Published:Updated:

''பறை மூலமா என் வலிகளைக் கடக்கிறேன்!'' - 'சங்கர் தனிப்பயிற்சி மையம்’ தொடங்கியிருக்கும் கெளசல்யா

''பறை மூலமா என் வலிகளைக் கடக்கிறேன்!'' - 'சங்கர் தனிப்பயிற்சி மையம்’ தொடங்கியிருக்கும் கெளசல்யா
''பறை மூலமா என் வலிகளைக் கடக்கிறேன்!'' - 'சங்கர் தனிப்பயிற்சி மையம்’ தொடங்கியிருக்கும் கெளசல்யா

ணவப் படுகொலையால் தன் வாழ்க்கையை இழந்த கௌசல்யா, இப்போது புது வாழ்வைப் பெற்று அர்த்தமுள்ள பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். அவரின் சமீபத்திய முயற்சி, 'சங்கர் தனிப்பயிற்சி மையம்'. 

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கெளசல்யாவும் சங்கரும் காதலித்தனர். சங்கர் அட்டவணைப்பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களின் காதலை கௌளசல்யாவின் பெற்றோர் எதிர்த்தனர். அதையும் மீறி திருமணம் செய்துகொண்டு, தங்கள் வாழ்க்கைப் பயணத்தை மகிழ்வுடன் தொடங்கிய இந்த ஜோடியை சாதி அரக்கன் விடவில்லை. சென்ற ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி நடுவீதியில் வைத்து சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். கெளசல்யா பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். மக்கள் பலரும் சூழ்ந்திருக்க நடந்த இந்தப் படுகொலை, தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கெளசல்யா உறவினர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டு வழக்கு நடைபெற்றுவருகிறது.

கணவரின் இழப்பில் இருந்து மீண்டு வந்த கௌசல்யா, தன் கணவரை பலி வாங்கிய சாதிக்கு எதிரான போராட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தார். கெளசல்யா தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ள பல இளம் ஜோடிகள் ஆர்வம் கொண்டனர். முற்போக்கு கருத்துகொண்டோர், கெளசல்யாவை தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்று அரவணைத்தார்கள். இந்த இணைந்த கைகள் தரும் பலத்தால், துணிவோடு களத்தில் நிற்கும் கெளசல்யா, பொதுவெளியில் சாதிக்கு எதிரான தனது கருத்துகளைப் பதிவுசெய்து, பலருக்கும் ஊக்க சக்தியாக இருக்கிறார்.

''நான் தற்கொலை எண்ணத்தில் இருந்த நாள்களும் உண்டு. அதையெல்லாம் கடந்து வந்து இன்னைக்கு தன்னம்பிக்கையோட வாழ பலருக்கும் வழிகாட்டியா இருக்கிறது மனசுக்கு நிறைவா இருக்கு. 'சாதி ஒழிப்புப் போராளி' என்பதை என் அடையாளமா நினைக்கிறேன். அந்தப் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறேன். அதன் ஓர் அங்கமாதான், என் கணவரோட பெயர்ல 'சங்கர் தனிப்பயிற்சி மையம்' என்ற பயிற்சிப் பள்ளியைத் திறந்திருக்கேன். என் கணவரோட சொந்த ஊரான கொமரலிங்கம் என்கிற கிராமத்தில் இப்பயிற்சி மையத்தை நிறுவியிருக்கேன். இனிமே அந்த ஊரில் இருந்து சங்கர்கள் இழக்கிறதுக்கு இல்ல, எழுறதுக்கு கிளம்பி வரணும். 

நான் ஒரு ஊர்க்கார பெண்ணாதான் வளர்ந்தேன். பெரியார், அம்பேத்கரோட அரசியல், அவங்களோட கொள்கைகள் எல்லாம் சங்கரை இழந்ததுக்கு அப்புறம்தான் படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன். சாதி அரசியல் பற்றின விஷயங்களை ஒவ்வொண்ணா கத்துக்க ஆரம்பிச்சேன். பறை மூலமா என்னோட வலி அனைத்தையும் கடந்து வர முடியும்னு உணர்ந்தேன். சாதிதான் முக்கியம்னு நினைக்குறவங்களுக்கு எதிரா என்னோட பறை ஒலிக்க ஆரம்பிச்சது. என்னை மாதிரி, சாதியால் பாதிக்கப்பட்டதுக்கு அப்புறம்தான் சாதிக்கு எதிரா குரல் கொடுக்கணும்ங்கிறது இல்லை. இளம் தலைமுறைகிட்ட அதுகுறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தணும்னு முடிவு செய்தேன். 

இப்போ வளர்ந்து வர்ற குழந்தைகள் அம்பேத்கரையும், பெரியாரையும் முன்னோடியா எடுத்துக்கணும்னு விரும்பினேன். அதனால அவங்ககிட்ட இருந்து சாதி ஒழிப்பை ஆரம்பிக்கிறதுதான் முக்கியம். அதுக்காகத்தான் இந்த 'சங்கர் தனிப்பயிற்சி மையம்'. இங்க வாரத்தில் ஐந்து நாள்கள், பள்ளிக் குழந்தைகளுக்கு அவங்களோட பாடங்களுடன் சேர்த்து அம்பேத்கர், பெரியார் பற்றியும் கற்றுத்தர்றோம். அந்தந்த பாடத்துக்கான ஆசிரியர்களை நியமிச்சு பாடம் சொல்லிக் கொடுக்கிறோம். மற்ற இரண்டு நாள்களில் சிலம்பு, பறைனு தமிழ் கலைகளும் இந்தப் பள்ளியில் கற்றுக்கொடுக்கப்படும். 

எந்த ஒரு மாற்றம் கொண்டு வரணும்னு நினைச்சாலும் அதை முதல்ல நம்மகிட்ட இருந்து ஆரம்பிக்கணும்னு சொல்லுவாங்க. அதனாலதான் நான் அந்த மாற்றத்தை என் சங்கர் வாழ்ந்த மண்ணுல இருந்து ஆரம்பிச்சிருக்கேன். பயிற்சி மையத்தில் இப்போதைக்கு 20 பேர் சேர்ந்திருக்காங்க. இன்னும் நிறைய பேர் சேரணும்னு துண்டு பிரசுரமும் கொடுத்துட்டு இருக்கேன். சொல்ல மறந்துட்டேன்... இது எல்லாத்தையும் இலவசமாதான் செய்றோம். என் சம்பளத்தில்தான் இந்த முயற்சியை எடுத்திருக்கேன். லாபம் என் நோக்கம் இல்ல. சின்ன வயசுல இருந்தே சாதி ஒழிப்பு பற்றின தெளிவான பார்வையை குழந்தைகளுக்குள்ள விதைச்சு வளர்க்கணும் என்பதுதான் என்னோட லட்சியம். அவங்க மூலமா ஒரு நாலு பேர் திருந்துனா, இன்னொரு ஆணவக் கொலை நடக்காமத் தடுக்க முடியும்!" 

நீர் திரளப் பார்த்த கண்களில் இப்படி உறுதி திரண்டு பார்ப்பது மகிழ்வு தோழி!