Published:Updated:

’’மாதவிடாய் பற்றி பேசுங்கள்... நாப்கினை மறைத்து வாங்காதீர்கள்!’’- ஆர்.ஜே.பாலாஜி வேணுகோபால்

’’மாதவிடாய் பற்றி பேசுங்கள்...  நாப்கினை மறைத்து வாங்காதீர்கள்!’’- ஆர்.ஜே.பாலாஜி வேணுகோபால்
’’மாதவிடாய் பற்றி பேசுங்கள்... நாப்கினை மறைத்து வாங்காதீர்கள்!’’- ஆர்.ஜே.பாலாஜி வேணுகோபால்

’’மாதவிடாய் பற்றி பேசுங்கள்... நாப்கினை மறைத்து வாங்காதீர்கள்!’’- ஆர்.ஜே.பாலாஜி வேணுகோபால்

"சினிமா, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக இல்லாம, விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளின் வாயிலாக மக்களுக்குப் பயனுள்ள கருத்துகளை கொண்டுச் சேர்க்கணும்னு நினைப்பேன். அதன் ஒரு அங்கமாக நேற்று மாதவிலக்குப் பிரச்னையைப் பற்றி பேசினேன். என்னால் நேயர்களும், நேயர்களால் நானும் மாதவிலக்குப் பிரச்னை குறித்து நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டோம்" - உற்சாகமாகப் பேசுகிறார் ஆர்.ஜே.பாலாஜி வேணுகோபால். தான் தொகுப்பாளராக இருக்கும் 'ஹலோ எஃப்.எம்' பண்பலையின் 'ஹலோ தமிழா' நிகழ்ச்சியில் நேற்று மாதவிடாய் நிகழ்வு மற்றும் அத்தருணத்தில் பெண்களின் நிலைக் குறித்துப் பேசி, பல தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்றுவருகிறார்.

" 'ஹலோ தமிழா' நிகழ்ச்சியின் வாயிலாக தினமும் பல நடப்பு மற்றும் முக்கிய நிகழ்வுகளைப் பற்றி விழிப்புஉணர்வு நோக்கத்துல நேரடியா மக்கள்கிட்டப் பேசுவேன். சில நாள்களுக்கு முன்பு திருநெல்வேலியில் ஒரு சிறுமி தற்கொலை செய்துகிட்ட சம்பவம் என்னை ரொம்பவே பாதிச்சுது. ஏன்னா, அச்சிறுமியின் தற்கொலைக்கு உறுதிசெய்யப்படாத காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், மாதவிலக்குத் தருணத்திலிருந்த அச்சிறுமியின் டிரெஸ்ல உதிரப்போக்கு இருந்ததாகவும், அதனைப் பார்த்த ஆசிரியை 'உனக்கு சரியா நாப்கின்கூடப் பயன்படுத்தத் தெரியாதா?'னு சக மாணவர்கள் முன்நிலையில திட்டினதாகவும், அதனால் மனமுடைந்து சிறுமி தற்கொலை செய்துகொண்டதாகவும் சொல்லப்படுது. இக்காரணம் உண்மையா என்பது ஒருபக்கமிருக்க, ஆனால் அது சாதாரணமா கடந்துபோகிற காரணமும் இல்லை. பெண்களுக்கு இயற்கையா மாதம் தோறும் நிகழ்கிற விஷயமான மாதவிலக்குப் பற்றி இருபாலருக்குமே சரியான புரிதல் இல்லை. இதனால் பெண்கள் ரொம்பவே உடல் ரீதியாவும், மன ரீதியாவும் பிரச்னைகளை எதிர்கொள்கிறாங்க. 

'பெண்களே கூட்டத்தில் பேசத் தயக்குற இந்தப் பிரச்னையை, நீங்க எப்படி பேசினீங்க'னு பலரும் கேட்டாங்க. தயங்கிப் பேசியே, இப்போ வரை மாதவிடாயையும், நாப்கினையும் வெளிப்படையாகப் பேசத் தடைவிதிக்கப்பட்ட வார்த்தைகள் மாதிரி நினைச்சுக்கிட்டிருக்கிறோம். ஓர் ஆண் மெடிக்கல் ஷாப்புக்குப் போய் காண்டம் கொடுங்கன்னு தயங்கிக் கேட்கும் சூழலைப் போல, பெண்களும் நாப்கினைக் கேட்க வேண்டிய அவசியமில்லை. வாங்கிய நாப்கினை கறுப்பு கவர்ல மறைச்சு கொண்டுவரும் அளவுக்கு அது தீண்டத்தகாத அல்லது ஆபாசமான பொருளும் அல்ல. என் அம்மா, மனைவி, மகள் பயன்படுத்தும் அத்தியாவசியமான நாப்கின் அவங்க ஆரோக்கியத்தைக் காக்கும்போது, அப்படிக் கிடைக்கும் ஆரோக்கியம் உரிய முறையில் கிடைக்க குடும்பத் தலைவனாக கவனம் செலுத்த வேண்டியது என் கடமைனு உணர்கிறேன். நான் உணர்ந்த விஷயம், சமூகத்தில் சரியான புரிதல் இல்லாமப் போனதால் பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்படுறாங்க. அதை என் நிகழ்ச்சி வாயிலாக மக்களிடம் விழிப்பு உணர்வாகக் கொண்டுபோக நினைச்சதில் பலனும் கிடைச்சிருக்கு. அப்படி நேற்று பேசினதால, பல லட்சம் நேயர்கள் மாதவிடாயைப் பத்தி தெரிஞ்சுகிட்டாங்க. அவங்க மூலமாக இன்னும் பல லட்சம் பேருக்கு இந்த விஷயம் போய் சேர்ந்திருக்கும்" என்ற பாலாஜி நேயர்களிடம் உரையாடிய விஷயத்தைப் பகிர்கிறார்.

"இதுக்கு முன்பு மாதவிடாய் பத்தி தெரிஞ்சுகிட்டதைவிட, நேற்றைய நிகழ்ச்சியில பல ஆண், பெண் நேயர்கள்கிட்டப் பேசினதுல நிறைய விஷயங்களைக் கத்துக்க முடிஞ்சுது. பெரும்பாலான பெண்கள், தங்களோட வலிகளை வெளிப்படையாகப் பேச நினைக்கிறாங்க. ஆனா, அதை கேட்கத்தான் சக குடும்ப ஆண்கள், சில நேரங்கள்ல பெண்களேக்கூட தயாராக இருப்பதில்லை. சில முக்கியக் காரணங்களுக்காக மாதவிலக்கைத் தள்ளிப்போட நினைப்பது, வலி தாளாமல் தனிமையில் அழுவது, வீட்டில் பேச முடியாமல் இருப்பது, மத நம்பிக்கையை சொல்லித் தனிமைப்படுத்தப்படுறது, படிப்பில், வேலையில் கவனம் செலுத்த முடியாம போவதுனு தாங்கள் அனுபத்த வேதனைகளை, அனுபவங்களைச் சொன்னதைக் கேட்க கலக்கமா இருந்துச்சு.

குறிப்பா, அந்தச் சமயத்துல வலி மற்றும் உதிரப்போக்கு ஏற்படும் என்ற மேலோட்டமான விஷயங்களை மட்டுமேதான் பெரும்பாலான பெண்கள் தெரிஞ்சுவெச்சிருக்காங்க. இப்படி மாதவிலக்குப் பற்றி சரியான புரிதல் இல்லாம இருப்பதுதான் வேதனை. அப்படித்தான் பாளையங்கோட்டை ஆசிரியையும், இப்பிரச்னையில் சரியான புரிதல் இல்லாம இருந்திருக்கலாம்னு சொல்லப்படுது. மாதவிடாய் ஏன் வருது, அதுவும் பெண்களுக்கு மட்டுமே வரக் காரணம், இச்சூழல்ல ஆரோக்கியத்தை எப்படி பேணணும், எப்படி உடல் சோர்வை வலுப்படுத்தணும், இந்த மூன்று நாள்களும் தன் பிரதான செயல்பாடுகளை எப்படி சிக்கலின்றி கடக்கணும், எல்லாவற்றையும் மீறி இச்சமூகப் பார்வையிலிருந்து மூன்று நாள்களையும் கடப்பதற்கான முறையான, தெளிவான புரிதல் பல பெண்களுக்கு இல்லை. மிக இயல்பாக சக ஆண், பெண் சுற்றத்தாரின் ஒத்துழைப்புடன் கடக்க வேண்டிய இந்த நிகழ்வை, பல பெண்களும் கூனிக்குருகி, தயக்கத்துடனே கடக்க வேண்டிய அவசியம் ஏன்? அது வெளிப்படையா பேசக்கூடாத விஷயம் என்ற எண்ணம் பலர் மனதிலும் இருப்பதால்தான். டெக்னாலஜினு பல விஷயங்கள்ல முன்னோக்கிப் போயிட்டிருக்கிறோம். ஆனா, இன்னும் கிரமாப்புற மற்றும் மலைவாழ் பகுதிகள்ல மாதவிலக்கு நாள்கள்ல தீட்டுக் கழிக்கிறோம்னு சொல்லி தனிமையில தள்ளப்படுறாங்க. இப்படி இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறதால, பெண்ணாகப் பிறந்ததை நினைச்சு பலப் பெண்களும் வருத்தப்படுறாங்க. 

கலாசாரம் என்று சொல்லியே, மதம் மற்றும் வழிபாடு சார்ந்த நிகழ்வுகளில் மாதவிடாய் நிகழ்வில் இருக்கும் பெண்களை தீண்டத்தகாதவர்களாகச் சொல்லி ஒதுக்கியே வைக்கிறாங்க. எந்த மதமும், வழிபாட்டு நம்பிக்கையும் மனிதர்களை காயப்படுத்தவோ, உயிரை மாய்த்துக்கொள்ளத் தூண்டவோச் சொல்லல. எல்லாம் நம் அறியாமைதான். இச்சிக்கல் இனி இளைய மற்றும் வரும் தலைமுறைப் பெண்களுக்கு வராமல் இருக்க, ஒவ்வொரு பெற்றோரும்தான் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு மாதவிடாய் பற்றித் தெளிவாகச் சொல்லித்தரணும். நாப்கீன் பயன்பாட்டைப் பற்றியும், அச்சமயத்தில் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் காக்க வழிமுறைகளையும் தெளிவாகப் புகட்டணும். ஆண் பிள்ளைகளுக்கும்கூட மாதவிலக்கைப் பற்றிச் சொல்லலாம். தவறில்லை.

சமீபத்துல என் நிகழ்ச்சியில ஒரு பெண்ணின் ஆதங்கப் பதிவு என்னை கலங்கடிச்சுது. 'அதிகாலை வேலைக்குப் போயிட்டு நைட்டு வீட்டுக்கு வந்து வீட்டு வேலையைச் செய்துமுடிச்சு உடல் மற்றும் மன வலியோடு படுக்கப்போனால், கணவர் புணர்வுக்காக என்னைக் கட்டியணைக்க முயற்சிக்கிறார். அந்தத் தருணத்தில் என் உடலும் மனசும் ஒத்துழைக்கும் நிலையில இல்லைங்கிறதை நேரடியாவோ மறைமுகமாவோ வெளிப்படுத்தினாலும் கணவர் ஏத்துக்கமாட்டேங்கிறார். அதனால் பல வருஷங்களாவே, பிணம்போல அத்தருணத்தில் படுத்திருக்கேன்'னு அப்பெண் சொன்னதும் அதிர்ச்சியானேன். பசு மாடு கர்ப்பம் தரித்தத் தருணத்தில், வாசனை நுகர்வின் மூலமாக காளை மாடு பசுமாட்டின் பக்கத்திலேயே வராதாம். ஆனா, ஆறறிவு கொண்ட மனிதர்கள், சக மனிதர்களின் உணர்வுகளைப் புரியாததன் விளைவுதான் பலப் பிரச்னைகளின் வலியில் மேலும் அம்பை பாய்ச்சுற மாதிரி இருக்கு. அதுவே புணர்வுக்கு மறுக்கும் மனைவியின் உழைப்பு வலி உணர்வையும் மற்றும் மாதவிலக்கு வலிகளையும் உணர்ந்து, அன்பு காட்டி அந்த வலிக்கு தன்னாலான வலி நிவாரணியாக இருந்தால், கணவர் மேல் மனைவிக்கு கூடுதல் காதல் மலருமே. இதை ஏன் பெரும்பாலான ஆண்கள் உணர்வதில்லை 

அப்படி ஒவ்வொருத்தர் வீட்டிலயும் கழிப்பிட வசதி இருப்பது முக்கியம்னு சொல்ற மாதிரி, நாப்கினும் இருக்கணும். அது கறுப்புக் கவரில் யார் பார்வையும் படாம வாங்கிட்டு வந்து, பாத்ரூம்ல மஞ்சப் பையில அடைச்சு வெக்கப்படுற அளவுக்கு வெறுப்பானப் பொருள் அல்ல. நம் குடும்பப் பெண்களின் ஆரோக்கியம் சார்ந்த விஷயம். அதனால், மாதவிடாய்... சமூகத்தில் மூடி மறைக்க நினைக்கும் செயலாகவே பார்க்கப்படும் நிலை மாற வேண்டும். என் அம்மாவும், சகோதரிகளும் தங்கள் மாதவிலக்கு தருண வலிகளை எனக்குச் சொல்லிக்கொடுத்து வளர்த்திருக்காங்க. அதனால், தற்போது என் மனைவியின் மாதவிலக்கு வலியைக் கடக்க என்னால் ஆன அளவுக்கு வெளிப்படையா பேசி உதவுறேன். அந்தப் புரிதல் என் நண்பர் மற்றும் பல ஆண்களிடம் இருப்பதை வரவேற்கும் அதே வேளையில், எல்லா ஆண்களிடம் புரிதல் வரணும். அதனால் நம் வீட்டுப் பெண்கள் உடலளளவிலும், மனதளவிலும் தைரியமானவர்களாக இருக்கணும்!’’

பாலாஜியின் குரல் இன்னும் விழிப்படையச் செய்தால் நலம்!

அடுத்த கட்டுரைக்கு