Published:Updated:

`அனைவருக்கும் நன்றி!' - போராட்டத்தால் வெளியேற்றப்பட்ட நார்வே சுற்றுலாப் பயணி உருக்கம் #CAA

குடியுரிமைச் சட்டத் திருத்த மாசோதாவுக்கு எதிராகப் போராடிய நார்வே நாட்டு சுற்றுலாப் பயணியை நாட்டைவிட்டு வெளியேறுமாறு குடியேற்ற அதிகாரிகள் எச்சரித்தாக அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஜான் மெட்டே ஜோஹான்சன்
ஜான் மெட்டே ஜோஹான்சன்

நார்வே நாட்டைச் சேர்ந்தவர் ஜானே மெட்டே ஜான்சன். இவர் சுற்றுலாவுக்காக இந்தியா வந்துள்ளார். இந்தியாவில் குடியுரிமைச் சட்டத் திருத்த மாசோவுக்கு எதிராக மக்கள் போராடி வருவதைக் கவனித்து வந்துள்ளார். இதையடுத்து, கடந்த 23-ம் தேதி குடியுரிமைச் சட்டத் திருத்த மாசோதாவுக்கு எதிராக கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளார் ஜேன் மெட்டே ஜோஹான்சன்.

ஜேன் மெட்டே ஜோஹான்சன்
ஜேன் மெட்டே ஜோஹான்சன்

போராட்டம் முடிந்து, தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்தவரிடம், குடியேற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவரிடம் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். `எதற்காக என்னை நாட்டை விட்டு வெளியேறச் சொல்கிறீர்கள்? நான் என்ன தவறு செய்தேன் என்று விளக்குங்கள்' எனக் கேட்டுள்ளார் ஜேன் மெட்டே ஜோஹான்சன்

அதற்கு குடியேற்ற அதிகாரிகள் விசா விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது. மேலும், அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டது போன்றவை சட்டப்படி குற்றம் என்று கூறியுள்ளனர். அதனால் நீங்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

அதிகாரிகளிடம், நார்வே செல்கிறேன் என்று ஜேன் மெட்டே ஜோஹான்சன் உறுதியளித்தும், உடனடியாக கிளம்புமாறு அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதையடுத்து, தனது நண்பருக்கு தொலைபேசி முலம் தெரிவித்து விமான டிக்கெட் புக் செய்து நார்வே சென்றுள்ளார். அதுவரை குடியேற்ற அதிகாரிகள் தன்னைப் பின் தொடர்ந்ததாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

`அனைவருக்கும் நன்றி!' - போராட்டத்தால் வெளியேற்றப்பட்ட நார்வே சுற்றுலாப் பயணி உருக்கம் #CAA

இதுகுறித்துப் பேசிய ஜேன் மெட்டே ஜோஹான்சன், மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது குரலைப் பதிவு செய்தனர். அரசாங்கத்துக்குச் சொல்ல வேண்டியதை மிகக் தெளிவாக எந்தப் பிரச்னையும் செய்யாமல் அமைதியான முறையில் பதிவு செய்தனர். அது எப்படிக் குற்றமாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்தியாவில் தான் சுற்றுப்பயணம் செய்த இடங்களில் தமக்கு மிகுந்த மரியாதையை அங்குள்ள மக்கள் அளித்தனர். ஆனால், அரசாங்கம்தான் உரிமைகளைப் பேசியதற்கு அவமதித்துள்ளது என்று கூறியுள்ளார். இந்தியாவில் தான் பயணம் மேற்கொண்டது குறித்து இனிமேல் எந்தப் பதிவையும் இடப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், அனைவருக்கும் நன்றி என்றும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

`குறுஞ்செய்திகளுக்கு நன்றி!’ - #CAA போராட்டத்தால் வெளியேற்றப்பட்ட ஜெர்மன் மாணவர் நெகிழ்ச்சிப் பதிவு

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஐ.ஐ.டி மாணவர் வெளியேற்றப் பட்டதைத் தொடர்ந்து தற்போது நார்வே நாட்டுப் பயணி வெளியேற்றப்பட்டது வெளிநாட்டுப் பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.