Published:Updated:

திண்டுக்கல்: `180 நாள்கள் தண்ணீர் திறக்க வேண்டும்!’ - திடீர் சாலைமறியல்; ஸ்தம்பித்த நெடுஞ்சாலை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்

குடகனாற்றில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், தேனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால், இரண்டு மணி நேரமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உருவாகும் குடகனாறு, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா மல்லையபுரம், வீரக்கல், அனுமந்தராயன்கோட்டை, மயிலாப்பூர், பாராட்டி உட்பட பல கிராமங்கள் வழியாக சுமார் 110 கி.மீ பயணித்து இறுதியாக கரூர் மாவட்டத்துக்குள் சென்று காவிரியில் கலக்கிறது. வழிநெடுகிலும் உள்ள கிராமங்களுக்கு குடகனாறுதான் பாசன மற்றும் குடிநீர் ஆதாரம்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்

இந்தநிலையில், கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர், ஆத்தூர் தாலுகா ராஜவாய்க்கால் என்ற இடத்தில் ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டு, அதை ஒட்டியுள்ள விவசாய நிலங்கள் பலனடைந்தன. இதனால், குடகனாற்றை மட்டுமே நம்பியிருந்த கிராமங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவானது. தொடர்ந்து, குடகனாற்றில் தண்ணீர் திறந்துவிடக் கோரி, கிராம மக்கள் பலகட்டப் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

இன்று காலை, தேனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பித்தளைப்பட்டி பிரிவு எனும் இடத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒரே நேரத்தில் திரண்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவாரத்தை நடத்தியும், மக்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கிராம மக்கள் கூறும்போது, ``குடகனாற்று தண்ணீரில் பாரபட்சம் பார்க்கின்றனர். இந்தப் பிரச்னை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அமைத்த நிபுணர்குழு தற்போது இங்கே வர வேண்டும். எங்கள் தரப்பு நியாயத்தைக் கேட்க வேண்டும்.

திண்டுக்கல்: `ஆளும்கட்சியினர் என்னைத் தரக்குறைவாகப் பேசுகின்றனர்!’ - கொதிக்கும் ஜோதிமணி எம்.பி

உடனே, குடகனாற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். எங்களுக்கு 180 நாள்கள் தண்ணீர் வேண்டும். எங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை எங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை” என்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்
பாலியல் கொலைகளில் பொது சமூகத்தின் பாரபட்ச கண்ணீர்... திண்டுக்கல் சிறுமி கொலை உணர்த்துவது என்ன?

குழந்தைகள், பெண்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர், கையில் கறுப்புக் கொடியுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். போலீஸார் குவிக்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை போலீஸார் கைது செய்தனர்.

அடுத்த கட்டுரைக்கு