Published:Updated:

தென்பெண்ணை: மீண்டும் மணல் குவாரி; வாழ்வாதாரம் பாதிப்பு? கொந்தளிக்கும் மக்கள்; கண்டுகொள்ளாத அரசு!

எல்லீஸ் சத்திரம் தடுப்பணை
News
எல்லீஸ் சத்திரம் தடுப்பணை ( தே.சிலம்பரசன் )

குவாரி அமைக்க போவதாக சொல்லும் இடத்திற்கு 50 மீட்டரிலேயே குடியிருப்புகள் இருக்கிறது. எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டை வரைபடத்திலேயே இவர்கள் காட்டவில்லை. திரைப்படம் ஒன்றில், "கிணத்தை காணோம்" என்பதுபோல, "நாங்கள் அணையை காணோம்" என்றுதான் புகார் அளிக்க வேண்டும் போல. - காசிலிங்கம்.

தென்பெண்ணை: மீண்டும் மணல் குவாரி; வாழ்வாதாரம் பாதிப்பு? கொந்தளிக்கும் மக்கள்; கண்டுகொள்ளாத அரசு!

குவாரி அமைக்க போவதாக சொல்லும் இடத்திற்கு 50 மீட்டரிலேயே குடியிருப்புகள் இருக்கிறது. எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டை வரைபடத்திலேயே இவர்கள் காட்டவில்லை. திரைப்படம் ஒன்றில், "கிணத்தை காணோம்" என்பதுபோல, "நாங்கள் அணையை காணோம்" என்றுதான் புகார் அளிக்க வேண்டும் போல. - காசிலிங்கம்.

Published:Updated:
எல்லீஸ் சத்திரம் தடுப்பணை
News
எல்லீஸ் சத்திரம் தடுப்பணை ( தே.சிலம்பரசன் )

கர்நாடக மாநிலத்தில் உருபெரும் பெண்ணை ஆறு, 430 கி.மீ தூரம் பயணித்து வங்க கடலில் கலக்கிறது. இதில், விழுப்புரம் - கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 106 கி.மீ பாய்ந்து செல்கிறது. எனவே, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கும், மக்களுக்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது தென்பெண்ணை. 

இந்த ஆற்றின் குறுக்கே ஏற்கனவே ஆறு தடுப்பணைகள் இருந்த நிலையில், கடலுக்கு வேகமாக செல்லும் தண்ணீரை தடுத்து ஏரிகளுக்கு திருப்பவும், நிலத்தடி நீரை செரிவூட்டவும் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் விழுப்புரம் - கடலூர் மாவட்டங்களுக்கு (தளவானூர் - எனதிரிமங்கலம்) இடையே 25.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது. 

உடைந்த தளவானூர் தடுப்பணை மற்றும் எல்லீஸ் தடுப்பணை
உடைந்த தளவானூர் தடுப்பணை மற்றும் எல்லீஸ் தடுப்பணை

அப்போதைய அமைச்சர் சி.வி.சண்முகத்தால் 2020-ம் ஆண்டு அக்டோபரில் திறந்து வைக்கப்பட்ட அந்த தடுப்பணை, அடுத்த மூன்று மாதத்திலேயே உடைந்துப்போனது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகும் தடுப்பணை விவகாரத்தில் கவனம் செலுத்தாமல் போனதால், 2021-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி அணையின் மற்றொரு பகுதி உடைந்து சரிந்தது. அதேபோல், இதே தென்பெண்ணை ஆற்றில்... தளவானூர் அணைக்கு முன்னதாக அமைந்துள்ள சுமார் 70 ஆண்டுகள் பழமையான எல்லீஸ் சத்திரம் தடுப்பணையும் 25.10.2021 அன்று உடைந்தது.

அப்போது, நம்மிடம் பேசியிருந்த விழுப்புரம் மாவட்ட விவசாய சங்க தலைவர் கலிவரதன், "இந்த அணைக்கு உட்பட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், முன்பு மணல் குவாரி செயல்பட்டபோது அளவுக்கு அதிகமாகவே மணல் அள்ளப்பட்டுவிட்டது. அதன் விளைவாகத்தான் தற்போது அணைக்கட்டின் அடித்தளம் வழியே நீர் வெளியேறி, உடைந்தது" என்று அதிர்ச்சியான தகவலை போட்டுடைத்தார்.

இந்த எல்லீஸ் சத்திரம் தடுப்பணை உள்ள ஏனாதிமங்கலம் ஊராட்சியின் ஆற்றுப்பகுதியிலேயே மீண்டும் மணல் குவாரி அமைக்கப்போவதாக, கடந்த ஜூன் மாதம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது பெருவாரியான மக்கள் புதிய மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

மேம்பாலம் பாதிக்கப்படும் அளவிற்கு அரிப்பு ஏற்பட்ட எல்லீஸ் சத்திரம் தடுப்பணை பகுதி
மேம்பாலம் பாதிக்கப்படும் அளவிற்கு அரிப்பு ஏற்பட்ட எல்லீஸ் சத்திரம் தடுப்பணை பகுதி
தே.சிலம்பரசன்

இந்நிலையில், அதே பகுதியில் 11 ஹெக்டர் பரப்பளவில் மணல் குவாரி அமைப்பதற்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் 'சுற்றுச்சூழல் தடையின்மை சான்று' வழங்கியுள்ளது. இதனை, விழுப்புரம் நீர்வளத்துறை (சுரங்கவியல் மற்றும் கண்காணிப்பு கோட்டம்) கடந்த மாதம் நாளிதழ்களில் செய்தியை வெளியிட்டது. அரசின் இந்த செயல் அப்பகுதி மக்களையும், விவசாயிகளையும் கொதிப்படையை செய்தது. 

இதற்கிடையில், கடந்த செப்டம்பர் மாதம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்த போது, எல்லீஸ் அணை சரி செய்யப்படாமல் இருந்ததால், அதனை ஒட்டியுள்ள மேம்பாலமும் இடிந்து விழும் அளவிற்கான பாதிப்புகள் ஏற்பட துவங்கின. பழைய எல்லீஸ் சத்திரம் அணைக்கு பதிலாக, புதிய தடுப்பணை கட்டப்படும் என கூறப்பட்டதால்... மேம்பாலத்தின் பாதுகாப்பு கருதி எல்லீஸ் சத்திரம் தடுப்பணை, வெடிவைத்து தகர்க்கப்பட்டது. அரசின் இந்த கொள்கை முடிவும், விவசாயிகளை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. 

அரசு வெளியிட்ட செய்தி, வெடி வைத்து தகர்க்கப்பட்ட தடுப்பணை
அரசு வெளியிட்ட செய்தி, வெடி வைத்து தகர்க்கப்பட்ட தடுப்பணை

எனவே, அரசு ஏனாதிமங்கலம் பகுதியில் மணல் குவாரி அமைக்க முற்படுவதை தடை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் 26.10.2022 அன்று மனு அளித்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர் விவசாய சங்கத்தினர். ஆனால், எவ்வித மாற்றமும் இன்றி அப்பகுதியில் மணல் குவாரியை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்... நேற்றைய தினம் ஏனாதிமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தீர்மானம் இயற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அப்பகுதியை சேர்ந்த மக்கள். மேலும், இந்தத் திட்டத்தை கைவிடவில்லை எனில் அடையாள அட்டைகளை ஒப்படைப்பது என பல போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சனை குறித்து ஏனாதிமங்கலம் பகுதியை சேர்ந்த காசிலிங்கம் என்பவரிடம் பேசினோம். "மாவட்ட ஆட்சியரின் கருத்து கேட்பு கூட்டத்திலும், ஆர்.டி.ஓ கூட்டத்திலும் இதற்காக கடும் எதிர்ப்பை தெரிவித்தோம். ஏனெனில், முன்பு மணல் குவாரி செயல்பட்ட போது அரசு அனுமதித்த அளவைவிட 30 அடி ஆழத்திற்கும், 5 கி.மீ நீளத்திற்கும் மணலை அள்ளி விட்டார்கள். அதனால் ஏற்பட்ட பாதிப்பில் தான் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு உடைந்தது. இந்த அணைக்கட்டை கட்டியதே எனக்கு தெரியும். இப்போது போல அக்காலத்தில் மெஷினரி கிடையாது என்பதால், உடல் உழைப்பால் 30 அடி ஆழத்திலிருந்து அடித்தளம் எழுப்பி தான் இந்த அணையை கட்டினார்கள். ஆனால், அதே ஆழம் வரையில் மணல் குவாரிகளில் மணல் அள்ளப்பட்டதால், ஆற்றில் வெள்ளம் வரும்போது தடுப்பணையில் அடித்தளத்தின் வழியே ஊற்றெடுத்து தான் அணை உடைந்துப்போனது. 

துவங்கிய குவாரி பணி, மக்கள் போராட்டம்
துவங்கிய குவாரி பணி, மக்கள் போராட்டம்

அதேபோல், மாரங்கியூர் பகுதியில் குவாரி செயல்பட்ட போது உயிரிழப்பு சம்பவங்களும் நிறையவே நடந்திருக்கிறது. இப்போது அதற்கு பக்கத்திலேயே ஏனாதிமங்கலம் பகுதியில் குவாரியை செயல்படுத்த போகிறார்கள். மணல் குவாரி அமைகிறது என்றால் அருகாமையில் 'நீர்பிடிப்பு பகுதிகளோ, குடியிருப்புகளோ 500 மீட்டருக்குள் இருக்கக் கூடாது' உள்ளிட்ட அரசின் விதிகள் இருக்கிறது. ஆனால், அவர்கள் குவாரி அமைக்க போவதாக சொல்லும் இடத்திற்கு 50 மீட்டரிலேயே குடியிருப்புகள் இருக்கிறது. எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டை வரைபடத்திலேயே இவர்கள் காட்டவில்லை. திரைப்படம் ஒன்றில், "கிணத்தை காணோம்" என்பதுபோல, "நாங்கள் அணையை காணோம்" என்றுதான் புகார் அளிக்க வேண்டும் போல. 

எங்க கிராமத்தில் ஏரி கிடையாது. இந்த ஆற்றின் மூலம் கிடைக்கும் ஊற்றுதான் எங்களுக்கு விவசாய பாசனம். ஆனால், இப்போது அது பாதிப்பாக்கி போய்விட்டது. மணல் அள்ளப்பட்டு ஆறு பள்ளமாகி போவதால், பல கிராம ஏரிகளுக்கு செல்லக்கூடிய வாய்க்கால்களில் சரியான நீர் செல்வதும் பாதித்துவிட்டது. மீண்டும் குவாரி அமைத்தால், அது மேலும் பாதிக்கப்படும். ஆறு பள்ளமாகி போனதற்கு, உயர்மின் கோபுரங்களின் அடித்தளங்களே ஆதாரமாக இப்போது வெளியில் தெரிகிறது. எனவே இந்த திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்" என்றார். 

காசிலிங்கம், கலிவரதன்
காசிலிங்கம், கலிவரதன்

விழுப்புரம் மாவட்ட விவசாய சங்க தலைவர் கலிவரதன், "மணல் குவாரியை ஏனாதிமங்கலத்தில் செயல்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அதேபோல், வெள்ளம் ஏற்படும் போது அப்பகுதியில் தண்ணீர் வேகம் அதிகரிக்கும் என்பதால், ஆற்றோர கிராமங்கள் மூழ்கும் அபாயம் இருக்கிறது. தடுப்பணை உடைந்துள்ளதால் 50-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் குவாரி அமைக்கப்பட்டால் இது மேலும் பாதிக்கப்படும். எனவே, மணல் குவாரியை ஏனாதிமங்கலத்தில் செயல்படுத்தக் கூடாது" என்றார் உறுதியுடன்.

மக்களுக்காக தான் அரசு செயல்படுகிறதா?