Published:Updated:

`விசாரணைக் கைதி உயிரிழப்பு; தவறிழைத்த போலீஸார் மீது நடவடிக்கை?!' -கொந்தளித்த ராமநாதபுரம் மக்கள்

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் ( உ.பாண்டி )

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கார்த்திகேயனை போலீஸார் தாக்கியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, தாக்குதலில் காயமடைந்த கார்த்திகேயன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மணல் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவரை போலீஸார் விசாரணையின்போது தாக்கியதில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

சாலை மறியல் போராட்டம்
சாலை மறியல் போராட்டம்
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் அருகே உள்ள இளங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் என்ற போஸ். கடந்த 12-ம் தேதி பெருவயல் பூந்தோண்டி சாலையில் உள்ள தனியார் நிலத்தில் மணல் அள்ளியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தேவிப்பட்டினம் போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர் பயன்படுத்திய டிராக்டரையும் பறிமுதல் செய்த போலீஸார் பரமக்குடி ஆர்.டி.ஓ விசாரணைக்கும் பரிந்துரை செய்தனர்.

தேவிபட்டினம் காவல் நிலையம்
தேவிபட்டினம் காவல் நிலையம்
உ.பாண்டி

இந்த நிலையில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கார்த்திகேயனை போலீஸார் தாக்கியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, தாக்குதலில் காயமடைந்த கார்த்திகேயன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கார்த்திகேயன் மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த கார்த்திகேயன் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார். கார்த்திகேயன் உயிரிழந்த தகவலால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் இளங்குளம் கிராம மக்கள் தேவிப்பட்டினம் - திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கார்த்திகேயனின் இறப்புக்குக் காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயிரிழந்த கார்த்திகேயனின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை வழங்கக் கோரியும் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்
உ.பாண்டி

இது குறித்து தகவலறிந்த ராமநாதபுரம் டி.எஸ்.பி வெள்ளைத்துரை தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கார்த்திகேயனின் உடல் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் தவறிழைத்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் நீடித்த சாலை மறியல் கைவிடப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு