Published:Updated:

“வெளியில சொல்றதுக்கே வெட்கமா இருக்கு” - குமுறும் கோவை கோட்டை மேடு பெண்கள்!

“வெளியில சொல்றதுக்கே வெட்கமா இருக்கு” - குமுறும் கோவை கோட்டை மேடு பெண்கள்!
“வெளியில சொல்றதுக்கே வெட்கமா இருக்கு” - குமுறும் கோவை கோட்டை மேடு பெண்கள்!

“வெளியில சொல்றதுக்கே வெட்கமா இருக்கு” - குமுறும் கோவை கோட்டை மேடு பெண்கள்!

‘ஸ்மார்ட் சிட்டி' ஆகப்போகிறது என்று சொல்லப்படும் கோவையின் அசிங்கம் இது! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் மாநகராட்சி அலுவலகத்துக்கும் அருகிலேயே இருக்கும் கோட்டை மேடு பகுதியின் அவலம் இது! 

கோட்டை மேடு... கூலித் தொழிலாளர் குடியிருப்புகள் நிறைந்த பகுதி. கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. இங்குள்ள மக்களுக்கு ஒவ்வொரு நாளும் வேதனையோடுதான் விடிகிறது. இந்தப் பகுதி மக்களுக்கென இருந்த அறுபதுக்கும் மேற்பட்ட கழிவறைகள் இடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்றுவரை அவற்றைக் கட்டி முடிக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது கோவை மாநகராட்சி. ஆறு மாதத்துக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட கழிவறை கட்டடப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலையில், வயிறு முட்டினால் போக வழி தெரியாமல் திண்டாடுகிறார்கள் அப்பகுதி மக்கள்.

ஒன்றின் மீது ஒன்றாக உரசிக்கொண்டிருக்கும் குடியிருப்புகள் ஒவ்வொன்றும் பத்துக்குப் பத்து சைஸில்தான் இருக்கிறது. குட்டி குட்டியான சந்துக்குள் நுழைந்து உள்ளே சென்றால், 'இங்கெல்லாம் வாழுறது எப்பேர்பட்ட சாதனை!' என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. சாக்கடைக் கழிவுகளும் குப்பைகளும் நிறைந்திருக்கும் அந்தப் பகுதியில் வாழும் மக்களும் ஜி.எஸ்.டி வரி கட்டுகிறவர்கள்தாம்.

“ரெண்டு வருஷம் ஆச்சுங்க. இடிஞ்சு விழுற மாதிரி இருக்கு.... புதுசா கட்டப்போறோம்னு சொல்லி இங்கே இருந்த  டாய்லெட்டுகளையெல்லாம் இடிச்சுத் தள்ளினாங்க. ஆம்பளைங்களுக்கும், பொம்பளைங்களுக்கும் சேர்த்து மொத்தம் 63 டாய்லெட்டுகள் இருந்துச்சி. இங்க உள்ள நூத்துக்கணக்கான குடும்பங்கள் அதைத்தான் பயன்படுத்திக்கிட்டு இருந்தாங்க. இடிச்சிட்டு உடனே கட்டிக்கொடுத்திருவாங்கனு நெனைச்சோம். ஆனால், இடிச்சதோடு சரி... இந்தப் பக்கம் யாரும் எட்டிப்பார்க்கலை. ஆறுமாசத்துக்கு முன்னாடி கட்ட ஆரம்பிச்சாங்க. இன்னமும் கட்டிக்கிட்டுத்தான் இருக்காங்க. ரெண்டு நாள் கட்டட வேலை நடக்கும். இருபது நாள் நடக்காது. இப்படியே இழுத்தடிச்சிக்கிட்டு இருக்காங்க. 

டாய்லெட் இல்லாம நாங்க படுற அவஸ்தை சாதாரணமானது இல்லைங்க.... ஒரு கிலோமீட்டர் தூரத்துல உள்ள உக்கடத்துக்குத்தான் ஓடணும். ஆம்பளைங்களெல்லாம் வேலைக்குப் போற இடத்திலயோ, பஸ் ஸ்டாண்டு பக்கமோ போயிடுவாங்க. பொம்பளைங்க கதியை நெனைச்சுப் பாருங்க.... வயசுக்கு வந்த பொண்ணுங்களோட நிலைமையையெல்லாம் சொல்லவே முடியாது. மனசுக்குள்ள புழுங்கிக்கிட்டே இருக்குதுங்க. வெளியில சொல்றதுக்கே வெட்கமா இருக்கு. ஆனாலும், வேற வழி இல்ல... சொல்லித்தான் ஆகணும்.  இங்கு வாக்கப்பட்டு வரும் புதுப்பெண்கள் டாய்லெட் வசதி இல்லாததால பிரச்னை பண்ணி அவங்க அம்மா வீட்டுக்குப் போயிடுறாங்க. இல்லைனா புருஷனை மட்டும் கூட்டிக்கிட்டு வேறு ஏரியாவுக்குக் குடிபெயர்ந்திடுறாங்க. அவங்களோட கோபமும் நியாயமானதா இருக்கும் போது குடும்பத்தில உள்ள பெரியவங்களால் எதுவும் பேச முடியிறதில்லை. விடிஞ்சதும் எங்கே கக்கூஸ் போறதுனு தேடி ஓடுற வாழ்க்கையை எந்தப் பொண்னாச்சும் விரும்புமாங்க? ஒரு கக்கூஸ் எவ்வளவு பிரச்னையை உண்டு பண்ணும்னு அனுபவிச்சிப் பார்த்தாதாங்க தெரியும்” கமருநிஷாவின் வார்த்தைகளில் அத்தனை துயரம்.

''கக்கூஸ் இல்லாம ஒவ்வொரு நாளும் நாங்கள் சந்திக்கும் அவமானத்துக்கு அளவில்லைங்க. அடிப்படைத்தேவையான கக்கூஸைக்கூட உடனே கட்டித்தரமுடியாத அரசாங்கம் இருந்தா என்ன இல்லைன்னா என்னனு தோணுது. இந்த லட்சணத்துல கோயமுத்தூரை ஸ்மார்ட் சிட்டியா ஆக்கப்போறோம்னு சொல்லிக்கிறாங்க. கலெக்டர் ஆபீஸுக்குப் பக்கத்துல வாழுற மக்கள் கக்கூஸ் இல்லாம நாறுறதுதான் ஸ்மார்ட் சிட்டியா?'' ஆரம்பிக்கும்போதே வசந்தாவால் ஆதங்கத்தை அடக்க முடியவில்லை. “வீடு தேடி ஒரு விருந்தாளி வரமாட்டேங்குறாங்க. எங்களாலும் முகம்கொடுத்து வீட்டுக்குக்  கூப்பிட முடியலை.  'அங்க வந்தால் அவசர ஆத்திரத்துக்குக்கூட ஒதுங்க வழி இல்ல...  எப்படி எங்களை கூப்பிடுற'னு மூஞ்சிக்கு நேராவே கேக்குறாங்க. நாங்க என்னனு பதில் சொல்ல முடியும் சொல்லுங்க.  அதுமட்டுமல்ல... குழந்தைங்களை நேரத்துக்கு ஸ்கூலுக்கு அனுப்ப முடியலை. வயசானவங்களால ரொம்பதூரம் டாய்லெட்டைத் தேடிப் போக முடியல. இப்படி எக்கச்சக்கமான பிரச்னைகள் இருக்குது. எல்லாத்தையும் எப்படி சொல்றதுனு தெரியல. ஒவ்வொரு நாளும் நரக வேதனையா இருக்கு'' என்றார்.

அடுத்ததாகப் பேசிய காஜா நஜ்முதீன், “கழிவறை கட்டித்தருவது என்பது ஒரு சாதாரண காரியம். அதை ஏன் இழுத்தடிக்கிறார்கள் என்பது எங்களுக்குப் புரியவே இல்லை. இப்போதுகூட ஆண்கள் கழிவறையை மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறார்கள். பெண்கள் கழிவறைக்கு ஒரு செங்கல்லைக்கூட எடுத்து வைக்கவில்லை. அப்படியென்றால், அதிகாரிகளின் மெத்தனத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். திட்டமிட்டே எங்கள் பகுதியைப் புறக்கணிக்கிறார்களா... இல்லை கழிவறையில் பெரிய அளவில் கமிஷன் அடிக்க முடியாது என்பதால் காலம் தாழ்த்துகிறார்களா என்பது தெரியவில்லை. நாங்கள் புகார் கொடுக்கும்போது மட்டும் கட்டுவதுபோல பாவனை காட்டுகிறார்கள். அப்புறம் அப்படியே போட்டுவிடுகிறார்கள். இதற்குக் காரணமான அதிகாரிகள் வீட்டுக் கழிவறைகளுக்கெல்லாம் பூட்டுப் போட்டால்தான் எங்கள் வேதனை அவர்களுக்குப் புரியும்'' என்கிறார் கோபத்தோடு.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விளக்கம் கேட்டோம், “ஆண்கள் கழிப்பறை கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. விரைவில் திறந்துவிடுவோம். பெண்களுக்கான கழிவறைகளை ஒருசில மாதங்களில் கட்டி முடித்துவிடுவோம்'' என்கிறார்கள்.

'வாழுறதுதான் கஷ்டமுன்னு நெனைச்சேன் இந்த நாட்டுல பேளுறதைக்கூட கஷ்டமாக்கிட்டானுங்க....’ என்ற ஜோக்கர் பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது!

அடுத்த கட்டுரைக்கு