Published:Updated:

கரூர்: 3 மணி நேரம் தர்ணா; பணிந்த அதிகாரிகள் - மயானம் கேட்டு கிராம மக்களின் தொடர் போராட்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தர்ணா போராட்டத்தில் முத்துச்செல்வன், பாலசுப்ரமணி
தர்ணா போராட்டத்தில் முத்துச்செல்வன், பாலசுப்ரமணி ( நா.ராஜமுருகன் )

மாயனம் அமைக்க ஒதுக்கிய நிதி எவ்வளவு என்று கேட்டு இளைஞர்கள் தர்ணாவில் ஈடுபட்டது கரூர் பகுதியில் கவனத்தை ஈர்த்தது.

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் ராஜேந்திரம் ஊராட்சிக்குட்பட்ட வாளாந்தூர் கிராமத்துக்கு, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மயானம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு இளைஞர்கள் தர்ணா போராட்டம் நடத்தி அதிகாரிகளை திணறடித்துள்ளனர்.

தர்ணா போராட்டத்தில் முத்துச்செல்வன், பாலசுப்ரமணி
தர்ணா போராட்டத்தில் முத்துச்செல்வன், பாலசுப்ரமணி
நா.ராஜமுருகன்

வாளாந்தூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுடுகாடு வசதி செய்து கொடுக்காமல், மாவட்ட நிர்வாகம் புறக்கணித்துவந்தது. பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், மக்கள் தொடர்ந்து உதாசீனப்படுத்தப்பட்டனர்.

தொடர் போராட்டத்தை அடுத்து, கடந்த 28.09.2019 அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், `ராஜேந்திரம் தெற்கு கிராமம் வாளாந்தூரில் இருக்கும் மயானத்துக்கு சாலை அமைத்து, மயானக் கொட்டகை, தண்ணீர் வசதி, சுற்றுச்சுவர் கட்டுவதற்காக திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதற்காக, நாங்கள் ஏற்கெனவே ஆதிதிராவிடர் நல சிறப்பு திட்டத்தின் மூலம் ரூபாய் 19.30 லட்சம் ஒதுக்க உரிய கருத்துருக்கள் நிர்வாக அனுமதி கோரி கரூர் மாவட்ட திட்ட இயக்குநருக்கு அனுப்பியுள்ளோம். இன்னும் இரண்டு மாத காலத்தில் நிதி வந்துவிடும். அதன் பிறகு, உடனடியாக அனைத்தும் செய்து தரப்படும்' என எழுத்துபூர்வமாக ஒப்பந்தம் செய்த பிறகு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை.

ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம்
ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம்
நா.ராஜமுருகன்

அதன் பிறகு, குளித்தலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் வட்டாட்சியர், கோட்டாட்சியர், சார் ஆட்சியர், மாவட்ட ஆட்சித்தலைவர், குளித்தலை ஒன்றியப் பெருந்தலைவர், சட்டமன்ற உறுப்பினர் என அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் மனுக்களை சமூக ஆர்வலர்கள் வழங்கியும், வாளாந்தூர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுடுகாடு பாதை அமைத்துத் தராமல் புறக்கணித்துவந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில்தான், சில தினங்களுக்கு முன்பு மீண்டும் சுடுகாடு அமைத்து தரக்கோரி, வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்பாரி போராட்டம் நடத்த, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சுடுகாட்டுப் பாதை
சுடுகாட்டுப் பாதை
நா.ராஜமுருகன்

அந்தக் கூட்டத்தில்,`குளித்தலை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் மூலம், ரூபாய் 4,25,000ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிர்வாக அனுமதி பெறுவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்குக் கருத்துருக்கள் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி வரப் பெற்றதும் பணிகள் விரைந்து செயல்படுத்தப்படும். தற்போது, ஒன்றிய கவுன்சிலர் நிதியிலிருந்து சுடுகாட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் இரண்டு நாள்கள் சுத்தம் செய்து, தற்காலிகமாக ராட்சதக் குழாய் அமைத்து, மண் அடித்து, சாலை அமைக்கப்படும்' என துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.

` 75 சென்ட் மயானம்...அரை கி.மீ விவசாய நிலம்!' - வயலில் இறங்கி சடலத்தைச் சுமக்கும் ஆரணி மக்கள்

இந்தநிலையில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் முத்துச்செல்வனும், வாளாந்தூர் கிளைச் செயலாளர் பாலசுப்ரமணியும் ஒன்றிய அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்படனர்.

முத்துச்செல்வன்
முத்துச்செல்வன்
நா.ராஜமுருகன்

அது குறித்து, பேசிய முத்துச்செல்வன், ``போராட்டக்குழு சார்பில், `ஒன்றிய கவுன்சிலருக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்னென்ன பணிகளை செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது, அந்தப் பணியின் வொர்க் ஆர்டர் காப்பி தாருங்கள்' என்று கேட்டோம். அதற்கு அவர், விவரங்களைத் தராமல் பல நாள்களாக இழுத்தடித்தனர். ஏன் தர மறுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, `அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? எந்த விவரமும் சொல்ல முடியாது. எந்த விவரமும் தர முடியாது. மரியாதையா வெளியே போங்க' என அவமரியாதையாக அதிகாரிங்க பேசினாங்க. இதைக் கண்டித்து யூனியன் அலுவலகத்திலேயே நானும், வாளாந்தூர் கிளைச் செயலாளர் பாலசுப்பிரமணியும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

பிறகு, மூன்று மணி நேரம் கழித்து காவல்துறை அதிகாரிகள் சமாதானம் செய்து, அதன் அடிப்படையில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அந்த விவரங்களைக் காண்பித்தார். அந்த விவரத்தில், தண்ணீர் வசதிக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, மோட்டார் சரிசெய்து, குழாய் அமைத்து, தண்ணீர் கொண்டு செல்வதற்காக ஒன்றிய கவுன்சிலருக்கு ரூ. 2,50,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். அதனால், போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைத்திருக்கிறோம். வாளாந்தூர் கிராமத்தின் சுடுகாட்டில் அத்தனை அடிப்படை வசதிகளையும் செய்ய வைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். மனிதன் கடைசியாக போய்ச் சேரும் இடம் சுடுகாடுதான். அந்தச் சுடுகாட்டுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராமல் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மக்களை ஏமாற்றுகிறார்கள். எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டது என்று மறைத்து, அதில் முறைகேடு செய்ய நினைக்கின்றனர்.

கரூர்: `நீயாவது  இந்த பொதுப்பாதையை திறக்க வை..!’ - சுடுகாட்டில் மனு அளித்த குளித்தலை இளைஞர்கள்

நாங்கள் தர்ணா போராட்டம் நடத்தியதும், எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தைக் காண்பித்தனர். அதில் ஒரு ரூபாயைக்கூட முறைகேடு செய்யவிட மாட்டோம்” எனச் சொன்னார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு