Published:Updated:

நீதிபதியின் உத்தரவால் எஸ்.வி.சேகரைத் தேடும் போலீஸ்!

நீதிபதியின் உத்தரவால் எஸ்.வி.சேகரைத் தேடும் போலீஸ்!
நீதிபதியின் உத்தரவால் எஸ்.வி.சேகரைத் தேடும் போலீஸ்!

நீதிபதியின் உத்தரவால் எஸ்.வி.சேகரைத் தேடும் போலீஸ்!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூலில் அவதூறான கருத்துகளை வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ``ஒரு பெண்ணை மட்டுமல்ல; ஒட்டுமொத்த பெண் இனத்தையே எஸ்.வி.சேகர் அவதூறு செய்யும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். எனவே, சாதாரண மனிதனுக்கு எதிரான வழக்கை போலீஸார் எவ்வாறு விசாரிப்பார்களோ, அதேபோன்று விசாரிக்க வேண்டும்’’ என்று முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ராமதிலகம் உத்தரவிட்டுள்ளார். தனக்கு முன்ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், நீதிமன்றத்தில் சரண்டராகி விடலாமா? என்று தனது வக்கீல்களுடன் எஸ்.வி. சேகர் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், எஸ்.வி.சேகரைக் கைதுசெய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அருவருக்கத்தக்க கருத்தை பி.ஜே.பி. பிரமுகரான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு, அனைத்துத்தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. பி.ஜே.பி தலைவர்களான மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் போன்றோரும் கண்டனத்தோடு வருத்தமும் தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் நிர்வாகி மிதார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், எஸ்.வி.சேகருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எஸ்.ராமதிலகம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. எஸ்.வி. சேகருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்த்தரப்பில் கடுமையான வாதம் முன் வைக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள், பெண் வழக்கறிஞர்கள் என மொத்தம் ஒன்பது பேர் தங்களின் எதிர்ப்புகளை நீதிமன்றத்தில் பதிவு செய்தனர். அவர்கள் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 

இந்த வழக்கில் எஸ்.வி.சேகர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ரகுநாதன் ஆஜரானார். அவர், ``எஸ்.வி.சேகர், ஒரு இன்ஜினீயரிங் முடித்த பட்டதாரி. ஒலிப்பதிவாளர், போட்டோகிராபர், வீடியோ கிராபர், எடிட்டர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் எனப் பல துறைகளில் இருப்பவர். திருமலை என்பவர் முகநூல் தளத்தில் பதிவிட்டதை அவர் படித்துப் பார்க்காமல், தெரியாமல் வெளியிட்டு விட்டார். அதற்காக அவர் பகிரங்க மன்னிப்பும் கேட்டுவிட்டார். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என்று வாதிட்டார். என்றாலும், அவருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தவர்கள், முன் ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ``மன்னிப்புக் கேட்பதால் அவர் செய்த தப்பு சரி என்றாகி விடாது. சமூகத்தில் அக்கறை உள்ளவர் என்று கூறிக்கொள்ளும் அவரின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவர் சொன்ன கருத்துகளை யாராலும் ஜீரணிக்க முடியாது. அவருக்கு முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது. அவரைக் கைதுசெய்வதுடன், அவருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராமதிலகம், எஸ்.வி. சேகரின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 3- ம் தேதி ஒத்திவைத்தார். பின்னர், அதன் மீதான தீர்ப்பை அவர் நேற்று வெளியிட்டார். அதில், ``தவறுதலாகச் செய்யும் ஒரு செயலும் குற்றச்செயலும் ஒன்றாகிவிடாது. குழந்தைகள் மட்டுமே தவறு செய்வார்கள். அவர்கள் மன்னிக்கப்படக் கூடியவர்கள். ஆனால், அந்தச் செயலை பெரியவர்கள் செய்தால் அது குற்றம். பிரபலமான ஒரு நபராக விளங்கும் எஸ்.வி.சேகர், பெண்களுக்கு எதிராகத் தெரிவித்துள்ள கருத்து, வேலைக்குச் செல்லும் பெண்கள் மீது சமூகத்தில் ஒரு சந்தேகப் பார்வையை ஏற்படுத்தும். இதை அனுமதித்தால், பொதுவாழ்க்கையில் பெண்களுக்குக் குந்தகத்தை ஏற்படுத்தும். அவர்கள், பொதுவாழ்க்கைக்கு வரவே மாட்டார்கள். வேலைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெண்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும். 

`வேலைக்குச் செல்லும் பெண்கள் அனைவருமே தங்களின் கற்பைப்  பணயம் வைத்துதான் முன்னேறுகிறார்கள்' என்ற எஸ்.வி.சேகரின் கருத்து, பெண்களின் எதிர்காலத்தை அழித்துவிடும். 

மனுதாரரின் பதிவில் உள்ள கருத்து ஒரு பெண்ணை மட்டும் அவதூறாகக் குறிப்பிடவில்லை. ஒட்டுமொத்த பெண் இனத்தையே அவதூறு செய்யும் வகையில் உள்ளது. எஸ்.வி.சேகர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படும்போது பிரச்னைக்கு மூலகாரணமான எஸ்.வி.சேகர் மீது சட்டப்படி ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற எண்ணம் பொதுவாக எல்லோர் மனதிலும் எழும். எனவே, எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. அவரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்கிறேன். சாதாரண மனிதருக்கு எதிரான வழக்கை போலீஸார் எப்படி விசாரிப்பார்களோ, அதுபோல இந்த வழக்கையும் விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் எஸ்.வி.சேகரைக் கைது செய்ய போலீஸார் தேடி வருகின்றனர். அவருடைய நகர்வுகளை போலீஸார் கண்காணிப்பில் வைத்துள்ளனர். இதற்கிடையே, ``இன்றும் நாளையும் நீதிமன்றம் விடுமுறை. எனவே, திங்கள்கிழமை ஏதாவது ஒரு நீதிமன்றத்திலோ அல்லது போலீஸ் நிலையத்திலோ சரண்டராகி ஜாமீன் வாங்க முடியுமா? அல்லது உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தை அணுகி, முன்ஜாமீன் பெறமுடியுமா?" என்ற ஆலோசனையில் எஸ்.வி.சேகர் ஈடுபட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் தகவல் அறிந்தவர்கள். அதற்கு முன்னதாக, எஸ்.வி.சேகரைக் கைது செய்துவிட வேண்டும் என்ற நோக்கில் போலீஸார் அவரைத் தேடி வருவதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த கட்டுரைக்கு