Published:Updated:

`பணம் உங்களுக்கு... நோய் எங்களுக்கா?’- சிமென்ட் ஆலையால் கொதிக்கும் அரியலூர் மக்கள்

சிமென்ட் ஆலை
சிமென்ட் ஆலை

அந்த ஆலைக்கு, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் ப்ளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டுவந்து எரிப்பதாக, அப்பகுதி மக்கள் புகார் கூறுகிறார்கள்.

`சிமென்ட் ஆலை வெளியிடும் புகையால் விவசாயத்தை இழந்தோம். தற்பொழுது ப்ளாஸ்டிக் கழிவுகளை எரித்து சிமென்ட் தயாரிப்பதால், மக்களையும் இழக்கப்போகிறோம்’ என்று பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றிச்செல்லும் லாரிகளை மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தியிருக்கும் சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. `இதே நிலை தொடர்ந்தால், ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்’ என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

பிளாஸ்டிக் கழிவுகள்
பிளாஸ்டிக் கழிவுகள்

அரியலூர் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட சிமென்ட் ஆலைகளும், 150-க்கும் மேற்பட்ட சுண்ணாம்புச் சுரங்கங்களும் இருக்கின்றன. இங்கு உற்பத்திசெய்யும் சிமென்ட், வெளிமாநிலங்கள் மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், அரியலூர் மாவட்டம் பளிங்காநத்தம் எல்லையில் உள்ள டால்மியா சிமென்ட் ஆலையில் பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாகப் பயன்படுத்தும் திட்டம் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று சூழலியல் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.

இந்த நிலையில், அந்த ஆலைக்கு தினமும் திருப்பூர்,கோயம்புத்தூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் ப்ளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டுவந்து எரிப்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகிறார்கள். ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் பெண்கள், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் எனப் பலருக்கும் மூச்சுத் திணறல், நெஞ்செரிச்சல், தொண்டையில் எச்சில் விழுங்க இயலாத நிலை எனப் பல்வேறு உபாதைகளைத் தினமும் சந்திப்பதாகவும், ஆலையில் ப்ளாஸ்டிக் கழிவுகளை எரிக்கக்கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போராட்டம்
போராட்டம்

பாதிக்கப்பட்ட சுற்றுவட்டார பெண்கள், அதிகாரிகளோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு போராட்டத்திலும் இறங்கினர்.

போராட்டத்தில் ஈட்டுப்பட்ட 'மக்கள் சேவை' இயக்கத்தின் தலைவர் தங்க.சண்முகசுந்தரத்திடம் பேசினோம்.``சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாகப் பயன்படுத்தும் திட்டம் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசின் விதிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் முரணாக பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதனால் புவி வெப்பமடையும். ஆலையிலிருந்து அளவுக்கு அதிகமாக வெளியேறும் புகையால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு மூச்சுத் திணறல், நெஞ்செரிச்சல், தொண்டையில் எச்சில் விழுங்க இயலாத நிலை எனப் பல்வேறு உபாதைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். இதை தட்டிக்கேட்கவேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ஆலை நிர்வாகத்தினருக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தங்க.சண்முக சுந்தரம் மக்கள் சேவை இயக்கம்
தங்க.சண்முக சுந்தரம் மக்கள் சேவை இயக்கம்

யாரோ ஒருவர் கோடிகோடியாக சம்பாதிப்பதற்காக மக்களை பலிகிடா ஆக்குவதா? பணம் உங்களுக்கு...நோய் எங்களுக்கா?உடனே இவ்விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல், மக்களைத் திரட்டி ஆலை முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு எடுக்க இருக்கிறோம்” என்றார்.

பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வரும் லாரிகள்
பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வரும் லாரிகள்

இதுகுறித்து ஆலைதரப்பில் பேசினோம்.``நாங்கள் சட்டத்தை எதுவும் மீறவில்லை. 2016-ம் ஆண்டு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்திருக்கும் வரைமுறைகளுக்கு உட்பட்டே ப்ளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் படி சிமென்ட் தொழிற்சாலை, அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நகராட்சிகளில் ஒப்பந்தம் செய்து கழிவுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு. அதன்படிதான் நடந்துகொள்கிறோம்” என்பதோடு முடித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு