Published:Updated:

``திருநங்கைகளின் வாழ்க்கையை நன்கு புரிந்துகொண்டு பேச வேண்டும்!'' - கல்கி சுப்ரமணியம்

``திருநங்கைகளின் வாழ்க்கையை நன்கு புரிந்துகொண்டு பேச வேண்டும்!'' - கல்கி சுப்ரமணியம்
``திருநங்கைகளின் வாழ்க்கையை நன்கு புரிந்துகொண்டு பேச வேண்டும்!'' - கல்கி சுப்ரமணியம்

``மாற்றுப் பாலினத்தவரைப் பற்றி ஒருவர் பேசுவதற்கு முன்னால், அவர்களுடைய வாழ்க்கையை நன்கு புரிந்துகொண்டு பேச வேண்டும்'' என்கிறார் எழுத்தாளரும், திருநங்கையுமான கல்கி சுப்ரமணியம். 

ந்தச் சமூகத்தில் ஆண், பெண் பாலினம் தவிர, மூன்றாம் பாலித்தனவர்களின் நிலை இன்னமும் அங்கீகரிக்கப்படாமல்தான் உள்ளது. அவர்களுக்கு வேலைவாய்ப்பில் பல மாநிலங்களில் இட ஒதுக்கீடு இருந்தாலும், தங்களுக்கான அரசுப் பணியை அவர்கள், நீதிமன்றப் படிகளை ஏறியே பெற முடிகிறது. அவர்களும் மனிதர்கள்தாம் என்ற எண்ணத்தை வளரும் எதிர்காலச் சந்ததியினரிடையே உருவாக்கித் தர வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.

ஒரு காலத்தில் மூன்றாம் பாலினத்தவர்களை இந்தச் சமூகம் தவறாகச் சித்திரித்து வந்தது. இதனால், அவர்கள் பலவித கேலி, கிண்டலுக்கு ஆளாவதுடன், சமூகத்திலிருந்து ஒதுங்கியே வாழும் நிலை இருந்துவந்தது. இயற்கையின் படைப்பில், அதுபோன்ற தன்மையுடையவர்கள், பிறரிடம் இரந்து நடத்தும் பிழைப்பை அண்மைக்காலமாக மாற்றிக் கொண்டுள்ளனர். படிப்பிலும் முன்னணியில் வரும் திருநங்கைகள், அரசு வேலைகளுக்கும் தங்களைத் தயார்செய்து வாழ்வில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வரவேற்புக்குரியதே. மூன்றாம் பாலினத்தவர்களைத் திருநங்கைகள் என்று மரியாதையாக அழைத்த பெருமை தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியையே சேரும். அந்த வகையில், திருநங்கைகளுக்குத் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான உரிமைகளும் மறுக்கப்படாமல், நவீன காலத்துக்கு ஏற்றவகையில், அவர்கள் அங்கீகரிக்கப்பட்டு வருவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.  

இதன் காரணமாக, நாட்டில் பல திருநங்கைகள் பல்வேறு அரசு வேலைவாய்ப்புகளிலும், இதரத் துறைகளிலும் கால்பதித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி, திருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையில் ட்வீட் செய்திருந்தார். இது, திருநங்கைகளை அவமதிக்கும் வகையில் உள்ளது எனப்  பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களைப் பதிவுசெய்ததையடுத்து, நடிகை கஸ்தூரி தன்னுடைய பதிவை நீக்கிவிட்டார். பின்னர் அதற்காக மன்னிப்பும் கோரினார், அவர்.

இந்த நிலையில், கடந்த வாரம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி மக்களவையில், ``ஆள் கடத்தலைத் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும்" என்றார். அதைத் தொடர்ந்து திருநங்கைகள் பற்றி அவர் கூறுகையில், ``மற்ற வகையினர்" என்று குறிப்பிட்டார். அவரின் இந்தப் பேச்சைக் கேட்ட நாடாளுமன்ற எம்.பி.-க்கள் சிலர், மேஜையைத் தட்டி, பரிகாசம் செய்யும் வகையில் சிரித்தனர். இந்தத் தகவலை அறிந்த திருநங்கைகள் பலரும் மேனகா காந்தியின், கூற்றுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் இயக்கங்களுக்கான தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும், திருநங்கையுமான மீரா சங்கமித்ரா உள்ளிட்டோர் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்ததுடன், மத்திய அமைச்சர் மேனகா காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இதையடுத்து, மக்களவையில் நேற்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி, திருநங்கைகள் தொடர்பான தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். மேலும், ``திருநங்கைகளை ஏளனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் `மற்ற வகையினர்' என்கிற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. அவர்களைக் குறிக்கும் அதிகாரபூர்வ பெயர் தெரியாததால்தான், அவ்வாறு கூறினேன். இனி, அனைத்து அதிகாரபூர்வ செயல்களுக்கும் `டிரான்ஸ்ஜென்டர்' எனும் வார்த்தையையே பயன்படுத்துவேன்" என்றார். 

மேனகா காந்தியின் திருநங்கைகள் குறித்த இத்தகைய சர்ச்சை, பின்னர் அவர் மன்னிப்பு கோரியது பற்றி எழுத்தாளரும், திருநங்கையுமான கல்கி சுப்ரமணியத்திடம் பேசினோம். ``மத்திய அமைச்சராக உள்ள மேனகா காந்தி மிக உயர்ந்த அரசியல்வாதி. அவர், மிகுந்த சென்சிட்டிவான நபர்; ஒரு துடிப்புமிக்க பெண்மணி. குறிப்பாக, வனங்கள் மற்றும் மிருகங்களின் உரிமைகள் சார்ந்த பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து, பல வருடங்களாகக் குரல் கொடுத்து வருபவர். அப்படிப்பட்ட மரியாதைக்குரிய, உயர் பதவியில் இருக்கும் ஒருவருக்கு, சக மனுஷியாக இருக்கும் எங்களைப் போன்ற திருநங்கைகள், அவரின் கண்களுக்கு ஏன் கீழ்த்தரமாகத் தெரிகிறார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. அதேசமயம், அவர்மீது பெரிய கோபமும் உண்டு. ஏனெனில், திருநங்கைகளுக்கு எதிராக இத்தனை ஆண்டுகளாக நாட்டில் என்னென்ன நடக்கின்றன என்று அவர் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.

பல இடங்களில் திருநங்கைகள், தங்களின் வாழ்வாதாரத்துக்காகப் பிச்சையெடுப்பதை மேனகா காந்தி நிச்சயம் பார்த்திருப்பார். அவர்கள் ஏன் இப்படிப் பிச்சை எடுக்கிறார்கள் என்று ஒரு மத்திய அமைச்சராக அவருக்குத் தெரியாவிட்டாலும், சராசரிப் பெண்ணாக அவரைப் போன்றவருக்குத் தெரியாமலிருப்பது மிகவும் வேதனையான விஷயம். மேனகா காந்தி மட்டுமல்ல, இன்னும் சில அரசியல்வாதிகளும் அடித்தட்டு மக்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். அதேவேளையில், ஒரு நாய்க்குட்டி பிரச்னை என்றால், அவர்கள் கண்ணுக்கு நிச்சயம் தெரியும். நிறைய பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். இவர், இத்தனை ஆண்டுக்காலம் அரசியலில் மத்திய அமைச்சராகவும், மக்களுக்குத் சேவை செய்பவராகவும் இருந்துவரும் நிலையில், மாற்றுப் பாலினத்தவர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளாமல் போனதுதான் மிகுந்த துரதிர்ஷ்டவசமானது. எனினும், தன்னுடைய பேச்சுக்காக மேனகா காந்தி, மக்களவையில் மன்னிப்புக் கேட்டதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இதுபோல எந்த அரசியல்வாதியும் மாற்றுப் பாலினத்தவரை ஏளனம் செய்யக் கூடாது. அதுபோன்றோர், முதலில் எங்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், எங்களுடைய வாழ்க்கையை நன்கு புரிந்துகொண்டு பேச வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. எங்களைப் போன்ற திருநங்கைகளுக்கு நீங்கள் ஆதரவாக இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் கேவலப்படுத்தாமல் இருந்தாலே போதும்'' என்றார், மிகவும் தெளிவாக.

மூன்றாம் பாலினத்தவர்களின் உணர்வுகள் மற்றும் தேவைகளுக்கும் முழு மதிப்பு கொடுப்போம்...!

அடுத்த கட்டுரைக்கு