Published:Updated:

30 நிமிடங்களில் 2 பாலியல் துன்புறுத்தல்கள்.. இந்தியாவில் பெண்கள் நிம்மதியாக இருக்கிறார்களா?!

30 நிமிடங்களில் 2 பாலியல் துன்புறுத்தல்கள்.. இந்தியாவில் பெண்கள் நிம்மதியாக இருக்கிறார்களா?!
30 நிமிடங்களில் 2 பாலியல் துன்புறுத்தல்கள்.. இந்தியாவில் பெண்கள் நிம்மதியாக இருக்கிறார்களா?!

இந்திய மோட்டார் வாகனச்சட்டத்தின்படி, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் வசூலிக்கப்பட வேண்டிய அபராதம் ரூ. 300. ஆனால், திருச்சி திருவெறும்பூரில் ராஜா என்பவரிடம் போலீஸ் வசூலித்தது அவரின் மனைவி உயிரையும், இன்னும் இந்த உலகத்தையே பார்க்காத கருவின் உயிரையும். இன்று நாம் சுதந்திர இந்தியாவில் மகளிர் தினம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். பிரதமர் தொடங்கி உள்ளூர் கவுன்சிலர்வரை எல்லாரும் பெண்களுக்கு வாழ்த்துகளைக் கூறுகிறார்கள். ஆனால், ஓர் ஆணாக வாழ்த்துகளைக் கூற நமக்கு என்ன தகுதி இருக்கிறது? இந்தியாவில் ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் இரண்டு பெண்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிக் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 39 என்ற எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது என்கிறது தேசியக் குற்றப்பிரிவு ஆணையம். 

ஆறு வயதுக் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் கொடுமை இந்த நாட்டில்தான் நடக்கும். டெல்லி உள்பட நாட்டின் பெருநகர வீதிகளில் இன்னமும் தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் என்னென்ன? அவை எவ்வளவு மோசமானவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. 2016-ல் தேசியக் குற்றப்பிரிவு ஆணையத்தின் தகவல்படி, காவல்துறையினருக்கு எதிராக பதிவான வழக்குகள் 3,082. அவற்றில் மனித உரிமை மீறல் வழக்குகள் மட்டும் 209 என்று தெரியவருகிறது. இவையெல்லாம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மட்டுமே. இன்னும் எத்தனையோ பேர் தேவையற்ற வாதங்களுக்கு பயந்து அமைதியாகப் போகும் சூழல் இந்த நாட்டில் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.

இந்தியாவில் பெண்கள் வாழ்வதற்குப் பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியலில் நாட்டின் தலைநகர் டெல்லி முன்னிலை வகிக்கிறது. மஹாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அடுத்தடுத்து நடந்துவருகின்றன. மாநிலத்தின் பரப்பளவைப் போன்றே உத்தர பிரதேசத்தில் மக்கள் தொகையும் அதிகம். அதேபோல் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகம் என்கிது இந்த அமைப்பு. இந்தியக் குடிமக்களில் ஒருவருக்கு ஏதாவதொரு பிரச்னை என்றாலும், அதற்கு ஒட்டுமொத்தச் சமூகமும் பொறுப்பேற்க வேண்டியது கடமைதானே. சென்ற ஆண்டைவிட, இந்தாண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது என அறிக்கை வாசித்துக்கொண்டிருக்கிறோம்.

'மேற்கத்திய கலாசாரம்தான் இதற்கெல்லாம் காரணம்' எனக் கொடி தூக்கும் கலாசார காவலர்களிடம் ஒரு கேள்வி. மேற்கத்திய நாடுகளில் அதிபருக்கு எதிராகவும், பிரபலங்களுக்கு எதிராகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கத் தொடங்கிவிட்டனர் மக்கள். #MeToo பதிவுகள் குற்றம் செய்தவர்களைப் பதறவைக்கிறது. ஆனாலும், பல்வேறு சூழ்நிலைகளில் இந்தியாவின் பல இடங்களிலும் இன்னமும் குர்மித் ராம்ரஹீம் சிங், தஸ்வந்த் போன்றவர்கள் மூலம் வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது வேதனையளிக்கக்கூடிய உண்மை. 

இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு ஆளும் அரசையோ அல்லது இதற்கு முன்பு இருந்த அரசுகளையோ காரணமாகக் கைகாட்டிக் கொண்டிருப்பதில் எந்தவித அர்த்தமுமில்லை. வாய்ச்சொல் வீரர்களாகவும், மேடைப் பேச்சாளர்களாகவும் இருப்பவர்கள், பெண்கள் முன்னேற்றம், பெண் கல்வி, மகளிர் மேம்பாடு ஆகியவற்றை வார்த்தைகளில் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாலியல் துன்புறுத்தல்கள்https://www.vikatan.com/news/coverstory/117687-an-open-letter-on-the-continuing-oppression-of-women-in-the-name-of-sexual-abuse.html, அதனைத் தொடர்ந்த கொலை செய்யப்படும் சம்பவங்கள், ஆணவக்கொலைகள் என இந்தியாவில் மகளிரின் வாழ்க்கை வலிகள் நிறைந்ததாகவே இருந்துகொண்டிருக்கிறது. 

கிரிக்கெட் வீரர் விராட் கோலி சதமடிக்காமல் போனால் அனுஷ்கா சர்மாவை விமர்சிக்கத்தெரியும். நடிகை ப்ரியா வாரியரின் கண் சிமிட்டல்களை சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக்கத் தெரியும். ஓவியா போன்றவர்களுக்கு ஆர்மி அமைக்கத் தெரியும். மாணவி அனிதா மரணத்துக்குப் பின்னரும் நீட் தேர்வில் உறுதியான நிலைப்பாட்டை நம்மால் எடுக்க முடியாது. 2012-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற நிர்பயா சம்பவத்திற்குப் பிறகு, ஆயிரம் நிர்பயாக்களை கடந்துவிட்டோம். பொதுவெளியில் தற்போதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை.

இந்தியா முழுவதிலும் 70 சதவிகிதத்துக்கும் அதிகமான பகுதிகளில் பி.ஜே.பி. ஆட்சி செய்து வருகிறது. இது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், பிஜேபி ஆளும் மாநிலங்களில்தான் இந்தியாவில் நடக்கும் பெண்களுக்கு எதிராக 70 சதவிகிதக் குற்றங்களும் நடக்கின்றன என்பது நிதர்சனமான உண்மை. இந்தியாவின் பெருமையை வெளிநாடுகளில் உரக்கக்கூறும் பிரதமருக்கு, நம் நாட்டில் நடக்கும் மகளிருக்கு எதிரான குற்றங்களைப் பற்றித் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.

'ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு சமூகமே கல்வி கற்றதற்குச் சமம்' என்று புகழ்ந்துபேசும் நம் நாட்டில்தான் மேல்நிலைக்கல்வி இறுதித்தேர்தவில் 1,200-க்கு 1,176 மதிப்பெண் எடுத்த நிலையிலும், அனிதா என்ற மாணவியால் மருத்துவக் கல்வியில் சேர முடியாமல், அந்த மாணவி தற்கொலை செய்து கொள்கிறாள்.  கல்பனா சாவ்லாக்களையும், முத்துலட்சுமி ரெட்டிகளையும் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம் போகிற போக்கில் பல பெண்களின் கனவுகளைச் சிதைத்து விடுகிறோம்.

'ஆட்சியாளர்கள் சரியில்லை; பணியிடம் சரியில்லை; பொதுவெளி சரியில்லை'  என்றால் பாரதி கண்ட புதுமைப்பெண்களுக்காக எல்லாம் வேண்டாம் - இன்று இந்தியாவில் இருக்கும் 48 சதவிகித பெண்களுக்காகவாவது 'புதியதோர் உலகம் செய்வோம்'. தனி மனிதனிடம் இருந்துதான் மாற்றங்கள் தொடங்க வேண்டும். அது, சாத்தியமாகும்வரை போராடுவோம். இந்தியாவில் ஒரு பெண், நள்ளிரவில் கூட வேண்டாம் பகலில் இந்தச் சமூகத்தால் எந்தத் தொந்தரவும் இல்லாமல் தைரியத்தோடு வலம்வருவதற்கான மாற்றத்தை ஏற்படுத்துவோம்!