਂ ਲੰਘ ਗਈਆਂ, ਅੱਜੇ ਪਤਾ ਨਹੀਂ ਇਨਸਾਫ਼ ਲੈਣ ਲਈ ਨਵੀਂ ਪੀੜ੍ਹੀ ਨੂੰ ਕਿਨ੍ਹਾਂ ਕ ਸੰਘਰਸ਼ ਹੋਰ ਅਤੇ ਕੁਰਬਾਨੀਆਂ ਕਰਨਾ ਪੈਣੀਆਂ ਹਨ। ਪ੍ਰਮਾਤਮਾ ਅਗਵਾਈ ਬਖਸ਼ੇ।

Posted by Sikh Relief - SOPW on Sunday, October 11, 2020

தற்போது நடைபெற்ற விவசாயப் போராட்டத்தில் கலந்துகொண்டதாகச் சொல்லிப் பகிரப்பட்டுவரும் புகைப்படத்தில் இருக்கும் பாட்டி வெள்ளை நிற உடையும் மஞ்சள் நிற சால்வையும் அணிந்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் பயன்படுத்தித் தேடிப் பார்த்ததில், Sikh Relief – SOPW என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் அக்டோபர் 11-ம் தேதியே, இந்தப் புகைப்படம் பதியப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த ஃபேஸ்புக் பக்கத்தில், கடந்த அக்டோபர் மாதம் பஞ்சாபில் நடைபெற்ற விவசாயப் போராட்டத்தின்போதே இந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டிருக்கிறார்கள். எனவே, இது தற்போது நடைபெற்றுவரும் விவசாயப் போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இல்லை என்பது தெளிவாகிறது.

இரண்டு புகைப்படங்களிலும் இருப்பது ஒரே பாட்டியா?

இரண்டாவது புகைப்படம் எடுக்கப்பட்டது அக்டோபர் மாதம் என்பது தெளிவானாலும், இந்த இரண்டு புகைப்படங்களிலும் இருப்பது ஒரே பாட்டிதானா என்கிற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், இது குறித்து ஆங்கிலச் செய்தி ஊடகம் ஒன்று, `ஷாஹீன் பாக்' புகழ் பில்கிஸ் பானு பாட்டியிடமே இந்தக் கேள்வியை முன்வைத்து பேட்டி எடுத்திருக்கிறது. அந்த வீடியோ பேட்டியில் பேசிய பில்கிஸ் பானு,

நான் ஷாஹீன் பாக்கிலுள்ள என் வீட்டில் இருக்கிறேன். வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது நான் இல்லை. தற்போது வரை நான் விவசாயப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், நாளைக்குப் போராட்டத்தில் இணைந்துகொள்ளலாம் என்றிருக்கிறேன்.
பில்கிஸ் பானு
ஷாஹீன் பாக் மூதாட்டிகள்
ஷாஹீன் பாக் மூதாட்டிகள்

இதன் மூலம் இரண்டு புகைப்படங்களிலும் இருப்பது ஒரே பாட்டியில்லை என்பது தெளிவாகிறது. யாரோ வேண்டுமென்றே பரப்பிய வதந்தி, சமூக வலைதளங்களில் பெரிய அளவு பகிரப்பட்டுவருகிறது என்பதும் தெரியவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு