Published:Updated:

`காட்சி பொருளான மின்கம்பங்கள்; மின் தடையால் அவதி'!- 2 ஆண்டுகளாக போராடியும் கிடைக்காத தீர்வு

இரா.மோகன்
உ.பாண்டி

2 ஆண்டுகளுக்கு முன்பு 30 மின் கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் ஊன்றினார் . ஆனால் அதன் பின் மாற்று வழியில் மின்சாரம் கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொள்ளாமால் கிடப்பில் போட்டு விட்டனர்.

மின்கம்பத்திற்கு மாலை போட்ட பெண்கள்
மின்கம்பத்திற்கு மாலை போட்ட பெண்கள் ( உ.பாண்டி )

திருவெற்றியூரில் உதய் மின் திட்ட பணிகளை கிடப்பில் போட்டதால், காட்சி பொருளாக நடப்பட்டு நிற்கும் மின் கம்பத்திற்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்த நூதன போராட்டத்தினை நடத்தினர்

மின்கம்பம் முன் ஒப்பாரி போராட்டம்
மின்கம்பம் முன் ஒப்பாரி போராட்டம்
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் சமேத வன்மீக நாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த ஊரில் 800 -க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு, திருவாடானையில் இருந்து ஆதியூர் வழியாக 50 ஆண்டுகளுக்கு முன்பாக நடப்பட்ட மின் கம்பங்கள் மூலம் மின் வினியோகம் நடைபெற்று வருகிறது. இவற்றில் பெரும்பாலான மின் கம்பங்கள் கண்மாய் பகுதிக்குள் நடப்பட்டு உள்ளதால் அடிக்கடி மின் பழுது ஏற்படுகிறது. இதை சரி செய்ய மின் ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு மேல் மின்சாரம் தடை ஏற்படுகிறது.

கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இப்பிரச்னையை சரிசெய்ய வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து உதய் மின் திட்டத்தில் கீழ் மாற்றுவழிப் பாதையில் மின்சாரம் கொண்டு வர திட்டமிட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 30 மின் கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் ஊன்றினர். ஆனால் அதன் பின் மாற்று வழியில் மின்சாரம் கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொள்ளாமால் கிடப்பில் போட்டு விட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
உ.பாண்டி

இரு ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் திருவெற்றியூர் கிராம மக்கள் தொடர்ந்து மின் தடையினால் அவதியுற்று வருகின்றனர். மின் தடையினால் தாங்கள்படும் அவதி குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து பயன்படாத நிலையில் காட்சி பொருளாக நடப்பட்டு நிற்கும் மின் கம்பங்களுக்கு மாலை போட்டு ஒப்பாரி வைக்கும் போராட்டத்தை திருவெற்றியூர் கிராமத்தினர் மேற்கொண்டனர். இக்கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும் பொதுமக்களும் மின் இணைப்பு இல்லாத மின் கம்பத்திற்கு மாலை அணிவித்தனர். அதனை தொடர்ந்து மின் கம்பங்களை சுற்றி வந்த பெண்கள் நெஞ்சிலும், தலையிலும் அடித்து கொண்டு ஒப்பாரி வைத்து அழுதபடி போராட்டம் நடத்தினர்.

ஒப்பாரி போராட்டம் நடத்திய பெண்கள்
ஒப்பாரி போராட்டம் நடத்திய பெண்கள்
உ.பாண்டி

இதன் பின்னரும் கிடப்பில் போடப்பட்ட பணிகளை துவங்கவில்லை எனில் வரும் 2-ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட மின்வாரிய அலுவலகத்தில் கிராம பெண்களை திரட்டி ஒப்பாரி போராட்டம் நடத்தவும், அதன்பின் மதுரை மண்டல மின்வாரிய முதன்மை பொறியாளர் அலுவலகத்தின் முன் ஒப்பாரி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்கின்றனர் பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்கள்.