Published:Updated:

ஹனான், பாப்பாள் இருவருக்கும் எதிர்ப்பாளர்களால் நேர்ந்த நன்மைகள்!

ஹனான், பாப்பாள் இருவருக்கும் எதிர்ப்பாளர்களால் நேர்ந்த நன்மைகள்!
ஹனான், பாப்பாள் இருவருக்கும் எதிர்ப்பாளர்களால் நேர்ந்த நன்மைகள்!

வீடு இல்லாத ஹனானுக்கு, 5 சென்ட் நிலத்தில் வீடு கட்டிக் கொடுக்க வெளிநாட்டு வாழ் தம்பதி முடிவுசெய்துள்ளனர்.

லகம் நடந்தால்தான் முடிவு கிடைக்கும் என்பார்கள். கொச்சி ஹனான் வாழ்க்கையில்  நடந்த கலகம்தான் அவரின் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டிருக்கிறது. ஜூலை 25-ம் தேதி சாலையோரத்தில் மீன் விற்றுக்கொண்டிருந்த இந்தக் கல்லூரி மாணவி குறித்து `மாத்ருபூமி' நாளிதழ் புகைப்படத்துடன் ஒரு செய்தி வெளியிட்டது. சமூக வலைதளங்களில் அந்தச் செய்தி பரவ, ஹனானுக்கு உதவிகள் குவிந்தன. நடிப்புத் திறமையும் இருந்ததால் பிரபல மலையாள இயக்குநர் அருண்கோபி தன் புதிய படத்தில் பிரணவ் மோகன்லாலுடன் இணைந்து நடிப்ப வாய்ப்பளித்தார்.

சினிமா வாய்ப்புக்காகவே ஹனான் தன்னைப் பற்றியச் செய்தி வரவைத்ததாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. வயநாட்டைச் சேர்ந்த நூருதீன் ஷேக் என்கிற வீடியோ பிளாக்கர், ஹனானைத் தாறுமாறாக விமர்சித்து வீடியோ வெளியிட்டார். ஷேக், தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். மொத்தம் 24 பேர் ஹனானை சமூக வலைதளத்தில் தரக்குறைவாக விமர்சித்தனர். அவர்களையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 

pic courtesy: mathrubhumi

சரி... இந்த விமர்சகர்களால் ஹனானுக்கு நடந்த நன்மைகள் என்ன?

வீடு இல்லாத ஹனானுக்கு, 5 சென்ட் நிலத்தில் வீடு கட்டிக் கொடுக்க வெளிநாட்டு வாழ் தம்பதி முடிவுசெய்துள்ளனர். குவைத்தில் வசித்துவரும் ஜாய் முண்ணடக்கன் என்பவர், ஹனான் கல்லூரி முடித்த பிறகு ராமாபுரம் என்ற இடத்தில் 5 சென்ட் நிலம் வாங்கி வீடு கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளார்.

ஒரே நாளில் கேரளா மற்றும் தமிழகத்தில் பிரபலமாகிவிட்ட ஹனானை, பல்வேறு நிறுவனங்கள் மாடலாக நடிக்கவைக்க முயன்றுவருகின்றன. கேரள காதி நிறுவனம், ஹனானை தங்கள் மாடலாக ஒப்பந்தம் செய்துள்ளது. ஓணம், பக்ரீத் பண்டிகை வருவதையொட்டி நடந்த ஃபேஷன் ஷோவில், ஹனான் கதர் ஆடை அணிந்து பங்கேற்றார். ஹனான் ரேம்பில் நடந்து வந்தபோது ஆடியன்ஸ் பலத்த கரகோஷம் எழுப்பி அவரை உற்சாகப்படுத்தினர். 

``தனியார் நிறுவனங்களுடன் போட்டிபோட முடியாமல் கேரள காதி நிறுவனம் தத்தளித்துவந்தது. காதி சார்பில் ஹனான் பங்கேற்றதால், காதி ஆடைகளுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. ஹனான் எங்களுக்குக் கிடைத்த கிஃப்ட்'' என்கிறார் கேரள காதி நிறுவனத் தலைவர் ஷோபனா ஜார்ஜ்.

எல்லாவற்றுக்கும் மேலாக, விமர்சகர்களால்தாம் ஹனானுக்குக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது, ``எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முன்னேற வேண்டும்'' என்று அறிவுரை வழங்கி, ஹனான் முகத்தில் மீண்டும் சிரிப்பைப் பார்த்தது தனக்கு மகிழ்ச்சி தருவதாக பினராயி விஜயன் கூறினார். முதலமைச்சரைச் சந்தித்த பிறகு வெளியே வந்த ஹனான், ``நான் கேரள அரசின் மகள்'' என்று பூரிப்புடனும் பெருமையுடனும் குறிப்பிட்டார். ஹனானுக்கு இவையெல்லாம் எதிர்ப்பாளர்களால் மட்டுமே நடந்தன. 

வாழ்க்கையில் எதிர்ப்பாளர்கள் தேவை என்பதற்கு, சமீபத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தையும் உதாரணமாகக் கூறலாம். அவிநாசி பாப்பாளும் ஹனான் போலவே ஒரே நாளில் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தவர். `என்னை சமைக்கவிட மாட்டேங்கிறாங்க' என்று கண்ணீருடன் பாப்பாள் கூறியபோது தமிழகமே கலங்கிபோனது. ஆதிக்கச் சாதியினர் `'நீ சமைத்தால் எப்படி எங்கள் பிள்ளைகள் சாப்பிடும்? உன் கையால் எங்கள் பிள்ளைகள் சாப்பிடுமா? நீ எல்லாம் ஏன் இந்த வேலைக்கு வர வேண்டும்'' என்று பாப்பாம்மாளை வார்த்தைகளால் குத்திக்கிழித்தனர். ஆதிக்கச் சாதியினரின் அடாவடிக்குப் பயந்து பாப்பாள் ஓடிவிடவில்லை. அதே பள்ளியில்தான் சமையலராகப் பணிபுரிவேன் என்று உறுதியுடன் நின்றார். விளைவு, எதிர்ப்பாளர்கள் ஓடிப் பதுங்கினர். சிலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கின்றனர். இப்போது, பாப்பாள் கையால் உணவு சாப்பிட, நல்ல எண்ணம்கொண்ட இளைஞர்கள் அவரின் வீடு தேடிச் செல்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, அவருக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. 

தவறுகள் நடப்பதைக் கண்டால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவியுங்கள், அப்பாவிகளுக்கும் நல்லவர்களுக்கும் நன்மைகள் நடக்கட்டும்!

அடுத்த கட்டுரைக்கு