Published:Updated:

கொடுமையின் உச்சத்தில் உன்னாவ் பாலியல் வன்முறை வழக்கு! #BhajpaSeBetiBachao

பாலியல் வன்முறையும், அரசியல் ஆதிக்கமும் ஒன்று சேர்ந்தால், ஒரு பெண்ணுக்கு எத்தகைய கொடுமைகள் நடக்கும் என்பதற்கு மிக மோசமான உதாரணம்... உன்னாவ் பகுதியில் நடந்த பாலியல் வன்கொடுமை.

கொடுமையின் உச்சத்தில் உன்னாவ் பாலியல் வன்முறை வழக்கு! #BhajpaSeBetiBachao
கொடுமையின் உச்சத்தில் உன்னாவ் பாலியல் வன்முறை வழக்கு! #BhajpaSeBetiBachao

PC: thestatesman.com

லித்துவிட்டது... இந்தச் சமூகத்தில் நிலவும் பாலியல் வன்கொடுமை பற்றி எவ்வளவு எழுதினாலும், தீர்வே இல்லாமல் எழுதிக்கொண்டே இருக்கவேண்டுமோ என்ற அச்சத்திலும் விரக்தியிலும் சலித்தேவிட்டது. ஆனாலும், இப்போதும் எப்போதும்போல பேசவேண்டிய நிர்ணயத்தில் நாம் இருக்கிறோம்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையும், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கண்ணாமூச்சி ஆடும் அரசியல் ஆதிக்கமும் ஒன்று சேர்ந்தால், எத்தகைய கொடுமைகள் நடக்கும் என்பதற்கு மிகமோசமான உதாரணம்... உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் நடந்த பாலியல் வன்கொடுமை.

2017 ஜூன் மாதம் தொடங்கிய வழக்கு இது. அந்தப் பெண் தன் உறவினருடன் வேலை வாங்கித்தர உதவுமாறு, பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சென்கர் வீட்டுக்குச் சென்றபோது, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார். இது நடந்தது ஜூன் 4. பிறகு, ஜூன் 11-ம் தேதி, காணாமல்போகிறார். அவரின் குடும்பம் காவல்துறையில் புகார் அளிக்கிறது. சில நாள்களுக்குப் பிறகு, ஹரைய்யா (Auraiya) மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் கண்டுபிடிக்கப்படுகிறார். மறுநாள் அவரின் சொந்த ஊரான உன்னாவுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

உள்ளூர் நீதிமன்றத்தில் காவல்துறையால் ஒப்படைக்கப்படுகிறார் அந்த 18 வயது பெண். அவர் கூறிய வாக்குமுலத்தை, குற்றப் பிரிவு 164 கீழ், வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட அந்த எம்.எல்.ஏ  பெயரைக் காவல்துறை பதிவுசெய்ய அனுமதிக்கவில்லை என்று அந்தப் பெண் புகார் தெரிவித்தார். அடுத்த 10 நாள்கள் கழித்து, குடும்பத்துடன் அவரை இணைத்துவைக்கிறது. காவல்துறை தனக்குத் தொல்லைக் கொடுத்ததால், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தில் தொடர்ந்து புகார் அளித்துள்ளார். அந்த எம் .எல்.ஏ மீதும் அவரின் சகோதரர் அதுல் சிங்கின் மீதும் பாலியல் வன்முறை வழக்கு பதிவு செய்யுமாறு மூத்த காவல்துறை அதிகாரிகளிடம் போராடுகிறார். முட்டி மோதுகிறார். ம்ஹூம்... ஏமாற்றமே மிஞ்சுகிறது.

கிட்டதட்ட ஆறு மாதமாக வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி, அந்தப் பெண்ணின் தாய், உன்னாவ் தலைமை நீதிபதியிடம், குற்றப்பிரிவு 156 கீழ், முதல் குற்றப் பத்திரிகை பதிவு செய்யவேண்டி வழக்குத் தொடர்கிறார்.

PC: ANI

இந்த வழக்கில், அந்தத் தாயின் தரப்பை நீதிமன்றம் விசாரிக்கிறது. அவருடன் அந்தப் பெண்ணின் தந்தையும் இருக்கிறார். அதே நாள் மாலையில், குல்தீப் சென்கரின் சகோதரர் அதுல் சிங் மற்றும் அவருடன் இருந்த சிலர், அந்தத்  தந்தையை அடித்து உதைக்கின்றனர். பொய் வழக்கு போட்டு, அவரைக் காவல்துறை அழைத்துச் செல்கிறது. அந்த மாவட்ட மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், சிறையில் அடைக்கப்படுகிறார். குல்தீப்பின் சகோதரர்தான், தன் மீது பொய்யான வழக்கு பதிவுசெய்து, அடிக்கச் சொல்வதாக புகார் தெரிவிக்கிறார். ஆனால், அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஏப்ரல் 8-ம் தேதி, எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, லக்னோவில் உள்ள முதல்வர் வீட்டின் முன்பு, தீக்குளிக்க முயற்சி செய்கிறார் அந்தப் பெண். 9-ம் தேதி, அந்தப் பெண்ணின் தந்தை கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சில மணி நேரங்களில் உயிர் இழக்கிறார். இதைத்தொடர்ந்து 6 காவல்துறையினர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுல் சிங்கும் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது, இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். 

இனியேனும் அந்தப் பெண்ணுக்கு உரிய காலத்தில் நீதி கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.