Published:Updated:

55 ஆயிரம் ரூபாய்க்காக கொத்தடிமையாக்கப்பட்ட இரண்டு குடும்பங்கள்!

கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்ட குடும்பங்கள் பற்றி விவரிக்கிறார், சமூக ஆர்வலர் சம்பத்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகமே சுருங்கிவிட்டது. உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவரையும் உடனே தொடர்புகொள்ள முடியும் என்ற நிலையிலும், வாங்கிய சொற்ப பணத்திற்காக மனிதர்கள் கொத்தடிமையாக்கப்பட்டு, துயரத்தில் உழல்கிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. செய்தித்தாள்களில் அவ்வப்போது கொத்தடிமை மீட்புச் செய்திகளைப் படித்துக் கடந்துவிடுகிறோம். ஆனால், அவர்கள் அவ்வாறு சிக்கிக்கொள்ள என்ன காரணம் என்பதுகுறித்து விரிவான விவாதம் நமது சூழலில் உருவாகவில்லை. அப்படி உருவாகும் பட்சத்தில்தான், அரசு செயல்பாடுகளை விரைவுபடுத்தும். ஆனால், இப்போதும் புதிய கொத்தடிமைகள் உருவாக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

Brick kiln
Brick kiln

ராணிப்பேட்டை அருகில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமையாக வைத்திருந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்களை அதிகாரிகள் விடுவித்திருக்கின்றனர். இப்போது அவர்கள், மீண்டும் சுதந்திரக் காற்றை சுவாசித்துவருகிறார்கள். இந்த விடுவிப்பு என்பது சட்டென்று ஒருநாளில் நடந்தது அல்ல. இதற்காக முழு ஈடுபாட்டுடன் இயங்கும் தன்னார்வலர்களின் பங்கு முக்கியமானது. 'கொத்தடிமை விடுவிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வு சங்க'த்தின் சம்பத்திடம் பேசினோம்.

"மகாபலிபுரத்தில், மாசி மாதத்தில் நடக்கும் திருவிழாவில் பெருமளவில் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூடுவார்கள். அங்கு நாங்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, `உங்களுக்குத் தெரிந்தவர்களோ, நீங்களோ கொத்தடிமையாக நிர்ப்பந்திக்கப்பட்டால், எங்களிடம் தெரிவியுங்கள்’ என்று எங்களின் தொடர்பு எண்களைக் கொடுப்போம். எனவே, எங்களின் எண்கள் பலரிடம் இருக்கும். அதோடு, நாங்களும் பல ஊர்களுக்கு களப்பயணம் சென்றும் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவோம்.

அப்படிக் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான், சண்முகம் குடும்பத்தினர் ராணிப்பேட்டை அருகில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதை அறிந்தோம். அந்தத் தகவலின் உண்மைத்தன்மையை அறிந்துகொண்டோம். இது எங்களின் வழக்கமான நடைமுறை.

Bonded Labours
Bonded Labours

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தைச் சேர்ந்த சண்முகம் குடும்பத்தினரும், அவரின் உறவினரான ரமேஷ் குடும்பத்தினரும் (இவர்கள் உத்திரமேரூர் அருகில் உள்ள மானாமதியைச் சேர்ந்தவர்கள்) தங்கள் குடும்பக் கஷ்டத்திற்காக ஒரு புரோக்கர் மூலமாக ரூபாய் 55,000 பெற்றனர். அதனால், ராணிப்பேட்டை செங்கல் சூளைக்கு வேலைக்கு அனுப்பப்பட்டனர். அதன் உரிமையாளர் பார்த்திபன், இவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாமல், கடுமையாக வேலை வாங்கியுள்ளார். இதில், எட்டு வயது சிறுவனும் அடக்கம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் குடும்பங்கள் கடனாகப் பெற்றது 55,000 ரூபாய்தான். ஆனால், வேறு ஒருவர் வாங்கிய தொகையையும் இவர்கள் கணக்கில் சேர்த்து 1,06,000 ரூபாய் கொடுக்க வேண்டும் எனச் சொல்லியுள்ளனர். வாரச் சம்பளமாக எல்லோருக்கும் சேர்த்து 500 அல்லது 600 மட்டுமே கொடுத்துள்ளனர். அவர்கள் தங்குவதற்கு, அந்த எல்லைக்குள் சின்னச்சின்ன வீடுகளை ஒதுக்கிக்கொடுத்துள்ளனர். அவற்றை வீடு என்றே சொல்ல முடியாது. கூரையாக சிமென்ட் ஷீட் போட்டிருப்பதால், கடுமையான வெப்பம் கீழே இறங்கும். சில இடங்களில் உடைந்திருப்பதால், மழை பெய்தால் உள்ளே ஒழுகும். மிகச் சிறிய அறை என்பதால், நெருக்கியடித்துக்கொண்டுதான் படுக்கமுடியும். இந்தக் கொடுமையை ஒரு வருடத்திற்கு மேலாக அனுபவித்துவந்திருக்கின்றனர். அந்தப் பையன் பள்ளிக்குச் செல்ல முடியாமல், குழந்தைத் தொழிலாளியாக்கப்பட்டான்.

Rescued Bonded Labours
Rescued Bonded Labours

இவர்களைப் பற்றி எங்களுக்குக் கிடைத்த தகவலை, வேலூர் மாவட்ட உதவி ஆட்சியரிடம் நேரில் சென்று மனுவாகக் கொடுத்தோம். அதன் அடிப்படையில், சில நாள்களுக்கு முன் குழுவாகச் சென்று அக்குடும்பத்தினர் மீட்கப்பட்டனர். சூளை முதலாளி கைதுசெய்யப்பட்டார். மீட்கப்பட்டவர்களின் கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடிசெய்யப்படும். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தலா 20,000 ரூபாய் தொழிலாளர் துறை மூலமாக அரசு அளிக்கும். அடுத்து ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்படும்" என்றார் சம்பத்.

தன்னார்வலர்கள், தங்களால் முடிந்த உழைப்பைச் செலுத்தினாலும் அரசு முழு வீச்சோடு இவ்விஷயம் குறித்து இயங்கினால் மட்டுமே, கொத்தடிமை இல்லாத நிலை ஏற்படும். கொத்தடிமைகளை மீட்பது என்ற அளவில் அதன் செயல்பாடுகள் இல்லாமல், ஒரு குடும்பம் ஏன் கொத்தடிமையாக்கப்படும் நிலையை நோக்கிச் செல்கிறது என்பதற்கான காரணங்களைக் கண்டறிவதிலும் அக்கறைசெலுத்த வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு