Published:Updated:

டெல்லி: `நியாயம் கிடைக்கவில்லையென்றால் 2024 வரை போராடத் தயார்!’ - விவசாயிகள்

`நாங்கள் `டெல்லி சலோ’ போரட்டத்தைத் தொடங்கும் முன்பே, ஆறு மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களைச் சேகரித்து, கொண்டுவந்திருக்கிறோம்.’

`மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவில்லையென்றால், பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலம் முடியும்வரை போராட்டத்தைத் தொடரவும் தயார்’ என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

மூன்று வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் எதிர்காலம் பெருமளவில் பாதிக்கப்படும் என்று தொடக்கம் முதலே விவசாய அமைப்பைச் சேர்ந்த பலர், தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துவந்தனர். அதுமட்டுமல்லாமல், பா.ஜ.க-வைச் சேர்ந்த தலைவர்கள் சிலரும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ,விவசாயிகளுடன் போராட்டங்களில் பங்கெடுத்ததோடு, தங்கள் பதவிகளையும் ராஜினாமா செய்தனர்.

ஆனால், மத்திய அரசு வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் அமைதிகாத்தது. இதையடுத்து, லட்சக்கணக்கான விவசாயிகள் வரலாறு காணாத வகையில் ஒன்று திரண்டு, டெல்லியை நோக்கிப் பேரணியாகச் சென்று போராட்டம் நடத்திவருகின்றனர்.

இதையடுத்து, மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுக்குமிடையே நடைபெற்ற பலகட்டப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதனால், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், 20 நாள்களைக் கடந்தும் விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
Bikas Das

போராட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று 32 விவசாய அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள், தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் எனும் விவசாய அமைப்பைச் சேர்ந்த சத்னம் சிங் பன்னு, ``நாங்கள் டெல்லியில் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பே, கடந்த ஆறு மாதங்களாக பஞ்சாபில் கமிஷனர் அலுவலகத்தின் முன்பாக எங்கள் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிவந்தோம். ரயில் மறியலில் ஈடுபட்டோம். அதன் மூலம் எங்களுக்குத் தீர்வு கிடைக்காததாலேயே தற்போதைய போராட்டம் நடைபெற்றுவருகிறது. எங்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் சிலர் கூறிவரும் தவறான கருத்துகளால் இது திசைமாறிவிடாது ” என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் அமைப்பின் பொதுச்செயலாளர் சத்னம் சிங் சாஹ்னி,``நாங்கள் `டெல்லி சலோ’ போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பே ஆறு மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை சேகரித்து, கொண்டுவந்திருக்கிறோம். தேவைப்படும்பட்சத்தில் எங்கள் ஊர்களிலிருந்து தேவையான பொருள்களைக் கொண்டுவருவோம். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென்றால், எங்களின் போராட்டம், 2024-ம் ஆண்டு வரையுள்ள, மோடியின் இரண்டாம்கட்ட ஆட்சிக்காலம் முடியும்வரை தொடரும்” என்று தெரிவித்தார்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
Manish Swarup

குரு நானக் தேவ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், பேராசியருமான கியான் தேவ் விவசாயிகள் போராட்டம் குறித்துப் பேசுகையில், ``இந்தப் போராட்டத்தின் புதிய வரலாற்றை விவசாயிகள் படைக்கப்போகிறார்கள். பா.ஜ.க-வினர் குற்றம்சாட்டுவதைப்போல் விவசாயிகள் தீவிரவாத அமைப்பின் பின்னணியுடன் போராடவில்லை. உண்மை என்னவென்பதை மக்கள் அறிவார்கள். இது விவசாயிகளின் மிக நீண்டதொரு போராட்டமாக இருக்கும். இதன் மூலம் விவசாயிகள் யார் என்பதை நிரூபிப்பார்கள்’’ என்றார்.

விவசாயிகளின் போராட்டம் இரண்டாவது வாரத்தைக் கடந்து உச்சத்தை எட்டிவருகிறது. ஏற்கெனவே ஆயிரக்கணக்கான விவசாயிகள் எல்லைகளில் போராடிவருகிறார்கள். இந்தச் சூழலில் மேலும் 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், டெல்லி எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு