Published:Updated:

சச்சின், கங்கனா, மியா கலிஃபா: இந்திய அளவில் டிரெண்டாகும் விவசாயிகள் குறித்த ஹேஷ்டேகுகள் #Socialstory

நேற்று முதல் ட்விட்டரில் இந்திய அளவில் IndiaTogether, IndiaStandsAgainstpropaganda என்ற ஹேஷ்டேகுகள் டிரெண்டாகிவருகின்றன.

இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிவருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் இரண்டு மாதங்களைக் கடந்துவிட்டது. குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, விவசாயிகள் போராட்டம் நடக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இந்தச் சூழலில், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, பாப் பாடகி ரிஹானா இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அவர் பகிர்ந்திருந்த ட்விட்டர் பதிவில், ``ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ரிஹானா 100 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட பிரபலம் என்பதால், சில மணி நேரங்களில் அந்த ட்வீட் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. பதிவிட்ட 14 மணி நேரத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ரீ-ட்வீட், நான்கு லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றிருக்கும் அந்த ட்வீட், உலக அளவில் டிரெண்டிங் ஆகியிருக்கிறது. ரிஹானாவைப் பின் தொடர்பவர்கள் பலரும் #RihannaSupportsIndianFarmers என்ற ஹேஷ்டேக்கில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தங்கள் கருத்தைத் தெரிவித்துவருகின்றனர்.

அவரைத் தொடர்ந்து சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க், மியா கலிஃபா உள்ளிட்டோர் விவசாயிகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். ``இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவாக நிற்கிறோம்" என தனது ட்விட்டர் பதிவில் கிரெட்டா தெரிவித்திருந்தார்.

இவர்கள் மட்டுமன்றி அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரி மகள் மீனா ஹாரிஸும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பகிர்ந்திருந்தார். இப்படியான சூழலில் இந்திய வெளியுறவு அமைச்சகம் யார் பெயரையும் குறிப்பிடாமல் ஒரு விளக்க அறிக்கை கொடுத்திருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில், ``இந்தியாவின் சில பகுதிகளில் மிகவும் சொற்பமான விவசாயிகள் மட்டுமே அரசின் சீர்திருத்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக இருக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் பிரதிநிதிகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இதுவரை பதினோரு சுற்று பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. பிரதமரின் சார்பில் அந்தச் சட்டங்களைத் தள்ளிவைக்கும் திட்டம்கூட அறிவிக்கப்பட்டிருக்கிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து இந்தியாவில் சச்சின், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஷிகார் தவான் அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், கங்கனா ரணாவத் உள்ளிட்ட கிரிக்கெட் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் IndiaTogether என்ற ஹேஷ்டேகில், ட்விட்டரில் தங்களது கருத்துகளைப் பகிர்ந்தனர்.

சச்சின் டெண்டுல்கர், ``இந்தியாவின் இறையாண்மையில் சமரசம் செய்துகொள்ள முடியாது. வெளிநாட்டினர் பார்வையாளர்களாக இருக்கலாம். ஆனால், பங்கேற்பாளர்களாக இருக்கக் கூடாது. இந்தியாவைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியும். அவர்கள் இந்தியாவுக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்" எனப் பதிவிட்டிருந்தார்.

நடிகர் அக்‌ஷய் குமார், ``இந்தியாவின் மிக முக்கியமான அங்கம் விவசாயிகள். அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகாண முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அமைதிவழியில் இணக்கமான தீர்வுகாணும் முயற்சிக்கு நாம் ஆதரவளிப்போம். அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டுமே தவிர, பிளவுபடுத்தும் எவர்மீதும் கவனம் செலுத்தக் கூடாது," என்று கூறியிருக்கிறார்.

இதற்கு மத்தியில் #IndianFarmersHumanRights, #shameonbollywood, #AntiNationalBollywood என்ற ஹேஷ்டேகுகளும் டிரெண்டாகி வருகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு