Published:Updated:

'ஹீலர்' பாஸ்கர் கைது ஏன்? - இன்ஸ்பெக்டர் விளக்கம்

யூ-டியூப் வீடியோவைப் பார்த்து தன் மனைவிக்குப் பிரசவம் பார்த்த கார்த்திகேயனை போலீஸார் கைது செய்துள்ள பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. அதற்குள்ளாகக் கோவையில், `நிஷ்டை’ வாழ்வியல் மையத்தின் சார்பாக வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கான வழிமுறை பயிற்சி முகாம் நடத்த இருந்த ‘ஹீலர் பாஸ்கர்’ கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பிரசவம் குறித்த அச்சத்தை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது.

'ஹீலர்' பாஸ்கர் கைது ஏன்? - இன்ஸ்பெக்டர் விளக்கம்
'ஹீலர்' பாஸ்கர் கைது ஏன்? - இன்ஸ்பெக்டர் விளக்கம்

``இன்றைய காலச்சூழலில் இயற்கை ஆர்வலர்கள் பலர், `இயற்கைக்குத் திரும்புதல்’ என்ற கருத்தை முன்வைத்து, தற்சார்பு வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட `மருந்தே இல்லாத மருத்துவத்தை’க் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள். மனிதனை விடாது ஆட்டுவிக்கும் சர்க்கரை வியாதி உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு அந்த வழிமுறையை நாடும் அவர்கள், இரு உயிர்கள் சம்பந்தப்பட்ட பிரசவத்துக்கும் அதே முறையைக் கையாள்வது அதிகரித்துவருகிறது. அப்படி, சமீபத்தில் திருப்பூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தன் மனைவி கிருத்திகாவுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில், நஞ்சுக்கொடி வெளியே வராமல் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாகப் பலியானார், கிருத்திகா. யூ-டியூப் வீடியோவைப் பார்த்து தன் மனைவிக்குப் பிரசவம் பார்த்த கார்த்திகேயனைப் போலீஸார் கைதுசெய்துள்ள பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. அதற்குள்ளாகக் கோவையில், `நிஷ்டை’ வாழ்வியல் மையத்தின் சார்பாக வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கான வழிமுறை பயிற்சி முகாம் நடத்தவிருந்த `ஹீலர்’ பாஸ்கர் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம், பிரசவம் குறித்த அச்சத்தை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது.

`இனிய சுகப்பிரசவம் ஒரு வரம்; மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள், ஸ்கேனிங், ரத்தப் பரிசோதனை என எதுவுமே எடுக்காமல் வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்வதுதான் சுகப்பிரசவம்' என்ற விளக்கத்தோடு வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கு எளிய வழிகாட்டும் ஒருநாள் நிகழ்ச்சி ஆகஸ்ட் 26-ம் தேதி, கோவையில் உள்ள கோவைபுதூர் பகுதியில் நடக்க இருப்பதாகவும் அதில், சிறந்த ஆலோசகர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும் 'நிஷ்டை சர்வதேச வாழ்வியல் பயிற்சி மையத்தின்' சார்பாக வெளியிடப்பட்ட விளம்பரம், சமீப தினங்களாகச் சமூக வலைதளங்களில் பரவிவந்தது. திருப்பூரில், வீட்டிலேயே பார்த்த பிரசவத்தால் நேர்ந்த விபரீதம் அடங்குவதற்குள்ளாகக் கோவையில் உலாவிய இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

உடனடியாக இந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டியும், சம்பந்தப்பட்டர்களிடம் உரிய விசாரணை நடத்தக்கோரியும் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன்  கோவை கிளைச் செயலாளர் டாக்டர் ராஜேஷ்பாபு, கோவை கலெக்டர் ஹரிஹரனிடம் நேற்று (2.8.18) புகார் அளிக்க... இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அவரைத்தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினரும் இதுகுறித்து சுகாதாரத் துறை இயக்குநருக்குப் புகார் அனுப்பினர். இப்படியான தொடர் புகார்களை அடுத்து அந்த நிகழ்ச்சியை நடத்தவிருந்த `ஹீலர்’  பாஸ்கரையும், அவரது அலுவலக மேலாளர் சீனிவாசன் என்பவரையும் கோவை குனியமுத்தூர் போலீஸார் நேற்று அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவர் மீதும் மோசடி மற்றும் குற்றம் செய்ய முயல்வது ஆகிய இரு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கலெக்டரிடம் புகார்மனு அளித்துள்ள இந்தியன்  மெடிக்கல்  அசோசியேஷன்  கோவை கிளைச் செயலாளர் டாக்டர் ராஜேஷ்பாபுவிடம் பேசினோம், ``அந்த விளம்பரத்தைப் பார்த்ததும் நாங்கள் அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டோம். ஒரு குழந்தை கருவாக இருக்கும்போதே... அதற்குப் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த விளம்பரத்தில் வேண்டாம் என்று சொல்லப்படும் டெஸ்டுகள்தாம் அந்தப் பிரச்னைகளையெல்லாம் கண்டறிந்து நலமுடன் குழந்தை பிறக்க வழிவகை செய்கிறது. மருத்துவத்தைப்பற்றி முழுமையாக எதுவும் தெரியாதவர்கள் மாயாஜால வார்த்தைகள் பேசி மக்களைத் திசை திருப்புவது என்பது மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும். திருப்பூரைச் சேர்ந்த கிருத்திகா என்ற கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரத்துக்கு அவருடைய கணவர், அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட `வீட்டுப் பிரசவத்தை ஊக்குவிக்கும் இலவசப் பயிற்சி முகாமில்’ கலந்துகொண்டதும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. அப்படி இருக்கையில், மக்களைத் தவறாக வழிநடத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அலோபதி மருத்துவர்கள் யாரும் சுகப்பிரசவத்துக்கு எதிரானவர்கள் கிடையாது. நாங்களும் சுகப்பிரசவத்தைத்தான் விரும்புகிறோம். சிசேரியன் என்பது தாய் - சேய் இருவரில் யாராவது ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே மேற்கொள்ளப்படுகிறது. வீட்டிலேயே தற்செயலாக நிகழும் பிரசவம் என்பது வேறு வீட்டிலேயேதான் பிரசவம் செய்துகொள்வேன் என்று உயிரோடு விளையாடுவது வேறு. இதில் மிகப்பெரிய ரிஸ்க் இருக்கிறது. அதனாலேயே நாங்கள் புகார் கொடுத்தோம். கண்டிப்பாக இதுபோன்ற மக்களை திசை திருப்பும் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட வேண்டும்'' என்றார். 

`ஹீலர்’ பாஸ்கரை கைதுசெய்திருக்கும் கோவைக் குனியமுத்தூர் இன்ஸ்பெக்டர் கணேஷிடம் பேசினோம், ``பாஸ்கருக்கு கோவை புதூர்தான் சொந்த ஊர். பி.இ சிவில் இன்ஜினீயர் படித்திருக்கிறார். இரண்டு வருடம் அக்குபஞ்சர் படித்துள்ள அவர், தன்னுடைய பேச்சாற்றலைப் பயன்படுத்தி `ஹீலர்’ பாஸ்கர் என்ற அடைமொழியோடு பல வருடங்களாக மக்களை ஏமாற்றி வந்துள்ளார். ‘அனாட்டமி தெரபி ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் ஒரு பதிவு செய்யப்படாத டிரஸ்ட்-ஐ வைத்துக்கொண்டு இலவசப் பயிற்சி முகாம் என்ற பெயரில் மக்களைத் திரட்டி, `உங்களுக்குள்ள நோய்களுக்கு லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டாம். உங்கள் உடம்பே அதைச் சரி செய்துகொள்ளும். உதாரணத்துக்குப் பாம்பு கடித்தால், அதற்கு எந்த மருந்தும் தேவை இல்லை. தனக்குப் பாம்பே கடிக்கவில்லை என்று நினைத்தாலே போதுமானது' என்று சொல்லி தன் லாகவப் பேச்சால் மக்களை ஏமாற்றியுள்ளார். அவரின் பேச்சில் மெய்மறந்து ஏமாறுபவர்களிடம் தனது டிரஸ்ட்டில் 5,000 ரூபாய் 10,000 ரூபாய் எனப் பணத்தைக் கட்டச்சொல்லி மோசடி செய்திருக்கிறார். உரிய விசாரணைக்குப் பிறகு அவரது டிரஸ்ட்டையும், மையத்தையும் முடக்கும் நடவடிக்கையில் இறங்குவோம். கோவை புதூரைச் சேர்ந்த ஜான்சன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார் 

இதுதொடர்பாக ‘ஹீலர்’ பாஸ்கரின் வழக்கறிஞர் ராஜ்குமாரிடம் பேசினோம், ``வேண்டுமென்ற இந்த நடவடிக்கையைக் காவல் துறை மேற்கொண்டுள்ளது. அவர் இயற்கை வைத்தியத்தைப் பற்றி கருத்துச் சொன்னாரே ஒழிய, மருத்துவம் பார்க்கவில்லை. ஆங்கில மருத்துவத்துக்கு எதிராகப் பேசிவருவதால் ஆரம்பத்திலிருந்தே அவருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அவரை எப்படியாவது முடக்குவதற்கான முயற்சிதான் இந்தக் கைது. நாங்கள் சட்டப்படி இந்த வழக்கை எதிர்கொள்வோம்'' என்றார்.

எதிலும் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதே எல்லோரும் சொல்லும் அறிவுரையாகும்.