`மீனவர்களை விடுவிக்கக் கோரி வேலைநிறுத்தம்!’ - ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு

`இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வாய்ப்பில்லை’ என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் மீனவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.
இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிமுனையில் சிறைபிடித்துச் சென்ற மீனவர்களை மீட்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடிக்கச் சென்றன. இவர்கள் நேற்று பகலில் பாரம்பர்யப் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை அறுத்துவிட்டு அங்கிருந்து கரையை நோக்கித் திரும்பினர். இதனால், ஆத்திரமடைந்த இலங்கைக் கடற்படையினர் கற்களை வீசி மீனவர்களைத் தாக்கியதுடன், சில படகுகளையும் சிறைப்பிடித்தனர்.
இதில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த உதயன், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கிய குரூஸ், பாம்பனைச் சேர்ந்த அந்தோணிராஜ் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று விசைப் படகுகளையும், அவற்றிலிருந்த மீனவர்கள் சுரேஷ், அசோக், குமரேசன், கோபி, அப்துல் கலாம், ஜெனோவர், டைடஸ், சூசை, நம்பு, பாலா, ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட 22 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர். இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சிம்சன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகும், அதில் சென்ற ஏழு மீனவர்களும் கரை திரும்பவில்லை. இவர்களை தலைமன்னார் பகுதி கடற்படையினர் நடுக்கடலில் பிடித்து விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கக் கூட்டம் 'மீனவன்' விசைப்படகு மீனவர் சங்க தலைவர் எமரிட் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில், மீன்துறையின் உரிய அனுமதியுடன் மீன்பிடிக்கச் சென்று, இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு விசாரணையில் இருந்துவரும் ராமேஸ்வரம் மீனவர்கள் 29 பேரையும், அவர்களது படகுகளையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களைப் படகுடன் விடுவிக்க வலியுறுத்தி, நாளை (டிசம்பர் 16) முதல் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தம் செய்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே, இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வாய்ப்பில்லை என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மீனவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.