Published:Updated:

கோயிலுக்குச் சென்று கர்ப்பிணி மனைவியைக் கொன்ற காதல் கணவன்!

கோயிலுக்குச் சென்று கர்ப்பிணி மனைவியைக் கொன்ற காதல் கணவன்!
கோயிலுக்குச் சென்று கர்ப்பிணி மனைவியைக் கொன்ற காதல் கணவன்!

கோயிலுக்குச் சென்று கர்ப்பிணி மனைவியைக் கொன்ற காதல் கணவன்!

கர்ப்பத்தைக் கலைக்காததால் ஏழு மாத கர்ப்பிணிப் பெண்ணை அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, நாடகமாடிய அந்தப் பெண்ணின் கணவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தை அடுத்த பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனுவாசன், வயது 25. ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நர்ஸிங் கல்லூரி மாணவி ஜெயந்திக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் நெருங்கிப் பழகியதால் இருமுறை ஜெயந்தி கர்ப்பமாகியிருக்கிறார். அப்போது மெடிக்கலில் மருந்து வாங்கிக் கொடுத்து ஜெயந்தியின் கர்ப்பத்தைக் கலைத்திருக்கிறார் சீனுவாசன். அதேபோல, கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு மீண்டும் கர்ப்பமாகியிருக்கிறார் ஜெயந்தி. அப்போது மீண்டும் மெடிக்கலில் மருந்து வாங்கிய சீனுவாசன் ஜெயந்தியிடம் கொடுத்து கர்ப்பத்தைக் கலைக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால், இந்தமுறை கர்ப்பத்தைக் கலைக்க மறுத்த ஜெயந்தி, பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறி அழுதிருக்கிறார். அதன்பின் இரு வீட்டாரும் பேசி சீனுவாசன் - ஜெயந்தி திருமணத்தை நடத்தி வைத்தனர். இதனால் ஜெயந்திமீது வெறுப்பாகவே இருந்து வந்திருக்கிறார் சீனுவாசன். இதனால், திருமணத்துக்குப் பின்னரும் ஜெயந்தி தன் தாய் வீட்டிலேயே வசித்து வந்தார்.

இந்நிலையில், ஜூன் 15- ம் தேதி `கோயிலுக்குச் செல்லலாம்' என்றுகூறி ஜெயந்தியை அழைத்துச் சென்ற சீனுவாசன், அன்று மாலையே ஜெயந்தி வீட்டுக்கு போன் செய்து ``ஜெயந்தியைத் திருக்கோவிலூரிலிருந்து பஸ்சில் ஏற்றி அனுப்பினேன். வீட்டுக்கு வந்துவிட்டாளா?" என்று கேட்டிருக்கிறார். ``இன்னும் வரவில்லையா?" என்று பதறிய சீனுவாசன் ஊருக்குத் திரும்பிவந்து தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஜெயந்தியைத் தேடியிருக்கிறார். நான்கு நாள்கள் அக்கம் பக்கத்து ஊர்களில் தேடிப்பார்த்த சீனுவாசன், சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், உளுந்தூர்ப்பேட்டை உள்ளிட்ட காவல்நிலையங்களில் ஜெயந்தியின் புகைப்படத்தைக் காட்டி தன்னுடைய மனைவியைக் காணவில்லை என்று கூறியிருக்கிறார். இறுதியாகத் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். 

ஜெயந்தி காணாமல்போன தினத்தன்று நடந்த சம்பவங்கள் குறித்து சீனுவாசனிடம் போலீஸார் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.

அப்போது முன்னுக்குப் பின் முரணாகத் தகவல்களைக் கூறினாராம் அவர். இதனால், சந்தேகமடைந்த போலீஸார் சீனுவாசனிடம் துருவித்துருவி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, ஜெயந்தியை சீனுவாசன் அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். போலீஸாரிடம் அவர், ``ஜெயந்தியை எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. உல்லாசமாக இருந்துவிட்டு அவளைக் கழட்டிவிட்டுவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், ஜெயந்தி கர்ப்பத்தைக் கலைக்காமல் பெற்றோரிடம் சொல்லிவிட்டதால், எங்களுக்குத் திருமணம் நடந்தது. திருமணமான ஐந்தாவது நாளே நான் ஆந்திராவுக்கு நெல்வண்டி ஓட்டுவதற்காகச் சென்றுவிட்டேன். ஆனாலும், ஜெயந்தி செய்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் எப்படியாவது அவளைக் கொலை செய்ய முடிவெடுத்தேன். அதன்படி, கடந்த 15-ம் தேதி ஊருக்குத் திரும்பிய நான், ஜெயந்தியை அழைத்துக் கொண்டு ரிஷிவந்தியம் கோயிலுக்குச் சென்றேன்.  

அதன்பின், ரிஷிவந்தியம் காப்புக் காட்டில் ஒரு சக்தி வாய்ந்த கோவில் இருக்கிறது. அங்கு போகலாம் என்று சொல்லி அவளை அங்கு அழைத்துச் சென்றேன். அங்குவைத்து அவளைக் கட்டையால் கடுமையாகத் தாக்கினேன். அப்போது 'ப்ளீஸ்...வேணாங்க. என்னை எதுவும் பண்ணிடாதீங்க. நம்ம குழந்தை, என் வயித்துல வளருதுன்னு' கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சினாள். என்றாலும் ஜெயந்திமீது எனக்கிருந்த கோபம் எனக்குப் போகலை. அவள் கட்டியிருந்த புடவையாலேயே அவளின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து, அவளை அங்கிருந்த புதரில் போட்டுவிட்டு வந்துவிட்டேன். என்மீது சந்தேகம் வந்துவிடாமல் இருக்க, அவளைத் தேடுவதுபோல நடித்தேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார். 

காதலித்துத் திருமணம் செய்த ஏழு மாத கர்ப்பிணிப் பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம், விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு