Published:Updated:

1990.. மே 30, மேற்கு வங்கத்தின் பன்டாலா படுகொலை: 28 வருடங்களை கடந்து நிற்கும் ரணம்!

1990.. மே 30, மேற்கு வங்கத்தின் பன்டாலா படுகொலை: 28 வருடங்களை கடந்து நிற்கும் ரணம்!
1990.. மே 30, மேற்கு வங்கத்தின் பன்டாலா படுகொலை: 28 வருடங்களை கடந்து நிற்கும் ரணம்!

1990.. மே 30, மேற்கு வங்கத்தின் பன்டாலா படுகொலை: 28 வருடங்களை கடந்து நிற்கும் ரணம்!

ருடம் 1990, மேற்கு வங்க மாநிலம்..  இரவு மணி 11:30.. கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாகி கொடூரக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணை அணுகினார் ஒரு பெண் மருத்துவர். உடலை பரிசோதித்துக்கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணின் உடலில் செருகப்பட்டிருந்த டார்ச் லைட்டைப் பார்த்து அதிர்ச்சியடைந்து மயங்கிக் கீழே விழுந்தார் அந்த மருத்துவர். அது 1990 அல்லவா? அதனால்தான் அந்த மருத்துவர் `இப்படியும் வன்முறையைச் செலுத்த முடியும்’ என்ற தகவலை அறியாதவராக இருந்திருக்கிறார், பாவம் அதிர்ச்சியடைந்து விட்டார்.

1990 மே 30... மாலை 6:30 மணியளவில் பன்டாலா அருகில் விரைந்துகொண்டிருந்த அரசு வாகனம் சிலரால் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டது. அந்த வாகனத்தில், அருகிலுள்ள ஊரில் நோய்த்தடுப்புச் செயல்திட்டங்களை ஆய்வு செய்துவிட்டு கொல்கத்தாவுக்குத் திரும்பிக்கொண்டிருந்த அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் அனிதா தேவன், உமா கோஷ் மற்றும் டெல்லி யுனிசெஃப் அலுவலகத்திலிருந்து வந்திருந்த ரேணு கோஷ் ஆகியோர் பயணித்துக்கொண்டிருந்தனர். அந்த நெடுஞ்சாலையில் திடீரென வாகனத்தை நிறுத்தியவர்களின் நோக்கத்தை உணர்ந்துகொண்டார் ஓட்டுநர் அபானி நையா. தன்னால் முடிந்தளவு ஆபத்தைத் தவிர்க்க முயன்றபோதும், வாகனம் வளைத்துப் பிடிக்கப்பட்டது. வாகனத்தை நிறுத்திய அந்தக் கும்பலை எதிர்த்துப் போராடிய ஓட்டுநர் அபானி கொடூரமாகத் தாக்கப்பட்டார். சிறு அசைவுகூட இல்லாமல் அங்கேயே விழுந்தும்விட்டார்.

வாகனத்தில் இருந்த மூன்று பெண்களும் அருகிலிருந்த வயலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர். சுகாதாரத்துறை அதிகாரி அனிதா தேவன் பலமாய் அவர்களை எதிர்த்துப் போராடவே மிக மோசமான வன்முறை அவர் உடல் மேல் பிரயோகிக்கப்பட்டது. பெரும் அலறலுடன் அங்கேயே அவர் இறந்தும்போனார். வாகனம் கொளுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், கொடூரமாகத் தாக்கப்பட்ட நால்வரையும் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஓட்டுநர் அபானியின் உடலில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு 43 காயங்கள் இருந்தன. அவரது உடலின் அந்தரங்கப் பகுதி மிகமோசமாக காயப்படுத்தப்பட்டிருந்தது. நான்கு நாள்கள் கழித்து அபானி இறந்து போனார். பாலியல் வன்முறைக்கு உள்ளான உமா கோஷும், ரேமி கோஷும் மீண்டு வந்தனர்.

சம்பவம் நடந்தது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் அருகில். கொலை நிகழ்த்தியவர்கள் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜோதி பாசு ``இதுபோன்ற தவறுகள் அவ்வப்போது நடக்கத்தான் செய்கின்றன” என்று கருத்துத் தெரிவித்தார். மேற்கு வங்கம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வழக்கு துரிதப்படுத்தப்பட்டு ஆறு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால், பெரும் சர்ச்சைகளையும் இந்தச் சம்பவம் தோற்றுவித்தது. இன்று வரை அந்தச் சர்ச்சைகளுக்கான விடைகள் கிடைக்கப்பெறவில்லை. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழுள்ள பஞ்சாயத்துகளுக்கு `யுனிசெஃப்' ஒதுக்கியிருந்த பணம் தவறாகக் கையாளப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை கொல்லப்பட்ட அனிதா தேவன் தன்னுடன் வைத்திருந்ததாகவும், அதை அழிப்பதற்காகவே வாகனம் கொளுத்தப்பட்டது எனவும் கூறப்பட்டது. `நீதி வேண்டும்' என்று எழும்பிய குரல்களும் மெள்ள மெள்ள குறைந்தன. இன்று மே 30... 28 வருடங்கள் உருண்டோடிவிட்டன.

அதிகாரத்தின் கறுப்புப் பக்கங்களை வெளிப்படுத்துபவர்கள்மீது தொடுக்கப்படும் வன்முறைகள் வரலாறு எங்கும் பரவிக்கிடக்கின்றன. ஆனால், பெண்ணின் பிறப்புறுப்புகளை மையப்படுத்திய இப்படியான வன்முறைகள் மனித மனங்களின் மிருகத்தனத்தில் வெளிச்சம்பாய்ச்சி ஒட்டுமொத்த மனிதத்தையும் அச்சத்தில் ஒடுங்கச் செய்கின்றன. கொடூரமாகக் கொல்லப்பட்ட அனிதா தேவனும் சரி, அந்தரங்கப் பகுதி சிதைக்கப்பட்ட அபானியும் சரி வன்முறையாளர்களை எதிர்த்து ஆவேசமாய்ப் போராடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வன்முறையில் குதித்த கூட்டத்துக்கு நிச்சயம் இந்தப் போராட்டம் கடும் சீற்றத்தினை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், அந்தச் சீற்றம், கோபம் வெளிப்பட்ட விதம்தான் இந்தச் சமூகத்தின் அடிப்படை கட்டுமானங்கள் சரிந்துகொண்டிருக்கின்றனவா என்ற கேள்வியை எழுப்புகிறது. ஒடுக்குமுறைக்கும் வாயடைப்புக்கும் இப்படியும் ஒரு பரிமாணம் இருக்கிறது என்று பயந்து ஒடுங்க வைத்த நிகழ்வு இந்தப் பன்டாலா படுகொலை.

நாம் விழித்துக்கொண்டு மனித விழுமியங்களை நமக்குள் தோண்டிப்பார்த்து வெளியே எடுக்க வேண்டியதன் எச்சரிக்கை மணியை அனிதா தேவன் ஒளிக்கவிட்டு மறைந்தார். இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதெல்லாம் வன்புணர்வு என்ற செய்தியைக் கேட்க நேரிட்டாலே இரும்பு தடியா, டார்ச் லைட்டா என்று அச்சத்துடன் அடுத்த செய்தியை எதிர்நோக்குகிறோம். உச்சபட்சங்களுக்கு இரண்டு முகம் உண்டு. உச்சபட்சத்தின் காயப்படுத்தும் முகத்தை ஒரு சமூகம் கண்டறிந்து விட்டால் நாம் சிதைந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள். ஆம், சிதைவுகளை சரி செய்ய நமக்குத் தெரியவில்லை. இன்னும் ஆழப்படுத்திக் கொண்டே இருக்கிறோம். உச்சபட்ச காயங்களை அனுபவித்தவர்கள், உருவாக்கத் தெரிந்தவர்களின் மனதை மயிலிறகால் தடவிக்கொண்டே பின்வழியாய் ரணங்களை வேரோடு பிடுங்கி எரிய நமக்குத் தெரிய வேண்டும். மனித பேரன்பின் சக்தியை அறியாதவர்களாக ஓடிக் கொண்டிருக்கிறோம், அச்சத்தில் ஒடுங்கிக் கொண்டிருக்கிறோம். அனிதாவில் தொடங்கி பட்டியல் பெரிதாகிக்கொண்டே போகிறது. நாம் விழித்துக் கொள்வோமா?

அடுத்த கட்டுரைக்கு