Published:Updated:

‘ஜாலியாக வாழ பெங்களூரு வேலையை விட்டேன்!’ - சென்னையில் சிக்கிய ‘செக்ஸ் கிரிமினல்’ அறிவழகனின் பின்னணி

‘ஜாலியாக வாழ பெங்களூரு வேலையை விட்டேன்!’ - சென்னையில் சிக்கிய ‘செக்ஸ் கிரிமினல்’ அறிவழகனின் பின்னணி
‘ஜாலியாக வாழ பெங்களூரு வேலையை விட்டேன்!’ - சென்னையில் சிக்கிய ‘செக்ஸ் கிரிமினல்’ அறிவழகனின் பின்னணி

'ஜாலி வாழ்க்கைக்காக பெங்களூரில் பார்த்த மாதச் சம்பள வேலையை விட்டுவிட்டு சென்னை வந்தேன்' என்று சென்னையில் சிக்கிய செக்ஸ் கிரிமினல் அறிவழகன், கூலாக போலீஸிடம் சொல்லியுள்ளார். 

திருடர்கள் பலவிதம்... அதில் ஒவ்வொருவரும் ஒருவிதம். சமீபத்தில், சென்னை தனிப்படை போலீஸாரிடம் சிக்கிய அறிவழகன் என்ற திருடனின் கதையைக் கேட்ட போலீஸாருக்கே தலையைச் சுற்றியிருக்கிறது. சில நாள்களுக்கு முன், சென்னையில் தனியாக இருந்த ஒரு பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த திருடன், நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்ததோடு, அந்தப் பெண்ணிடமும் அத்துமீறியதாக போலீஸுக்கு புகார் வந்தது. பெண்ணின் எதிர்காலம் கருதி, ரகசியமாக அந்தப் புகாரை அடையாறு போலீஸ் துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரித்துவந்தனர். இந்தச் சூழ்நிலையில், வேளச்சேரியைச் சேர்ந்த வில்லியம்ஸ், அந்தப் பகுதியில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் வழிப்பறிசெய்துள்ளார். இதையடுத்து, அந்த மர்மநபரைப் பிடிக்க வாக்கி டாக்கியில் போலீஸாருக்கு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஒருவழியாக பைக்கில் சென்ற நபரை துரத்திப் பிடித்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, போலீஸாரிடம் சிக்கியவர் அறிவழகன், கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. தொடர்ந்து அறிவழகனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

யார் இந்த அறிவழகன்?

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அறிவழகன், பி.சி.ஏ பட்டதாரி. படித்து முடித்ததும் பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அந்த வேலை பிடிக்காமல் சென்னைக்கு வந்துள்ளார். சென்னையில் அம்பத்தூர், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி எனப் பல பகுதிகளில் வாடகைக்குக் குடியிருந்துள்ளார்.

மாதச் சம்பளத்தில் ஜாலியாக வாழ முடியாது என்று கருதிய அறிவழகன், திருட்டுத் தொழிலில் ஈடுபட முடிவுசெய்துள்ளார். அந்தச் சமயத்தில்தான், வடமாநிலத்தில் ஒரு திருடன், கொள்ளையடித்த வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய தகவலை செய்தித்தாள் மூலம் அறிவழகனுக்குத் தெரியவந்தது. அந்த ஸ்டைலில் வாழ ஆரம்பித்தார்.

சிக்கியது எப்படி?

வாடகைக்கு குடியிருக்கும் பகுதிகளிலேயே அறிவழகன் கைவரிசை காட்டத் தொடங்கியதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், “அறிவழகன் டிப்டாப்பாகவே எங்கும் செல்வார். அதனால், அவர் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. மேலும், எல்லோரிடமும் சகஜகமாகப் பழகியுள்ளார். அப்போது, பழகுபவர்களின் குடும்பப் பின்னணியைத் தெரிந்துகொள்வார். அதன்பிறகு, சம்பந்தப்பட்ட வீட்டில் பெண் மட்டும் தனியாக இருக்கும்போது, நைசாகப் பேசுவார். அதன்பிறகு, அந்தப் பெண்ணிடம் அத்துமீறி நடந்துவிட்டு, அங்குள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றுவிடுவார். காரியம் முடிந்ததும், வாடகைக்குத் தங்கியிருக்கும் இடத்தையும் உடனடியாகக் காலி செய்துவிடுவாராம். சம்பந்தப்பட்ட பெண்ணோ, தனக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பதோடு, போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுப்பதில்லை. இதனால் அறிவழகனின் அடுத்தடுத்த கிரிமினல் வாழ்க்கைக்கு வசதியாக அமைந்துள்ளது.

தற்போதுகூட, எங்களது விசாரணையில் அறிவழகனே நடந்த சம்பவத்தைச் சொல்லவில்லை என்றால், யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அறிவழகனால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் போலீஸிடம் புகார் கொடுக்கவில்லை. இதனால், அவரை திருட்டு வழக்கில்தான் கைதுசெய்துள்ளோம். அறிவழகன் தெரிவித்த தகவலின்படி, சம்பந்தப்பட்ட பெண்களிடம் ரகசியமாக விசாரணை நடத்தவும்  அறிவழகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

காதல் வலை

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "அறிவழகன், பெண்கள் விஷயத்தில் படுமோசமானவர் என்பது எங்களின் விசாரணையில் தெரியவந்தது. துருவித் துருவி விசாரித்தபோதுதான், திருடும் இடங்களில் தனியாக இருக்கும் பெண்களிடம் எல்லைமீறி நடந்த சம்பவம் தெரியவந்தது. முதலில், அந்தத் தகவலை நாங்கள் நம்பவில்லை. அறிவழகன் கூறுவதைப்போல 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கும் தகவலை முழுமையாக நம்ப முடியவில்லை. விசாரணையின் முடிவில்தான் உண்மை தெரியவரும். என்றாலும், அறிவழகன் தங்கியிருந்த இடங்களுக்கு தனிப்படை போலீஸார் சென்று விசாரணை நடத்திவருகின்றனர். அந்த விசாரணையின்போது அறிவழகன் குறித்த தகவல்களைச் சொல்ல முதலில் சிலர் தயக்கம் காட்டினர்.

பெண் போலீஸார் மூலம் அந்தப் பகுதியில் உள்ள பெண்களிடம் விசாரித்துவருகிறோம். அவர்களில் சிலர், பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையில் சில தகவலைச் சொல்லியுள்ளனர். அதன்அடிப்படையில் அறிவழகன் மீது அடுத்தகட்ட விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்கிடையில், அறிவழகனின் சொந்த ஊரான  கிருஷ்ணகிரியில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், படிக்கும்போதே சில பெண்களை காதல் வலையில் வீழ்த்திய தகவலும் கிடைத்துள்ளது. அந்தப் பெண்கள் யார் என்று விசாரணை நடந்துவருகிறது. மேலும், அறிவழகனின் செல்போன்களில் சில ஆபாச வீடியோக்கள் உள்ளன. அந்த வீடியோக்களில், அறிவழகனுடன் இருக்கும் பெண்கள் யார் என்ற விசாரணையும் நடந்துவருகிறது. அந்த வீடியோக்கள் வெளியில் கசிந்துவிடாமலிருக்க, போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பாதுகாப்பாக உள்ளது. மேலும், அறிவழகன் மட்டும்தான் இந்தப் படுபாதகச் செயல்களில் ஈடுபட்டாரா அல்லது வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது. 
  
 ஜாலியான வாழ்க்கை 

அறிவழகன், கொள்ளையடித்த நகைகள், செல்போன்கள் ஆகியவற்றை குறிப்பிட்ட சிலரிடம் விற்றுள்ளார். அவர்களிடமும் விசாரணை நடந்துவருகிறது. அதில் சிலர், தலைமறைவாக உள்ளனர். கொள்ளையடித்த பணத்தில்  ஜாலியாக வாழ்ந்துள்ளார். தினமும் சொகுசு வாழ்க்கை வாழ, வேலைக்கே செல்லாமல் கொள்ளையடிப்பதையே முழு நேரத் தொழிலாகச் செய்துவந்துள்ளார். அதில் கிடைக்கும் பணத்தை, உல்லாச வாழ்க்கைக்காக வாரி இறைத்துள்ளார்.

டிப்-டாப்பாக உடையணிந்துகொண்டு ஐ.டி கம்பெனியில் வேலை பார்ப்பதைப் போல, தங்கியிருந்த இடங்களில் சொல்லியுள்ளார். கை நிறைய பணம், புதுப்புது மொபைல் போன்கள் என பந்தாவாக வலம் வந்த அறிவழகனின் வலையில் பல குடும்பப் பெண்களும் வீழ்ந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதன்அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

அறிவழகனிடம் மணிக்கணக்கில் விசாரித்த பெயரைக் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர், "அறிவழகன் 50க்கும் மேற்பட்ட பெண்களிடம் அத்துமீறினாரா என்பதை ஆதாரம், புகார் இல்லாமல் வெளியில் சொல்ல முடியாது. இருப்பினும் விசாரணையின்போது அவரே அந்த தகவலைச் சொல்லியிருப்பதால் அதை நம்பாமலும் இருக்க முடியாது. அதுதொடர்பான விசாரணை நடந்துவருகிறது. விசாரணையின் முடிவில்தான் உண்மை தெரியும். 

37 ஆண்டுகளுக்குப் பிறகு...

தற்போது, வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் அறிவழகன் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்மீது 10 கிரிமினல் வழக்குகளும், ஓர் அடிதடி வழக்கும் பதிவாகியுள்ளன. மேலும், அவரிடமிருந்து பல லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. அறிவழகனை குண்டர் சட்டத்திலும் கைதுசெய்ய வாய்ப்பு உள்ளது" என்றார். 

சென்னையில், கடந்த 1980-ல் ரவுடி அகரம் நாராயணனின் பெயரைக் கேட்டாலே, பெண்கள் பீதி அடைந்துவந்தனர். அவர் கொள்ளையடிப்பதோடு, தனியாக இருக்கும் பெண்களைப் பாலியல்பலாத்காரம் செய்ததே இதற்குக் காரணம். இந்தச் சமயத்தில், அகரம் நாராயணன் கொலைசெய்யப்பட்ட பிறகே, பெண்கள் நிம்மதியடைந்தனர். அவர் பாணியில் செக்ஸ் கிரிமினல் அறிவழகன், 37 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் தனியாக இருந்த பெண்களின் வாழ்க்கையோடு விளையாடியுள்ளார். அறிவழகனுக்குக் கிடைக்கும் தண்டனை, மற்ற கிரிமினல்களுக்கும் பாடமாக அமைய வேண்டும் என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.