Published:Updated:

”தோழியிடம் தவறாக நடந்துகொண்டான்... தட்டிக்கேட்டேன்!” #SpeakUp

”தோழியிடம் தவறாக நடந்துகொண்டான்... தட்டிக்கேட்டேன்!” #SpeakUp
”தோழியிடம் தவறாக நடந்துகொண்டான்... தட்டிக்கேட்டேன்!” #SpeakUp

”தோழியிடம் தவறாக நடந்துகொண்டான்... தட்டிக்கேட்டேன்!” #SpeakUp

பாலியல் வன்முறைகளுக்கு எதிராக விகடன் முன்னெடுத்திருக்கும் #SpeakUp முயற்சிக்கு, சகோதரிகளும், சில சகோதரர்களும் அனுப்பிவரும் அனுபவக் கடிதங்கள் நிறைய நிறைய. சிறிய அளவில் கலைக்கப்பட்டிருக்கும் பெருமௌனம் ஒன்று, குற்றங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. சக பெண்களுக்கு, குற்றம் தடுப்பதற்கான தைரியத்தையும் ஆலோசனைகளையும் இந்தப் பெண்களின் வார்த்தைகள் தருகின்றன. உடைத்துப் பேசுவோம் தொடர்ந்து! 

நான் மதுரையில ஒரு தனியார் கல்லூரியில் படிக்கிற மாணவி. #SpeakUp - விகடனின் இந்த முயற்சியை ஆன்லைனிலும், அவள் விகடன் இதழ்லயும் பார்த்துட்டு வர்றேன். இதில் பகிர்ந்துக்க ஒவ்வொரு பெண்ணிடமும் அனுபவங்கள் இருக்கு என்பதுதான் உண்மை. அதுக்கான தைரியம் இருக்காங்கிறது கேள்வி. அந்த தைரியம் எனக்கு இப்போ வந்திருக்கு.


ஒருநாள் சாயங்காலம் ஆறரை மணி. காலேஜ் முடிஞ்சு தோழிகளோட கேலி, அரட்டைனு பேசி முடிச்சிட்டு, இன்னும் அரை மணி நேரத்துல நடக்கப்போறதைப் பற்றித் தெரியாம, பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தேன். பீக் அவர் கடந்திருந்ததால, பஸ் ஸ்டாப்பில் அவ்வளவா கூட்டம் இல்லை. எதேச்சையா திரும்பிப் பார்த்தப்போ, ஸ்கூல்ல என்னோட படிச்ச தோழி ஒருத்தி நின்னுட்டு இருந்தா. 'யேய்... எப்டி இருக்கடி!'னு சந்தோஷமா அவகிட்டபோய் நின்னேன். ஆனா, அவ எப்போதும்போல இல்லாம, 'ஹாய்'னு சம்பிரதாயத்துக்குச் சொல்லிட்டு அமைதியா நின்னா.  

தோழி முகத்துல கலவரம், பயம்னு எல்லாம் தெரிய, 'என்னடி ஏதாச்சும் பிரச்னையா?'னு கேட்டேன். அவ பதில் சொல்லாம, கண் ஜாடை மட்டும் காட்டினா. அவ கண்கள் காட்டின பக்கம், ரெண்டு பசங்க பைக்ல உட்கார்ந்திருந்தாங்க. 'யாரு அவனுங்க?'னு மெதுவான குரல்ல கேட்டேன். 'தெரியல, அசிங்க அசிங்கமா கமென்ட் அடிச்சிட்டு இருக்காங்க'னு சொன்னா. அப்புறம்தான் கவனிச்சேன், தோழியோட டிரெஸ் கலரையும், அவளோட அங்கங்களையும் குறிப்பிட்டு அசிங்கமா பேசிட்டு இருந்தாங்க. 'ரெண்டு பேரும் ஆட்டோ எடுத்துட்டு இங்கயிருந்து கிளம்பிடுவோமா?'னு கேட்டா. நாங்க ஒரு முடிவெடுக்கிறதுக்குள்ள, கண்ணிமைக்கும் நேரம்தான், அந்தப் பொறுக்கி சட்டுனு வந்து என் தோழியைத் தீண்டிட்டு, பகிர முடியாத வார்த்தைகள்ல ஒரு கமென்ட் அடிச்சான். தனக்கு என்ன நடந்துச்சுனு சுதாரிக்கவே என் தோழிக்கு நொடிகள் ஆக, முகத்தை மூடி அழ ஆரம்பிச்சுட்டா. எனக்கோ, அடுத்த நிமிஷம் என் கை என்கிட்ட இல்ல. என்னையும் அறியாம அவனைக்  கன்னத்துல ஓங்கி அறைஞ்சுட்டேன். 

பொதுவா, இந்த மாதிரி சமயங்கள்ல பிரச்னை பண்ணினவங்களை இப்படி அறையுறது நமக்குதான் ஆபத்துனு எல்லாப் பொண்ணுங்களையும்போலவே சின்ன வயசுல இருந்து சொல்லி வளர்க்கப்பட்டவதான் நானும். ஆனால், அந்த நொடியில அதெல்லாம் எதுவும் என் மூளையில் இல்ல. உணர்ச்சிகள் உள்ள ஒரு பெண்ணா மட்டும் எதிர்த்து நின்னுட்டேன். அவனும் சும்மாவிடலை. திருப்பி என்னை அறைஞ்சிட்டு, அசிங்கமா திட்டிட்டு, 'உன்னைக் கொலைபண்றேன் பாரு'னு மிரட்டிட்டு, அவன் ஃப்ரெண்டோட பைக்ல ஏறிப் போயிட்டான். 

இத்தனையும் நடந்தது ஒரு பஸ் ஸ்டாப்ல. அந்த அக்கிரமம் நடந்தப்போ அவன் சட்டையைப் பிடிக்க வராத அந்த ‘நாலு மனுஷங்க' , எல்லாம் முடிஞ்ச பின்னாடி, 'பொம்பளைப் பிள்ளைகளுக்கு எதுக்குமா தேவையில்லாத பிரச்னை? வீட்டுக்குக் கிளம்புங்க'னு சொல்ல மட்டும் வந்தாங்க. என் மனசில் பயம் வரலை, ஆத்திரம்தான் இன்னும் வடியாம இருந்தது. என் தோழியை ஒரு ஷேர் ஆட்டோவுல ஏத்திவிட்டுட்டு, நானும் வீடு திரும்பினேன். 

அன்னைக்கு நைட், என் நெருங்கிய ஃப்ரெண்ட்ஸ் சிலர்கிட்ட மட்டும் இதைப் பற்றிச் சொன்னேன். ரகம் ரகமா, விதம் விதமா ஒவ்வொருத்தரும் ரியாக்ட் செய்தாலும், மொத்தத்தில் அதோட அர்த்தம் ஒண்ணுதான்... 'நீ அறைஞ்சதனால அவன் திருந்திடுவானா? உனக்கு எதுக்கு இந்த வம்பு?' ஆனாலும், அன்னைக்கு எனக்கு ஒரு பெரிய விஷயம் புரிஞ்சது. இந்த உலகத்தில, பெண்ணா இருக்கிறதுக்கு எவ்வளவு வலிமையா இருக்கணும் என்பதும், நமக்காக நாமதான் போராடணும் என்பதும் புரிஞ்சது. 

உடனே, 'இவன் ஃபெமினிஸம் பேசுறா'னு பின் பண்ணாதீங்க. நான் உலகத்த மாத்த சொல்லலை. நம்ம உடம்புமேல மரியாதை உள்ள மனுஷியா, அதுக்கு ஒரு சீண்டல் நேர்ந்தா எதிர்க்கிற மனுஷியா வாழ்வோம். நம் மேல ஊரும் கைகளை உணர்சிகளற்ற ஜடமா ஊருக்காக அடக்கிட்டுப் பேசாம இருந்தது போதும் . #SpeakUp girls! தேவைப்பட்டா, slap! 

குறிப்பு: 'நான் மார்புல கை வைப்பேன், அதை எதிர்க்கக் கூடாது. அப்படி எதிர்த்து அறைஞ்சா, நான் திருப்பி அறைவேன், கொலை பண்ணுவேன்'னு மிரட்டிட்டுப் போயிருக்கிற அந்த ஆணின் கவனத்துக்கு. நான் இன்னும் அதே காலேஜ்லதான் படிக்கிறேன். முடிஞ்சத பார்த்துக்கோப்பா!

இதுவரை தன் மனதில் அழுத்திக்கொண்டிருந்த கனம் ஒன்றை முதன்முறையாக இங்கு இறக்கிவைத்திருக்கிறார் இந்தச் சகோதரி... இனியும் சகிக்க வேண்டாம் என்ற துணிவுடனும், இனி ஒருவருக்கு இது நேரக் கூடாது என்ற அக்கறையுடனும். இவர் யாரோ அல்ல, அம்மா, மனைவி, சகோதரி, மகள், தோழி என நாம் தினம் காணும் பெண்களின் பிரதி. அவர் மீது அநாகரிக வார்த்தைகள் உமிழ்ந்து, ‘இந்த உலகம் இப்படித்தான்' என்ற பிம்பம் தர வேண்டாம் ப்ளீஸ். இனி இதுபோல் நேராத உலகம் படைப்போம்! 

அடுத்த கட்டுரைக்கு