Published:Updated:

நண்பனுக்காக 20 வருடங்கள் 10 ரூபாய் நோட்டை பாதுகாத்த ராணுவ வீரர்; நெகிழ்ச்சி சம்பவம்!

பாஸ்ட் ஃபுட் ஆன்லைன் யுகத்தில் நட்புகள் கூட ஃபாஸ்டாக வந்து போய்விடும் சூழலில், இதுபோன்ற ஆத்மார்த்தமான நண்பர்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறார்கள்.

ராணுவப் பணிக்குச் சென்ற நண்பரிடம் ஒருவர் 10 ரூபாயை ஞாபகார்த்தமாகக் கொடுத்தனுப்ப, 20 வருடப் பணி முடித்து திரும்பிய அந்த நண்பர், அதுவரை தான் பத்திரமாக வைத்திருந்த அந்த 10 ரூபாயை அவரிடமே மீண்டும் திருப்பிக் கொடுத்த நெகிழ்வான சம்பவம் ராமநாதபுரத்தில் நடந்துள்ளது.

ஆண்டர்சன் ரூபன்-முனியசாமி
ஆண்டர்சன் ரூபன்-முனியசாமி

பொருளாதாரப் பின்புலமே உறவுகளையும் நண்பர்களையும் தீர்மானிக்கும் சக்தியாக உள்ள இக்காலத்தில், உண்மையான நட்புடன் இருக்கும் நண்பர்களைப் பார்ப்பது அரிதாகி வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரூபன் - முனியசாமி இருவரும் நட்புக்கு எடுத்துக்காட்டாகப் புன்னகைக்கிறார்கள்.

`இப்படியும் ஒரு தோழமையா?!' என்று ஆச்சர்யப்படும் வகையில் மருந்தக உரிமையாளர் ஆண்டர்சன் ரூபன் - சி.ஆர்.பி.எஃப் வீரர் முனியசாமியின் `10 ரூபாய் தாள்' நட்பைப் பற்றி நம்மிடம் சிலர் சிலாகித்துச் சொல்வதைக் கேட்டு ஆச்சர்யமாக இருந்தது.

ராமநாதபுரம் ரூபனிடம் பேசினோம். ``எல்லாரையும் போல நல்ல ஃபிரெண்ட்ஸா இருக்கோம் அவ்ளோதான். பில்டப் அளவுக்கு ஒண்ணும் இல்லையே..." என்று தயங்கியவரிடம், ``அந்த 10 ரூபாய் கதையைச் சொல்லுங்க...' என்றோம்.

ஆண்டர்சன் ரூபன்
ஆண்டர்சன் ரூபன்

``ஓ... அதுவா'' என்று புன்னகையுடன் ஆரம்பித்தார். ``97-ல் தனியார் மருத்துவமனையில ஃபார்மசிஸ்டா வேலைக்குச் சேர்ந்தேன். அப்போ ராமநாதபுரம் எனக்கு அவ்வளவு அறிமுகம் இல்லாத ஊர். அதனால யார்கிட்டயும் பழக்கமில்ல. ரொம்ப அமைதியா வேலைய மட்டும் பார்த்துட்டிருந்தேன்.

நான் வேலைபார்த்த இடத்துலதான் முனியசாமியும் வேலை பார்த்தார். ஆரம்பத்துல சாதாரணமா விஷ் பண்ணிக்குவோம்; அவ்வளவுதான். என்னவோ தெரியல... சில நாள்கள்ல ஃபிரெண்ட்ஸ் ஆகிட்டோம். பல விஷயங்கள்ல எங்க ரெண்டு பேருக்கு இடையிலயும் ஒரே வேவ் லெங்த் இருந்தது. எப்பவும் கலகலனு ஜாலியா பேசிக்கிட்டேயிருப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உள்ளூர் முதல் உலக விஷயம் வரை பேசுவோம். எங்க நட்பு, ரெண்டு பேரோட குடும்பத்தையும் இணைச்சது. இப்படியே நாள்கள் ஓடிக்கிட்டிருந்தது.

சின்ன வயசுலயிருந்து, ராணுவத்துல சேரணும் என்பதுதான் சாமிக்கு லட்சியமா இருந்தது. அதுக்காகத் தொடர்ந்து பயிற்சியும் முயற்சியும் எடுத்துத் தயாராகி வந்தார்.

பாதுகாப்புப் பணியில் முனியசாமி
பாதுகாப்புப் பணியில் முனியசாமி

2000-ம் வருஷம் சி.ஆர்.பி.எஃப்புக்கு தேர்வாகி அவர் ஆசை நிறைவேறியது. எல்லாரையும் பிரிந்து செல்றோமேங்கிற கவலை அவருக்கு இருந்தாலும், அவரோட லட்சியம் அது என்பதால காஷ்மீருக்குக் கிளம்பினார்.

கலகலனு பேசிக்கிட்டிருந்த நண்பனைப் பிரியுறோமே என்ற கவலை எனக்கும் ஏற்பட்டது. வழியனுப்ப ராமாநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனப்போ, திடீர்னு ஒரு ஐடியா தோணுச்சு. ஒரு 10 ரூபாய் நோட்டுல தேதியுடன் என் கையெழுத்தைப் போட்டு `வெச்சுக்கோ நண்பா'னு சாமிகிட்ட கொடுத்தேன்.

பத்து ரூபாய்
பத்து ரூபாய்

அப்புறம், நான் அந்த 10 ரூபாயை மறந்துட்டேன். காஷ்மீர் எல்லையில பணியில இருந்தாலும், நேரம் கிடைக்கும்போது எல்லாம் பேசுவார் சாமி. விடுமுறையில அவரு ஊருக்கு வரும்போது நாங்க சந்திப்போம். `உங்க 10 ரூபாயை பத்திரமா வெச்சிருக்கேன். எந்த நெருக்கடியிலும் அதைச் செலவு செய்ய மாட்டேன், தொலைக்க மாட்டேன்'னு சொல்வார்.

காலம்தான் வேகமா ஓடிடுமே?! கடந்த ஜூலை 31-ல சாமியின் சி.ஆர்.பி.எஃப் பணி நிறைவு பெற்றது. ஊருக்குத் திரும்பினவர், என்னைப் பார்க்க வந்தப்போ அந்த 10 ரூபாயை என்கிட்ட கொடுத்தார். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா, நெகிழ்ச்சியா இருந்தது.

எவ்வளவோ கடுமையான சூழலுக்கு இடையிலும், அந்த 10 ரூபாயை சாதாரணமா நினைக்காம அவர் பாதுகாப்பா வெச்சிருந்தது பெரிய விஷயம். இப்படியொரு நண்பன் கிடைக்கக் கொடுத்து வெச்சிருக்கணும்.

ஆண்டர்சன் ரூபன்-முனியசாமி
ஆண்டர்சன் ரூபன்-முனியசாமி

`காஷ்மீர்ல வேலைபார்க்கும்போது மன அழுத்தம் ஏற்படும்போதெல்லாம் இந்த 10 ரூபாயை எடுத்துப் பார்த்துக்குவேன்'னு சாமி அடிக்கடி என்கிட்ட சொல்லியிருக்கார். நட்பு அற்புதமானதுங்க...'' என்றார் ரூபன் பெருமிதத்துடன்.

சி.ஆர்.பி.எஃப் வீரர் முனியசாமியிடம் பேசினோம்.

``ரூபன் மாதிரி ஒரு நட்பு அபூர்வம். என் வாழ்க்கையோட இன்ப, துன்பங்கள்ல பங்கெடுத்தவர். எனக்கு ராணுவத்தில் சேரணும் என்பது லட்சியம். ஆனா, மத்திய ரிசர்வ் படையில்தான் சேர முடிந்தது. வழியனுப்ப வந்த ரூபன், அவர் நினைவா வெச்சுக்கச் சொல்லி அந்த 10 ரூபாயில கையெழுத்துப் போட்டு தந்தார். அதை நாம எதுக்காவும் செலவழிக்க மாட்டோம், அது பிரச்னை இல்ல. ஆனா, காஷ்மீர்ல கேம்ப்கள், வேலைகளுக்கு இடையில அதைப் பத்திரமா வெச்சுக்கிட்டது எனக்கு நிறைவா இருக்கு. மேலும், ஊரு ஞாபகம் வரும்போது எல்லாம் அந்த 10 ரூபாயை அப்பப்போ எடுத்துப் பார்த்துக்குவேன். மனசு லேசாகிடும். ரூபன், தான் கொடுத்த 10 ரூபாவை மறந்துட்டார். நான்தான் இடையில ஞாபகப்படுத்தி சொன்னேன். என்னோட 21 வருஷப் பணி முடிஞ்சு வந்ததும், அவர்கிட்ட அந்த 10 ரூபாயை என்னோட நினைவா கொடுத்தேன். இத்தனை வருஷமா 10 ரூபாயையும் என் நட்பையும் பத்திரமா பாதுகாத்திருக்கேன்'' என்கிறார் மகிழ்ச்சியுடன்.

பாஸ்ட் ஃபுட் ஆன்லைன் யுகத்தில் நட்புகள் கூட ஃபாஸ்டாக வந்து போய்விடும் சூழலில், இதுபோன்ற ஆத்மார்த்தமான நண்பர்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு