Published:Updated:

குற்றவாளி என்று நிரூபணமான ஆசாராம் பாபுஜி வழக்கு கடந்து வந்த பாதை! #AasaramVerdict

குற்றவாளி என்று நிரூபணமான ஆசாராம் பாபுஜி வழக்கு கடந்து வந்த பாதை! #AasaramVerdict
குற்றவாளி என்று நிரூபணமான ஆசாராம் பாபுஜி வழக்கு கடந்து வந்த பாதை! #AasaramVerdict

கடந்த  2013-ம் ஆண்டு, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, ஜோத்பூர் அருகே இருக்கும் ஆசாரம் பாபுவின் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

PC: wikimedia.org

ரு பாலியல் வன்கொடுமை வழக்கில், அரசியல் செல்வாக்கும் பணபலமும் அதிகாரமும் உள்ள ஒரு நபரைக் குற்றம் சாட்டினால், அவர் அந்தச் சட்டத்தை எதிர்த்து எப்படியெல்லாம் ஆட்டம் போட முடியும் என்பதற்கு, 2013-ம் ஆண்டு ஜோத்பூரில் நடந்த 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு ஒரு சிறந்த  உதாரணம்!  ஆனால், அந்த  ஆட்டத்துக்கு தற்போது ஜோத்பூர் நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது என்பது அறத்தைப் பின்பற்றும் நம்மில் பலருக்கும் ஒரு ஆறுதல்!

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி ஜோத்பூரில் செல்வாக்குமிக்க சாமியார் ஆசாராம் பாபு! ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு, அந்தச் சிறைக்கே சென்று நீதிபதி மதுசூதன் ஷர்மா இந்த வழக்குக்கான தீர்ப்பை வழங்கியுள்ளார். அவர் வழங்கிய தீர்ப்பில், ஆசாராம் பாபு மற்றும் அவருக்கு உதவிய இருவரும் குற்றவாளிகள் என  நிரூபணமாகியுள்ளது.  ஆனால், கடந்த சில நாள்களாக, ஆசாராம் பாபு குற்றமற்றவர் என்றும், இந்த வழக்கே இந்து மதத்தை இழிவுபடுத்துவதற்காக நடத்தப்பட்ட சதித்திட்டம் என்றும் அவருக்கு ஆதரவாகச் சமூகவலைதளங்களில் குரல்கள் உயர ஆரம்பித்தன. இவ்வளவு விவாதத்தைக் கிளப்பிய அசாராம் பாபுஜி வழக்கு கடந்து வந்த பாதை இதோ... 

PC: PTI

கடந்த  2013-ம் ஆண்டு, ஆகஸ்ட்15-ம் தேதி,  உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஹ்ஜஹன்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, ஜோத்பூர் அருகே இருக்கும் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து, அந்தச் சிறுமியின் பெற்றோர், ஆகஸ்ட் 20-ம் தேதி, டெல்லி காவல் நிலையத்தில் ஆசாராம்  பாபு மீது  புகார்  அளித்தனர்.  ஆசாராம் பாபு மீது முதல் குற்றப் பத்திரிகை பதிவுசெய்யப்படுகிறது.  இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து,  அந்த வழக்கின் விசாரணை ஜோத்பூர்  நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகிறது.  

ஆசாராம் பாபு மீது இந்திய குற்றவியல் பிரிவு, போக்சோ  சட்டம் ( Pocso Act), சிறுவர் நீதி சட்டம்  (Juvenile Justice Act)  ஆகிய சட்டங்களின்கீழ்  வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அவரைக் காவல்துறையினர் தேடுகின்றனர். ஆனால், செய்தி அறிந்ததும் தலைமறைவாகிறார் ஆசாராம் பாபு. 11 நாள்கள் கழித்து,  ஆகஸ்ட் 31-ம் தேதி, இந்தோரில் பதுக்கியிருந்த ஆசாரம் பாபுவை,  காவல்துறையினர் கைது செய்து, ஜோத்பூர் சிறையில் அடைக்கிறார்கள்.

ஏற்கெனவே கடந்த 2008-ம் ஆண்டு, ஓர்  ஆங்கில ஊடகம், ’ஸ்ட்ரிங் ஆபரேஷன்' ஒன்றை ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் நடத்தியது. அந்த ஆசிரமத்தில், ஆசாராம் பாபுவை சந்தித்துப் பேசுகிறார் அந்தப் பெண் நிருபர்.  ``நான் மிகவும் மனவருத்தத்தில் இருக்கிறேன். நான் உங்களிடம் பேச வேண்டும்”, என்று கூறுகிறார் அந்த நிருபர். அதற்கு ஆசாராம் பாபு, “நீ பேசுவதற்கு இந்த இடம் சரியானது இல்லை. நான் சொல்கிற இடத்தில் பேசலாம். நான் உன் பிரச்னைகளை தீர்த்து வைக்கிறேன். இங்கு பல மாநில முதல்வர்கள் வந்து போவார்கள். என்னால் தீர்க்கமுடியாத பிரச்னை என்று ஒன்றுமில்லை”, எனக் கூறுகிறார். இறுதியாக ஆசாராம் பாபு சொன்ன இடத்தில் அவரை தனியாக சந்திக்கிறார் அந்த நிருபர். அவரிடம் ஆசாராம் பாபு தொடர்ந்து பேசி, ``நீ இப்போது நன்றாகத் தூங்கு. நானும் உன்னுடன் தூங்குகிறேன். யாரும் உன்னை  இங்கே கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால், இதைப் பற்றி, நீ வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது!” என்று கூறுகிறார். இதையெல்லாம், அந்தப்  பெண் நிருபர் தான் மறைத்துவைத்திருந்த கேமராவில் பதிவுசெய்கிறார். ஜோத்பூர் சிறுமி வழக்கில், பெண் நிருபரின் ஸ்ட்ரிங் வீடியோ மிகவும் முக்கியமான சாட்சியாக எடுத்துக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச்  சாட்சி மட்டுமல்ல, அந்த  ஆசிரமத்தில் வேலை செய்த பலரும், சிறுமியுடன் ஆசாராம் பாபு இருந்ததைப் பார்த்துள்ளனர்.  இந்த வழக்கில்,  அவர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட, அவர்கள் ஒவ்வொருவரையுமே  கொல்வதற்கு  திட்டங்கள் தீட்டப்பட்டதாம் ஆசாராம் பாபு தரப்பிலிருந்து! சிலர் உயிர் இழந்தனர் ; சிலர் பலத்த காயங்களுடன் தப்பித்தனர்.  விசாரணை நடந்த இந்த நான்கு வருடங்களில், கிட்டதட்ட ஒன்பது நபர்கள் தாக்கப்பட்டனர் . இதில், நான்கு பேர் கொல்லப்பட்டனர் .

PC: livehindustan.com

ஆசாராம் பாபு ஆசிரமத்தில், அவருடன் பணிபுரிந்த ஆயுர்வேத மருத்துவரான அம்ருத் ப்ராஜாபதி என்பவர், கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம், மர்மமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர், ஜோத்பூர் சிறுமி வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு எதிராகச் சாட்சி சொன்னவர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் சமையல்காரராகவும், ஆசாராமின் உதவியாளராகவும் இருந்த அகில் குப்தா, அவரது வீட்டில் மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த 2013-ம் ஆண்டு,  குஜராத் காவல்துறை அகில் குப்தாவை ஜோத்பூர் சிறுமி வழக்கில் விசாரித்தபோது ஆசாராமுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

மற்றொரு சாட்சியான ராகுல் சச்சான் என்பவர்,  ஜோத்பூர் நீதிமன்ற வளாகத்திலேயே கத்தியால் குத்திக்  கொல்லப்பட்டார். மேலும், க்ரிபால் சிங் என்ற சாட்சியாளர், ஷாஹ்ஜஹன்பூரில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, அடையாளம் தெரியாத இருவர் அவரைத் துப்பாக்கியால்  சுட்டுக்கொன்றனர். 

மேலும், இந்த நான்கு வருடங்களில்,  ஆசாராம் பாபு  12 முறை ஜாமீன் வழங்கக் கோரி மனு அளித்துள்ளார். ஆனால், அத்தனை முறையும் அவரின் ஜாமீன் மீதான மனு நிராகரிக்கப்பட்டது. 

இதனையடுத்து, கடந்த 7-ம் தேதி, இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணைகள்  முடிவடைந்த நிலையில் நேற்று (25.4.18) பாதுகாப்பு காரணமாக நீதிபதி ஆசாராம் பாபு இருந்த சிறைக்குச் சென்று அங்கே தீர்ப்பை வழங்கினார். இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்பட்ட இருவர் விடுதலை செய்யப்பட்டனர். 

கடந்த 2013-ம் ஆண்டு, ஆசாராம் கைது செய்யப்பட்டவுடன்,  சூரத் பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள், ஆசாராம் பாபுவும் அவரின் மகன் நாராயண் சாயும் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக  புகார் அளித்தார். இந்தச் சம்பவம் 2002  - 2005  ஆண்டுகளில் நடந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.  கடந்த 2014-ம் ஆண்டு, இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டு,  விசாரணை நடைபெற்று  வருகின்றது . இதற்கான விசாரணையை இன்னும் ஐந்து வாரங்களில் விரைந்து முடிக்கச் சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம்!

அடுத்த கட்டுரைக்கு