Published:Updated:

டாஸ்மாக் முதல் டாக்டர்கள் வரை... ஒடுக்கப்படும் போராட்டங்கள்!

போராட்டங்கள்
பிரீமியம் ஸ்டோரி
போராட்டங்கள்

கெடுபிடி எடப்பாடி...

டாஸ்மாக் முதல் டாக்டர்கள் வரை... ஒடுக்கப்படும் போராட்டங்கள்!

கெடுபிடி எடப்பாடி...

Published:Updated:
போராட்டங்கள்
பிரீமியம் ஸ்டோரி
போராட்டங்கள்

‘ஒரு முதல்வராக ஆட்சி நிர்வாகத்தில் அனுபவம் இல்லாதவர்; அவரால் அரசுக்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்ள முடியாது’ என்றுதான் ஆரம்பத்தில் பலரும் எடப்பாடி பழனிசாமியை மதிப்பீடு செய்தனர். ஆனால், அடுத்தடுத்து வெடித்துவரும் போராட்டங்களை அதிரடி காட்டி அடக்கி ஒடுக்குவதோடு, ‘இந்தியாவிலேயே அதிக போராட்டங்களைச் சந்தித்த முதல்வர் நான்தான். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் மற்றவர்களைவிட எனக்கு தெம்பு அதிகம்’ என்று பன்ச்வேறு பேசி சலம்பிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி.

கெடுபிடி எடப்பாடி...
கெடுபிடி எடப்பாடி...

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 2017 பிப்ரவரி 16-ம் தேதி எடப்பாடி பழனிசாமியின்வசம் வந்துசேர்ந்தது முதல்வர் நாற்காலி. அதன் பிறகு, கடந்த இரண்டரை ஆண்டுகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள், எட்டுவழிச்சாலை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, அரசு ஊழியர்கள், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், அரசு மருத்துவர்கள் என்று பல தரப்பட்ட போராட்டங்கள் இங்கே எழுந்தன. அத்தனையையும் ஒடுக்கி, அனைவரையும் குமுறவைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘பெண்கள் போராடுவது ஃபேஷன்!’’

டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம்
டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம்

எடப்பாடி அரசுக்கு பெரும்சவாலாக அமைந்தது பெண்களால் முன்னெடுக்கப்பட்ட டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம்தான். தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வீதிகளில் இறங்கி ஆவேசமாகப் போராடினார்கள். காவல்துறை மூலம் அதை ஒடுக்கியது எடப்பாடி அரசு. திருப்பூர் மாவட்டத்தில் போராடிய ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் காவல்துறை அதிகாரி பாண்டியராஜன். அதனால் அந்தப் பெண்ணுக்கான ஒரு பக்க கேட்கும்திறன் கடுமையாகப் பாதித்தது. காவல்துறை அதிகாரியை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று மக்கள் போராடினர். ஆனால், டி.எஸ்.பி-யாக இருந்த அவரை கோவைக்கு எஸ்.பி-யாகப் பதவி உயர்வு தந்து கௌரவித்தது எடப்பாடி அரசு. ‘போராட்டத்தை அடக்குபவர்களுக்கு முதல்வரின் பரிசு இது’ என்று சொல்லாமல் சொல்லி அதிகாரிகளுக்குப் புரியவைத்தார். ‘மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன. பெண்களை வைத்து போராட்டம் நடத்துவது இன்று ஃபேஷனாகிவிட்டது’ என்றும் கிண்டலடித்தார்.

எட்டுவழிச்சாலை!

எட்டுவழிச்சாலை எதிர்ப்புப் போராட்டம்
எட்டுவழிச்சாலை எதிர்ப்புப் போராட்டம்

சென்னை முதல் சேலம் வரை 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டுவழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பு, விவசாயிகள் மத்தியில் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் விளைநிலங்கள், வீடுகள், கிணறுகள் மற்றும் நீர்நிலைகள் அழியும் ஆபத்து இருந்ததால், விவசாயிகள் போர்க்கோலம் பூண்டனர். முதல்வரின் மாவட்டமான சேலத்தில் நிலங்களை சர்வே செய்யவிடாமல் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். வயதான மூதாட்டி என்றுகூடப் பார்க்காமல் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றது போலீஸ். வலுத்தது போராட்டம். ஆனாலும் காவல்துறை இருக்க கவலை ஏன் என்று, மொத்த போராட்டத்தையும் ஒடுக்கியது தமிழக அரசு. ‘நானும் ஒரு விவசாயி மகன்தான் என்று சொல்லிக்கொள்ளும் முதல்வரே இப்படி விளைநிலங்களை அழித்து சாலை அமைப்பது நியாயமா?’ என்று கோபக்குரல்கள் எழுந்தன. பதிலுக்கு, சிரிப்பையே பரிசாகக் கொடுத்தார் எடப்பாடி. விவசாயிகளின் நீதிப்போராட்டம் காரணமாக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது திட்டம்.

அடக்கப்பட்ட ஜாக்டோ-ஜியோ!

ஜாக்டோ ஜியோ போராட்டம்
ஜாக்டோ ஜியோ போராட்டம்

‘அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதிய முறையை அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமல்படுத்துவோம்’ என்று 2016 சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார் ஜெயலலிதா. அதை நிறைவேற்றுமாறு தொடர்ந்து வலியுறுத்திவந்த ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் 2019, ஜனவரி மாதம் போராட்டத்தில் இறங்கினர். அரசு இயந்திரம் ஸ்தம்பித்தது. ஆர்ப்பாட்டம், தர்ணா, சாலைமறியல் எனப் போராட்டம் நீடித்தது. போராட்டக் காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அரசு, அதிரடியாக அவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தது. பணியிடை நீக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. போராட்டம் வாபஸ் ஆனது.

மிரட்டப்பட்ட மருத்துவர்கள்!

மருத்துவர்கள் போராட்டம்
மருத்துவர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு, காலமுறை பதவி உயர்வு, அரசு மருத்துவர்களுக்கு பட்டமேற்படிப்பில் 50 சதவிகித இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் ஏழாம் நாளில் ‘மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்’ என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘உங்கள் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். போராட்டத்தைக் கைவிட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார். கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயாராக இல்லாத சூழலில் போராட்டம் தொடர்ந்தது. மிரட்டல் ஆயுதத்தைக் கையிலெடுத்த அரசு, ‘பணிக்குத் திரும்பாவிட்டால் டிஸ்மிஸ். புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்’ என்று மிரட்டியதால், வேறு வழியின்றி போராட்டத்தை முடித்துக் கொண்டனர் அரசு மருத்துவர்கள்.

வெற்றி பெற்ற ஒரே போராட்டம்!

இதற்கு நடுவே இந்த ஆட்சியில் வெற்றிபெற்ற ஒரே போராட்டம், அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் போராட்டமே! பெரும்பான்மையான மக்கள் தினம் தினம் பயன்படுத்துவது அரசுப் பேருந்துகளைத்தான். அவை முடக்கப்பட்டதால் மக்களின் கோபம் அரசாங்கத்தின்மீது திரும்பியதும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.

டாஸ்மாக் முதல் டாக்டர்கள் வரை... ஒடுக்கப்படும் போராட்டங்கள்!

30, 35 ஆண்டுகளாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் பலரும் ஓய்வூதியப் பலன்கள் எதுவும் இல்லாமல் வெறுங்கையுடன்தான் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். ஒவ்வொரு மாதமும் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பி.எஃப் தொகை எனப் பிடித்தம் செய்யப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாயை, போக்குவரத்துக்கழக நிர்வாகம் வேறு வழிகளில் செலவழித்துவிட்டது. இதைத் தவிர போக்குவரத்துக்கழகங்கள் நசிந்து வருவதற்கு எதிராகவும் குரல்கொடுத்தனர் அந்த ஊழியர்கள். இதையெல்லாம் துண்டுப்பிரசுரங்கள், பிரசாரக் கூட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தினர்.

‘உடனே பணிக்குத் திரும்புங்கள்’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், தங்களின் பக்கம் நியாயம் இருந்ததால் உறுதியோடு போராடினார்கள். வேறுவழி இல்லாமல் அரசு இறங்கிவந்தது. தொழிலாளர்களின் வங்கிக்கணக்குகளில் 750 கோடி ரூபாயை அரசு செலுத்தியது. காலாவதியான பேருந்துகள் விலக்கப்பட்டு, புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. இந்தத் தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப் படவில்லையென்றாலும், வெற்றிகரமான போராட்டமே!

பொதுவாகவே போராட்டங்கள் எதுவுமே மக்களின் கவனத்தை ஈர்க்காததோடு, ‘அரசாங்கத்தின் நடவடிக்கை சரியே’ என்ற பேச்சுகளை எழவைத்திருப்பது பரிதாபமே! ‘ஆசிரியர் - வட்டித்தொழில் செய்கிறவர்; அரசு ஊழியர் - கையூட்டு வாங்குகிறவர்; அரசு மருத்துவர் - நேரத்துக்கு வராமல் தனியார் மருத்துவமனையில் வேலைபார்ப்பவர்’ இதுபோன்ற அபிப்பிராயங்கள் மக்களின் மனதில் ஆழப்பதிந்திருப்பதுதான் அதற்கு முக்கிய காரணம். இதுதான் போராட்டக்காரர்களின் மிகப்பெரிய பலவீனம். அதைப் பயன்படுத்தி போராட்டங்களை எளிதாக ஒடுக்குகிறார்கள் ஆட்சியாளர்கள். இதுவே, ‘மக்களுக்குச் சேவையாற்றுவதற்காக மக்கள் பணத்தில் இருந்துதான் நமக்கு ஊதியமே வழங்கப்படுகிறது’ என்ற உண்மையை உணர்ந்து, ‘நாம் மக்களோடு மக்களாக இருப்போம்’ என்று சேவையாற்றுவதில் அனைத்து ஊழியர்களுமே கவனமாக இருந்தால், நிச்சயம் அவர்களுடைய போராட்டங்களுக்கு மக்களின் ஆதரவு இருந்திருக்கும்; போராட்டங்களும் வென்றிருக்கும்.

‘எங்கள் மாவட்டத்தைவிட்டு அந்த கலெக்டரை மாற்றாதே’, ‘எங்கள் ஊரிலிருந்து அந்த ஆசிரியரை மாற்றாதே’ என்றெல்லாம் அத்திப்பூத்தாற்போல் மக்களால் ஒட்டப்படும் போஸ்டர்கள்தான் இதற்கு சாட்சி!

போராட்டமா... வழக்கைப் போடு!

ந்தியாவிலேயே போராட்டங்கள் அதிகமாக நடப்பது தமிழ்நாட்டில்தான் என்ற நிலை, கடந்த ஆண்டு வரை இருந்தது. சமீபகாலமாக தமிழ்நாட்டில் அந்தளவுக்குப் போராட்டங்கள் நடைபெறவில்லை. காரணம், போராட்டங்களுக்கு அனுமதியே அளிக்கப்படுவதில்லை என்பதுதான். மீறிப் போராடுபவர்கள்மீது புதிது புதிதாக வழக்குகள் பதிவதோடு, பழைய வழக்குகளையும் தோண்டியெடுக்கி றார்கள். அனுமதி வாங்கி நடத்தப்படும் போராட்டங்களில் பங்கேற்பவர்கள் மீதுகூட வழக்கு போடுகிறார்கள். இதுபோன்ற காரணங்களாலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது குறைந்துவருகிறது.