Published:Updated:

``பிச்சையெடுத்தாவது என் மகனை மருத்துவராக்க நினைத்தேன்... கனவு பலித்தது!’’ - பத்மஸ்ரீ சுபாஷினி மிஸ்திரி

``பிச்சையெடுத்தாவது என் மகனை மருத்துவராக்க நினைத்தேன்... கனவு பலித்தது!’’ - பத்மஸ்ரீ சுபாஷினி மிஸ்திரி
``பிச்சையெடுத்தாவது என் மகனை மருத்துவராக்க நினைத்தேன்... கனவு பலித்தது!’’ - பத்மஸ்ரீ சுபாஷினி மிஸ்திரி

``பிச்சையெடுத்தாவது என் மகனை மருத்துவராக்க நினைத்தேன்... கனவு பலித்தது!’’ - பத்மஸ்ரீ சுபாஷினி மிஸ்திரி

``சிகிச்சையளிக்க போதிய மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் என் கணவர் உயிரிழந்தார். அப்போது எனக்குத் தெரியாது, என் மகனை மருத்துவராக்கி, ஒரு மருத்துவமனை கட்டுவேன் என்று. `பிச்சையெடுத்தாவது என் மகனை மருத்துவராக்க வேண்டும்' என ஒருநாள் முடிவுசெய்தேன். வாழ்க்கை, கொடுமையாகத்தான் இருந்தது. நிறைய பசியைப் பொறுத்துக்கொண்டேன். இந்த மருத்துவமனைக்கு, பலரும் தங்களால் முடிந்த உதவியைச் செய்திருக்கிறார்கள்" கொல்கத்தாவில் உள்ள `Humanity Multi Speciality Hospital'-யை தொடங்கிய சுபாஷினி மிஸ்திரியின் வார்த்தைகள் இவை.

மருத்துவம் என்பது, நோய் காக்கும் சேவை என்பதை நிகழ்காலத்தில் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார் இவர். மேற்குவங்க மக்களும் ஊடகங்களும் பல ஆண்டுகளாகக் கொண்டாடிவரும் சுபாஷினி மிஸ்திரிக்கு, இந்த ஆண்டுக்கான பத்ம ஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டதும் நாடு முழுவதும் கவனம் பெற்றுவருகிறார்.

ஒவ்வோர் ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும்போதும் யாராவது ஒருசில `நிஜ நாயகர்கள்' வெளிப்படுவார்கள். வறுமை, சூழ்நிலைகள் இவையெல்லாம் சாதிப்பதற்கோ, சேவை செய்வதற்கோ ஒருபோதும் தடையாக இருக்காது என்பதை அவர்கள் உணர்த்துவார்கள். அவர்களில் ஒருவர்தான் சுபாஷினி மிஸ்திரி.

ஏழை விவசாயக் கூலியின் 14 குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தவர் இவர். கொல்கத்தாவுக்கு அருகில் உள்ள `குல்வா'தான் சுபாஷினியின் சொந்த ஊர். மூன்று வேளை உணவு கிடைப்பதே சிரமமான குடும்பத்தில் பிறந்த இவருக்கு, 12 வயதில் திருமணம். கணவரும் ஏழை கூலித்தொழிலாளி. சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தினார். திடீரென ஒருநாள், வயிற்றுவலியால் பரிதவித்தார் அவரின் கணவர். ஐந்து குழந்தைகளை வைத்துக்கொண்டு கணவரைக் காப்பாற்றப் போராடினார். கிராமத்தில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால், கொல்கத்தாவில் உள்ள   தலைமை மருத்துவமனைக்கு தன் கணவரை அழைத்துச் சென்றார்.  குடல் அழற்சி காரணமாக இறந்துபோனார் அவரின் கணவர். சாப்பாட்டுக்கே வழி இல்லாத சூழ்நிலையில், சுபாஷினி மிஸ்திரி ஒரு முடிவெடுத்தார். தன் மகன் அஜயை, எப்படியாவது மருத்துவர் ஆக்க வேண்டும். தன் கணவரைப்போல இந்தக் கிராமத்தில் வேறு எவரும் நோய் காரணமாக இறந்துவிடாதபடி ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும். காய்கறிச் சந்தையில் காய்கறி விற்றும், வீட்டுவேலைகள் செய்தும், செங்கல் சூளைகளில் செங்கல் சுமந்தும் தன் குழந்தைகளை நல்லமுறையில் வளர்த்து, அஜயை மருத்துவர் ஆக்கினார். பல வருட உழைப்புக்குப் பிறகு தன் பராசாத் கிராமத்தில் சிறிய நிலம் ஒன்றை வாங்கி, அதில் `Humanity Trust' என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து, கிராம மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க வழிசெய்தார்.

மருத்துவர்களிடம் பேசி தனது மருத்துவமனையில் இலவசமாக மருத்துவம் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். மக்களிடம் பேசி மருத்துமனைக்குத் தேவையான கட்டில்கள், தள்ளுவண்டிகள் போன்றவற்றை வாங்கினார். தனி ஒரு மனுஷியாக நின்று, பொதுமக்களின் நோய் பீடிக்காத வாழ்வுக்காக பலரிடமும் உதவிகள் கேட்டு, இலவச மருத்துவம் பெற வகைசெய்தார். தனது பல வருடக் கனவான மருத்துவமனையை, மேற்குவங்கத்தின் ஹன்ஜ்புகரில் 1996-ம் ஆண்டு கட்டி முடித்தார். மருத்துவரான அவரது மகன் அஜய் மிஸ்திரி, அந்த மருத்துவமனைக்கு மருத்துவரானார்.

இன்று தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து இலவசமாக மருத்துவம் பார்த்துக்கொள்ளும் இந்த மருத்துவமனை, தன் கிளையை சுந்தர்பனிலும் தொடங்கியுள்ளது. நோயற்ற வாழ்வை ஏழை மக்களுக்கு வழங்க இன்றும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் சுபாஷினி மிஸ்திரி. மருத்துவம் என்பது, பொதுவாக வசதிவாய்ப்பு உள்ளவர்களுக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. என்ன நோய் எனக் கண்டறியப்படும் முன்பே இறந்துபோகும் அவலங்கள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

சுபாஷினி மிஸ்திரி போன்றோர் நீட்டும் மனிதநேயக் கரத்தால், பல எளியவர்களின் பிணி குணமாக்கப்படுகிறது. மருத்துவம் என்பது, கிராமப்புற மக்களுக்கு வெறும் கனவாக மட்டுமே இருந்துவரும் நிலையில், நமது தேசத்துக்கு தற்போது தேவைப்படுவது அஜய் மிஸ்திரிகளும், அவர்களை உருவாக்கும் சுபாஷினி மிஸ்திரிகளும்தான்.

மனிதம் மாண்டுபோவதில்லை!

அடுத்த கட்டுரைக்கு