4 மீனவர்கள் உயிரிழப்பு: இலங்கை கடற்படைமீது வழக்கு பதியக் கோரி மீனவர்கள் உண்ணாவிரதம்!

இலங்கை கடற்படையினர் படகிலிருந்த மீனவர்களைத் தாக்கியதுடன், மாற்றுக் கப்பலைக்கொண்டு மீன்பிடிப் படகை முட்டி மூழ்கடித்திருக்கிறார்கள்.
தமிழக மீனவர்கள் உயிரிழப்புக்குக் காரணமான இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிய வலியுறுத்தி, மீனவத் தொழிலாளர் கூட்டமைப்பினர் தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, உயிரிழந்த நான்கு மீனவர்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து பிரான்சிஸ் கோவா என்பவரது விசைப்படகில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியாஸ், மண்டபம் முகாமில் வசிக்கும் இலங்கை அகதியான சாம்சன் டார்வின், உச்சிப்புளி வட்டான்வலசை பகுதியைச் சேர்ந்த நாகராஜன், தாத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் கடந்த 18-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். அன்று பகலில் இவர்களின் படகைச் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், தங்கள் கப்பலின் அருகில் மீன்பிடிப் படகை நிறுத்திவைத்துள்ளனர். கடல் சீற்றத்தால் இந்தப் படகின் பின்பகுதி இலங்கைக் கடற்படை கப்பலின் மீது மோதியதில் கப்பல் சேதமடைந்தது. இதனால், ஆத்திரமடைந்த இலங்கை கடற்படையினர் படகிலிருந்த மீனவர்களைத் தாக்கியதுடன், மாற்றுக் கப்பலைக்கொண்டு மீன்பிடிப் படகை முட்டி மூழ்கடித்திருக்கிறார்கள்.
இந்தநிலையில் நான்கு மீனவர்களும் கடலில் மூழ்கி உயிரிழந்ததாகவும், அவர்களது உடல்களை இலங்கை கடற்படையினர் மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மீட்கப்பட்ட மீனவர்களின் உடல்களில் பலத்த ரத்த காயங்களும், தீக் காயங்களும் காணப்பட்டன. இதனால், `இலங்கைக் கடற்படையினர் மீனவர்களைச் சித்ரவதை செய்து கொலை செய்துவிட்டு, கடலிலிருந்து மீட்டதாக நாடகம் ஆடுகின்றனர்’ என மீனவர்கள் குற்றம் சுமத்தினர். இதற்கிடையே கடந்த 23-ம் தேதி ராமநாதபுரம் கொண்டுவரப்பட்ட மீனவர்களின் உடல்கள் அவசர அவசரமாக அடக்கம் செய்யப்பட்டன.

இதையடுத்து மீனவர்களின் இறப்புக்குக் காரணமான இலங்கை கடற்படையினர்மீது கொலை வழக்கு பதியக் கோரியும், தற்போது இலங்கைச் சிறையிலுள்ள ஒன்பது மீனவர்களை மீட்பதுடன், இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற படகுகளை விடுவிக்கக் கோரியும் தங்கச்சிமடத்தில் மீனவத் தொழிலாளர் கூட்டமைப்பின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. மீனவர் தொழிலாளர் சங்க நிர்வாகி இன்னாசிமுத்து தலைமையில் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மீனவர் சங்க நிர்வாகிகள் யு.அருளானந்தம், சின்னத்தம்பி, எஸ்.பி.ராயப்பன், காரல்மார்க்ஸ், முருகானந்தம், செந்தில்வேல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். மீனவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., ம.தி.மு.க., நாம்தமிழர், தே.மு.தி.க கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

இதற்கிடையே 18-ம் தேதி இலங்கைக் கடற்படையினரின் படகு மூழ்கடிப்பு செயலால் உயிரிழந்த தமிழக மீனவர்கள் மெசியாஸ், சாம்சன் டார்வின், நாகராஜன், செந்தில்குமார் ஆகியோர் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு உயிரிழந்த மீனவர்களின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.