Published:Updated:

``நடந்ததை வீட்டில் சொல்ல அச்சம்... சைக்கிளை அடம்பிடித்து வாங்கினேன்!” #SpeakUp

``நடந்ததை வீட்டில் சொல்ல அச்சம்... சைக்கிளை அடம்பிடித்து வாங்கினேன்!” #SpeakUp
``நடந்ததை வீட்டில் சொல்ல அச்சம்... சைக்கிளை அடம்பிடித்து வாங்கினேன்!” #SpeakUp

``நடந்ததை வீட்டில் சொல்ல அச்சம்... சைக்கிளை அடம்பிடித்து வாங்கினேன்!” #SpeakUp

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விகடன் முன்னெடுத்திருக்கும் #SpeakUp முயற்சிக்கு, சகோதரிகளும்  சில சகோதரர்களும் அனுப்பிவரும் அனுபவக் கடிதங்கள் நிறைய நிறைய. சிறிய அளவில் களைக்கப்பட்டிருக்கும் பெருமௌனம் ஒன்று, குற்றங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. சக பெண்களுக்கு, குற்றம் தடுப்பதற்கான தைரியத்தையும் ஆலோசனைகளையும் இந்தப் பெண்களின் வார்த்தைகள் தருகின்றன. உடைத்துப் பேசுவோம் தொடர்ந்து! 

செல்லச் சண்டையில் அப்பா, அம்மாவை அடிக்க, அம்மா என்னை வலிக்காமல் அடித்து விளையாட என, இப்படி இனிமையாகச் சென்றது என் பால்யம். பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால், பள்ளியிலிருந்து அவர்களுக்கு முன்பாக வீடு திரும்பும் நேரங்களில், நான் எதிர்வீட்டில் காத்திருப்பது வழக்கம். அவர்களிடம் எனக்கான ஸ்நாக்ஸை கொடுத்துச் சென்றிருப்பார் அம்மா. 

அப்போது எனக்கு 10 வயது. எதிர்வீட்டில், அந்த அத்தை வெள்ளி, செவ்வாய் மற்றும் விசேஷ தினங்களில் கோயிலுக்குச் செல்லும்போது, நானும் மாமாவும் வீட்டிலிருப்பது வழக்கம். அவர் அப்போதெல்லாம் சாக்லேட், பிஸ்கட் என்று வாங்கித்தந்து, என்னுடன் விளையாடுவார். ஆனால், அந்நாள்களில் எல்லாம் விளையாட்டு என்ற பெயரில் அவர் என் உடலுக்கு நான் விரும்பாத ஏதோ ஒன்றைச் செய்தது புரிந்தது. ஆரம்பத்தில், அதுவும் ஒரு விளையாட்டு என்றே நினைத்தேன். அது தொடர்ந்தபோது, அவர் செய்வது தவறு என்பது புரிந்தது. 

ஒரு கட்டத்தில் என் அம்மாவிடம், 'அந்த மாமா என்னை இங்கயெல்லாம் தொடுறார்' என்றேன். அதிர்ந்துபோன என் அம்மா, அவரைத் திட்டிவிட்டு, 'சரி, இதை நீ யார்கிட்டயும் சொல்லிடாத. அப்பாகிட்டயெல்லாம் சொல்லிடவே கூடாது. நான் உன்கிட்டயும் ஒரு வீட்டுச் சாவி கொடுத்துட்டுப் போறேன். ஸ்கூல்விட்டு வந்ததும் நீ நம்ம வீட்டுலேயே வந்து இரு. கதவைப் பூட்டிக்கோ. டிவி பார்த்துட்டு, ஸ்நாக்ஸ் சாப்பிட்டு இருக்கலாம்' என்று இந்த மாற்று ஏற்பாடுகளை அவஸ்தையுடன் செய்துகொடுத்தார். 'ஏன் எதிர்வீட்டுல இருக்கட்டுமே...' என்று அப்பா கேட்டபோது, 'அவங்களுக்கு எங்கேயாச்சும் வெளிய போகவேண்டியது இருக்கும், நம்ம புள்ள எதுக்கு அவங்களுக்குத் தொந்தரவா இருந்துட்டு? 10 வயசு ஆகிடுச்சுல்ல, அவ தனியாயிருந்து பழகிக்குவா' என்று சொல்லிச் சமாளித்தார். 

தப்பு செய்த மிருகத்துக்கு எந்தத் தண்டனையும், ஒரு கண்டிப்புக்கூட கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட எனக்குக் கிடைத்த பரிசோ, பால்யத்தில் தனிமை. 'மானம் போய்விடும்' என்று நினைத்து, என் அம்மா ஒருவகையில் ஒரு குற்றவாளியைக் காப்பாற்றியுள்ளார் என்ற ஆற்றாமை என்னை வதைத்தது. அந்த ஆள், அதற்குப் பிறகு என் அப்பாவிடம் பேசுவான், என் அம்மாவையோ, என்னையோ நிமிர்ந்துபார்க்காமல் கடந்துவிடுவான். அன்றிலிருந்து 40 வயதுகளில் இருக்கும் ஆண்கள் என்றாலே பயம், சந்தேகம் என்றாகிப்போனது எனக்கு. 

அடுத்த சீண்டலை நான் எதிர்கொண்டது, எட்டாம் வகுப்பு படித்தபோது. பள்ளிக்கு மினி பஸ்ஸில் சென்றுவருவது வழக்கம். ஒருநாள், மிகுந்த நெரிசலான தினம் ஒன்றில், பின்னிருந்து என் இடுப்பைச் சுற்றியது ஒரு கை. அதிர்ந்த நான், அந்தக் கையிலிருந்து என்னை விடுவிக்க முயல, அவன் எடுப்பதாய் இல்லை. அப்போது என் வாயிலிருந்து ஒரு வார்த்தையோ, கூச்சலோ வராத அளவுக்கு நான் பலமற்றவளாய் இருந்தேன். யாராவது இதைக் கவனித்து, என்னைக் காப்பாற்ற மாட்டார்களா என்று அழுகையாக வந்தது. மறுநாள், இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலிருந்த பள்ளிக்கு சைக்கிளில்தான் போவேன் என்று வீட்டில் அடம்பிடித்து, சைக்கிளும் வாங்கிக்கொண்டேன். 

இப்போது எனக்கு 25 வயதாகிறது. எப்போது நான் எந்தப் பேருந்தில் ஏறினாலும், அங்கிருக்கும் பெண்களையெல்லாம் என் கண்கள் ஒருமுறை பார்க்கும். அவர்களெல்லாம் பாதுகாப்பாக நிற்கிறார்களா என்று மனம் தவிக்கும். இன்றும் எனக்கு ஆண்களிடம் பேசுவதற்கு பயமாகத்தான் இருக்கிறது. காதலிலும், திருமணத்திலும் நம்பிக்கையில்லாத மனநிலையில்தான் இருக்கிறேன். எனக்கு நியாயம் கேட்கத் தவறிய என் அம்மாவின் அந்தச் செயலால், என் பிரச்னைகளைப் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தையும் தொலைத்தேன். சில நேரங்களில் என்மீதே எனக்கு நம்பிக்கையில்லாமல்போகிறது. அனைத்துக்கும் காரணம், என் உடலுக்கு நடந்த அந்த இரண்டு அநீதிகள். சில நொடிகள் சபல இன்பம் தங்களுக்குக் கிடைக்க, ஒரு சிறுமியின் மனதில், பெண்ணின் வாழ்க்கையில் எத்தளவுக்கு ஆறாத ரணத்தைத் தந்திருக்கிறார்கள் அவர்கள்! 

ஒருவேளை நான் தாயானால், என் மகளுக்கு 'speakup, shout your harassment' என்பதைத்தான் முக்கியமாகக் கற்றுக்கொடுப்பேன். ஆண் குழந்தையாக இருந்தால், பெண்களுக்கு எப்போதும் பாதுகாவலனாக இருக்கவேண்டிய கண்ணியத்தைச் சொல்லி சொல்லியேதான் அவனை வளர்ப்பேன். அதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள, அவன் அம்மாவுக்கு நடந்ததையும் சொல்வேன்!

இதுவரை தன் மனதில் அழுத்திக்கொண்டிருந்த கனம் ஒன்றை முதன்முறையாக இங்கு இறக்கிவைத்திருக்கிறார், இந்தச் சகோதரி... இனியும் சகிக்க வேண்டாம் என்ற துணிவுடனும், இனியொருவருக்கு இது நேராக் கூடாது என்ற அக்கறையுடனும். இவர் யாரோ அல்ல, அம்மா, மனைவி, சகோதரி, மகள், தோழி என நாம் தினம் காணும் பெண்களின் பிரதி. அவர்மீது அநாகரிக வார்த்தைகள் உமிழ்ந்து, ‘இந்த உலகம் இப்படித்தான்' என்ற பிம்பம் தரவேண்டாம் ப்ளீஸ். இனி, இதுபோல நேராத உலகம் படைப்போம்!

அடுத்த கட்டுரைக்கு