Published:Updated:

''கஷ்டம்னு கவலைப்பட்டா, அது போயிடுமாம்மா!'' - சூப் கடை ஶ்ரீதேவியின் தன்னம்பிக்கை

இந்த வருமானத்தில் வீட்டுக்காரர் வாங்கின கடனை அடைக்க ஆரம்பிச்சேன். என் பசங்களின் படிப்புக்கும் இதுதான் உதவுது.

''கஷ்டம்னு கவலைப்பட்டா, அது போயிடுமாம்மா!'' - சூப் கடை ஶ்ரீதேவியின் தன்னம்பிக்கை
''கஷ்டம்னு கவலைப்பட்டா, அது போயிடுமாம்மா!'' - சூப் கடை ஶ்ரீதேவியின் தன்னம்பிக்கை

''வாழ்க்கையில் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கு. இன்னிக்கு கஷ்டமா இருக்கேன்னு நினைச்சு பயந்தால், நாளைய சந்தோஷ வாழ்க்கை கிடைக்கவே கிடைக்காது. மனசுல தைரியம் இருந்தால், எந்தக் கஷ்டத்தையும் கடந்துடலாம்'' என்கிற ஶ்ரீதேவி வார்த்தைகளில் தன்னம்பிக்கை மிளிர்கிறது. விழுப்புரத்தைச் சேர்ந்த சூப் கடை உரிமையாளர் ஶ்ரீதேவி கடந்துவந்திருக்கும் பாதை, வாழ்க்கையில் துன்பத்தை கண்டு துவளும் ஒவ்வொருவருக்குமான வழிகாட்டி.

''இப்போ எனக்கு 33 வயசு. நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே அம்மா இறந்துட்டாங்க. அப்பாவுக்கு மனநிலை சரியில்லாமல் போயிடுச்சு. பாட்டிதான் என்னை வளர்த்தாங்க. எட்டாம் வகுப்பு வரை படிச்சேன். ஒன்பதாம் வகுப்பில் 225 ரூபாய் பீஸ் கட்டணும்னு சொன்னாங்க. அப்போ இருந்த நிலைமைக்கு எங்களுக்கு அது பெரிய தொகை. பீஸ் கட்டலைன்னு தினமும் கிளாஸுக்கு வெளியே நின்னுட்டே இருந்தேன்.  அப்புறம், 'என்னால் படிக்கவைக்க முடியலை. நீ வீட்டிலே இரு'னு பாட்டி சொல்லிட்டாங்க. அதுக்கு அப்புறம், 'வயசுக்கு வந்த பொண்ணை பாட்டிக்கு அப்புறம் யார் பார்த்துக்கிறது?'னு ஊர் கேள்வி கேட்டுச்சு. 14 வயசுலேயே கல்யாணமும் ஆச்சு.

கல்யாணம்னா புது சேலை வாங்கித் தருவாங்க, புருஷன் வீட்டில் சமைச்சு போடணும் என்பதுதான் கல்யாணத்தைப் பற்றி எனக்குத் தெரிஞ்ச ஒரே விஷயம். ஆனால், புகுந்த வீட்டுக்கு வந்த பிறகுதான்  வாழ்க்கைன்னா என்னனு கொஞ்சம் கொஞ்சமா காலம் புரியவெச்சுச்சு. என் புருஷன், ரெயில்வேயில் கேட் மேன். வாங்குற சம்பளத்தை குடிச்சே தீர்த்துடுவார். சாப்பாட்டுக்கே கஷ்டமான சூழலில் ரெண்டு பசங்களை வெச்சுக்கிட்டு 15 வருஷம் அவரோடு வாழ்ந்தேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். அப்போதான் அவருக்கு 8 லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது தெரிஞ்சது. தினமும் கடன்காரங்க வீட்டுக்கு வந்து அசிங்கமா திட்டுவாங்க. தப்பு தப்பா பேசுவாங்க. என்ன பண்றது? இவ்வளவு கடனை எப்படி அடைக்கிறது? பேசாமல் தற்கொலை செய்துக்கலாம்னுகூட நினைச்சேன். ஆனா, பசங்க கதி? அவங்களுக்காக உயிர் வாழணும்னு முடிவெடுத்தேன்'' என்கிற ஶ்ரீதேவி, வாழ்வின் வெளிச்சத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளார்.

''எனக்குக் கிடைக்காத சந்தோசம், என் பிள்ளைகளுக்குக் கிடைக்கணும். சின்னதா, சொந்தமா தொழில் செய்வோம்னு நிறைய பேரிடம் பணம் கேட்டேன். பேங்க் லோன் வாங்கவும் முயற்சி செஞ்சேன். ஆனா, என் வீட்டுக்காரர் வாங்கின கடனால், எனக்கு யாரும் உதவ முன்வரலை. வாழ்க்கை இப்படியே முடிஞ்சுபோயிருமோனு நினைச்சபோது, என் தோழி சாந்தி என்னைப் பார்க்க வந்தாங்க. ஆறு வகையான சூப்கள் செய்ய  கற்றுக்கொடுத்தாங்க. முதலீடுக்காக 20,000 ரூபாயும் கொடுத்து உதவினாங்க. அதுதான் என் வாழ்க்கையின் ஆரம்பம். சூப் கடை ஆரம்பிச்ச புதுசிலும் நிறைய பிரச்னைகள். ஆனால், இதுதான் நம்ம வாழ்க்கை,   சுயமரியாதையோடு வாழணும்னு குறிக்கோளோடு பிரச்னைகளைச் சமாளிச்சேன். 

என் சூப் கடைக்கு விளம்பரமே, என் வாடிக்கையாளர்கள்தான். ஆறு மாசத்துக்கு அப்புறம் பிஸினஸ் சூடு பிடிச்சது. இந்த வருமானத்தில் வீட்டுக்காரர் வாங்கின கடனை அடைக்க ஆரம்பிச்சேன். என் பசங்களின் படிப்புக்கும் இதுதான் உதவுது. ரெண்டு பேரையும் டிப்ளமோ படிச்சுட்டிருக்காங்க. சாயந்திரம் 6 மணிக்குக் கடையைத் திறப்போம். வாழைத்தண்டு, வல்லாரை, முடக்கத்தான், வெஜிடபிள், காளான் என வெரட்டி சூப்ஸ் விற்கிறேன். 10 மணிக்குள்ளே எல்லாமே காலி ஆகிடும். வாழ்க்கை சந்தோஷமா போயிட்டிருக்கு. புருஷன் போயிட்டாரேனு வீட்டிலேயே முடங்கியிருந்தால், இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டேன். பசங்களுக்காக நான் எடுத்த முடிவு, இன்னைக்குத் தன்மானத்துடன் வாழ வழிகாட்டியிருக்கு'' என்றவாறே வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பிக்கிறார் ஶ்ரீதேவி.