Published:Updated:

` கடையடைப்பு; கண்டன ஆர்ப்பாட்டம்!' - போராட்டக்களமான திருச்சி #CAA

இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அதன்தொடர்ச்சியாக திருச்சியிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

குடியுரிமை திருத்தச் சட்டம், ஈழத்தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினர் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தச் சட்டத்தைத் திரும்பப்பெறக் கோரி டெல்லிப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அந்தப் போராட்டத்தை ஒடுக்க போலீஸார் தடியடி நடத்தியதில் கலவரம் வெடித்தது. இதன் தொடர்ச்சியாக டெல்லி மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடையடைப்பு
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடையடைப்பு

தமிழகத்தில் எதிர்க்கட்சியான தி.மு.க உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

திருச்சியில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. திருச்சி ஜமால் முகமது கல்லூரி மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரி உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் இந்தச் சட்டத்திற்கு எதிராக உள்ளிருப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து சமூக அமைப்புகள், மாணவர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள். போராடும் மாணவர்களுக்கு எதிராகப் பாரதிய ஜனதா கட்சியின் ஏ.பி.வி.பி மாணவர்கள் ஐந்து பேர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர்கள் பதாகைகளை ஏந்திக்கொண்டிருந்தனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடையடைப்பு
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடையடைப்பு

இந்நிலையில், திருச்சியில் ஜமாஅத்துல் உலமா மற்றும் அனைத்துக் கட்சி இயக்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்குக் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும், தடைகளை மீறி ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது. திருச்சி பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள் கடைகளை அடைத்த வணிகர்கள் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். மாலை திருச்சி இப்ராஹிம் பூங்கா அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் முகமது ரூஹீல் ஹக், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுசாமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமிய கட்சிகள் மற்றும் அரசியல் இயக்கங்களின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஏ.பி.வி.பி மாணவர்கள்
ஏ.பி.வி.பி மாணவர்கள்

பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், இன ரீதியாகவும், மத ரீதியாகவும் இந்தியாவைப் பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் இச்சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் முழங்கினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கைதான ஆர்ப்பாட்டக்காரர்கள்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கைதான ஆர்ப்பாட்டக்காரர்கள்

கூட்டத்தில் பேசிய முகமது ரூஹீல் ஹக்,``இந்தச் சட்டத்துக்கு எதிராகப் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளன. இந்தியாவின் சுதந்திரத்திற்காக உயிர்த் தியாகம் மற்றும் பொருள் தியாகம் செய்து, தங்களின் கஷ்டங்களைச் சிந்திய முன்னோர்களின் வழித்தோன்றலாக வந்த இன்றைய சமுதாயத்தினர் இந்தியாவில் வாழ்வதற்கு உரிமை இல்லை எனச் சொல்லக்கூடிய மிகக் கொடூரமான மசோதா இது. இதை எதிர்த்துத்தான் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்து வந்த எந்த ஆட்சியாளர்களும் செய்யாத ஒன்றை இவர்கள் செய்கிறார்கள். இதற்கு எதிராகக் குரல் கொடுத்தால் அவர்களை அடக்கக்கூடிய மோசமான நிலை உருவாகிறது. உலக அரங்கில் இந்தியா வல்லரசாக மாறும் சூழல் நெருங்கிக்கொண்டிருக்கும்பொழுது, இந்த தேசத்தை உலக அரங்கில் தலைகுனிய வைக்கும் மசோதா நிறைவேறிய ஒரு கொடூரமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

எனவேதான், இந்தப் போராட்டங்கள் வலுத்துள்ளன. நாளைய சமுதாயமான மாணவர்களைக் குரல் எழுப்பக்கூட அனுமதி வழங்காமல், அவர்களை அடக்கி வருவது மிகவும் வருந்தத்தக்கது. எனவே, இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம் இந்த மசோதாவைத் திரும்பப்பெற வேண்டும்” என்றார். போராட்டங்களால் திருச்சியில் போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு