Published:Updated:

``கலெக்டர் அன்பழகன் அண்ணன்தான் இவ்வளவு உதவி செஞ்சார்!’’- நெகிழும் மாற்றுத் திறனாளிப் பெண்

இப்படி கஷ்ட ஜீவனம் நடத்திக்கிட்டு இருந்தப்பதான், கலெக்டர் அண்ணனே வந்து எனக்கு இவ்வளவு உதவிகளையும் செஞ்சிருக்கார். அதோட, `உனக்கு உறவுகள் யாரும் இல்லைன்னு யார் சொன்னா? எல்லார்கிட்டயும், `என் அண்ணன் கலெக்டரா இருக்கார். பேரு அன்பழகன்னு சொல்லு'ன்னு சொன்னார்.

``கலெக்டர் அன்பழகன் அண்ணன்தான் இவ்வளவு உதவி செஞ்சார்!’’- நெகிழும் மாற்றுத் திறனாளிப் பெண்
``கலெக்டர் அன்பழகன் அண்ணன்தான் இவ்வளவு உதவி செஞ்சார்!’’- நெகிழும் மாற்றுத் திறனாளிப் பெண்

தாய், தந்தை, கணவர் என யாருமே இல்லாமல், நாலரை வயது பெண் குழந்தையோடு அங்கன்வாடியில் போடும் சாப்பாட்டை உண்டு வாழ்ந்துவந்தார் மாற்றுத்திறனாளிப் பெண் அழகம்மாள். ஓட்டை உடைசல் வீடு, சனி-ஞாயிற்றுக்கிழமைகளில் பட்டினி எனச் சிரமப்பட்ட அந்தப் பெண்ணின் கதையைக் கேட்ட கலெக்டர், அந்தப் பெண்ணுக்குத் தற்காலிக வீடு, டாய்லெட் வசதி, உதவித்தொகை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு என அடிப்படை வசதிகளையும் செய்து உதவியிருக்கிறார். இத்துடன் அழகம்மாளிடம், ``உனக்கு உறவுகள் இல்லைன்னு யார் சொன்னா? எல்லார்கிட்டயும் `என் அண்ணன் கலெக்டரா இருக்கார். பேரு அன்பழகன்னு சொல்லு' " என்று கூறி அந்தப் பெண்ணை நெகிழவைத்திருக்கிறார்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது பால்வார்பட்டி. இந்தக் கிராமத்தில்தான் தனது நாலரை வயதுப் பெண்ணான மகாலட்சுமியோடு, வறுமையில் வாடிவந்தார் அழகம்மாள். அவரது பெற்றோர், ஐந்து வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டனர். அழகம்மாளுக்கு இரண்டு கால்களும் செயலிழந்துவிட, தரையோடு தரையாகத் தவழ்ந்து போகக்கூடிய சோக நிலை. இப்படிப்பட்ட அழகம்மாளை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி ஏமாற்றியதால் பிறந்தவள்தான் மகாலட்சுமி.

இயற்கை உபாதையைக் கழிக்கக்கூட சிரமமான சூழல். ஓட்டை உடைசலாக இருக்கும் சிறு தடுப்புதான் அவர்களது வீடாக இருந்தது. வருமானத்துக்கு எந்த வழியும் இல்லாத சூழலில், அருகில் உள்ள அங்கன்வாடிக்குப் போய் மகாலட்சுமி வாங்கிவரும் சாப்பாட்டை, இருவரும் பகிர்ந்து உண்டு, கடந்த இரண்டு வருடங்களாகக் காலம் கழித்தனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கன்வாடி விடுமுறை என்பதால், மகாலட்சுமி வீடு வீடாகச் சென்று சோறு வாங்கி வந்து, தனது தாய்க்குச் சாப்பிடக் கொடுத்து தானும் உண்ணுவார். 

அழகம்மாளின் நிலைமையைப் பார்த்துப் பரிதாபப்பட்ட அங்கன்வாடி ஆசிரியை ராதாமணி, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு `அலகு'க்குத் தகவல் சொன்னார். அங்கிருந்து வந்த அதிகாரிகள், அழகம்மாளின் நிலைமையை மாவட்ட ஆட்சித்தலைவரான அன்பழகனின் கவனத்துக்குக் கொண்டுசென்றனர். அழகம்மாளின் நிலை, அவரையும் உருகவைத்தது. ரோட்டரி க்ளப்பைச் சேர்ந்த பாஸ்கரனிடம் பேசிய கலெக்டர், `அழகம்மாளுக்குத் தற்காலிக வீடு. டாய்லெட் வசதி அமைத்துத் தர முடியுமா?' என்று கேட்டிருக்கிறார். ஆட்சியரின் ஆணைக்கு இணங்க, நான்கே நாளில் தற்காலிக வீடு, டாய்லெட் வசதியை ரோட்டரி க்ளப் சார்பில் அமைத்துக்கொடுத்தார் பாஸ்கரன். வருவாய்த் துறை மூலம் அழகம்மாளுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு என அடிப்படை வாழ்வுக்குத் தேவையானவற்றைத் தர ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கிறார் கலெக்டர் அன்பழகன்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் அழகம்மாளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கவும் ஆணை பிறப்பித்துள்ளார். அழகம்மாளுக்கு உரிய மருத்துவம் பார்க்கவும், மகாலட்சுமிக்கு நல்ல கல்வி தரவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்துள்ளார். தனது செலவிலேயே அவர்கள் இருவருக்கும்  தேவையான நல்ல உடைகள், பழங்கள், ஸ்நாக்ஸ் பொருள்களையும் வழங்கியிருக்கிறார். ஆதரவின்றி வாழ்நாளைக் கழிந்துவந்த அழகம்மாள், தற்போதுதான் உண்மையிலேயே அழகம்மாளாகக் காட்சித் தருகிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம்...

``எனக்கு உறவுன்னு சொல்லிக்க, மகள் மகாலட்சுமியை விட்டா யாரும் இல்லை. எனக்கு இடுப்புக்குக் கீழ கால்கள் இயங்காது. இப்படி இருக்க்கும் நான் எங்கே வேலைக்குப் போறது? மழை, வெயில் எதுன்னாலும் வீட்டுக்குள்ள இருக்க முடியாது. என் மக பக்கத்துல உள்ள அங்கன்வாடிக்குப் போவா. அங்க போடுற சோத்தை தட்டோட வீட்டுக்குக் கொண்டாந்துடுவா. அதைச் சாப்பிட்டுதான் ரெண்டு பேரும் உயிர் வாழ்றோம். சனி, ஞாயிற்றுக்கிழமைகள்ல வீடு வீடா போய் சோறு வாங்கிட்டு வருவா. அதைச் சாப்பிடுவோம். சில நேரம் `செத்துரலாமா?'ன்னுகூட தோணும். ஆனா, `நான் வேலை செஞ்சு உனக்குச் சோறு போடுறேம்மா'ன்னு பெரிய மனுஷி மாதிரி என் மக சொல்வா. அதைக் கேட்டு வெடிச்சு அழுவேன்.

இப்படி கஷ்ட ஜீவனம் நடத்திக்கிட்டு இருந்தப்பதான், கலெக்டர் அண்ணனே வந்து எனக்கு இவ்வளவு உதவிகளையும் செஞ்சிருக்கார். அதோட, `உனக்கு உறவுகள் யாரும் இல்லைன்னு யார் சொன்னா? எல்லார்கிட்டயும், `என் அண்ணன் கலெக்டரா இருக்கார். பேர் அன்பழகன்னு சொல்லு'ன்னு சொன்னார். நான் உருகிப்போயிட்டேன். இந்த உதவியை என்னைக்கும் மறக்க மாட்டேன்" என்றபோது நன்றி உணர்வு அவர் கண்களில் வழிந்த நீர் வழியே வெளிப்பட்டது.

அழகம்மாளுக்கு வாழ  உதவிசெய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனிடமே பேசினோம்.

``அழகம்மாளின் நிலைமையைப் பற்றிக் கேள்விப்பட்டதும், உண்மையில் கண் கலங்கிவிட்டேன். ரேஷன் கார்டுகூட இல்லாமல், ரேஷன் கடையில் அரிசி வாங்கிச் சாப்பிட முடியாமல் மகளோடு சிரமப்பட்டார். அதனால், உடனடியாக ரேஷன் கார்டு கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். `வளர்க்கச் சிரமமாக இருந்தால், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் அந்தக் குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ளலாமா?' எனக் கேட்டபோது, அழகம்மாள் மறுத்துவிட்டார். அவரது தாய்ப்பாசம் எங்களை நெகிழவைத்துவிட்டது. ரோட்டரி க்ளப் மூலம் தற்காலிக வீடு அமைத்துக் கொடுத்துள்ளோம்.

மகாலட்சுமிக்கு நல்ல கல்வி கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். அழகம்மாளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படும். அழகம்மாள் விஷயம் மூலம் எல்லோரிடமும் மனிநேயம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டேன். அழகம்மாள் விவகாரம் என் கவனத்துக்கு வந்தபோது, அந்த ஊர் வி.ஏ.ஓ-விடம் விசாரிக்கச் சொன்னேன். அவர் அழகம்மாளின் நிலைமையைப் பார்த்துப் பரிதாபப்பட்டு, சொந்தச் செலவிலேயே அவருக்கு ஒரு ஸ்டவ் அடுப்பு வாங்கித் தந்திருக்கிறார். இதை மற்றவர்கள் சொல்லித்தான் நான் தெரிந்துகொண்டேன்.

அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து, இதுபோல் ஆதரவின்றி வறுமையில் தத்தளிப்பவர்கள் இனம் காணப்பட்டு, அவர்களுக்கு உரிய உதவிகளைச் செய்ய மாவட்ட நிர்வாகம் புதிய திட்டத்தோடு களம் இறங்கியுள்ளது" என்றார் உணர்ச்சி மேலிட!