Published:Updated:

''என் கல்யாணத்தை நடத்தி வைச்சுட்டு கலைஞர் சொன்ன கதை என்ன தெரியுமா?!'' - தமிழிசை #MissUKarunanidhi

தமிழிசை
தமிழிசை

மருத்துவமனையில் அவரைச் சந்தித்தபோது, 'எங்கள் குடும்பத்தில் நடக்கும் மற்ற திருமணங்களுக்கும் நீங்கள் தலைமை தாங்குவீர்கள்' என்றேன். அவருக்கே உரிய தொனியில் புன்னகையை உதிர்த்தார்.

மிழக அரசியலின் முதுபெரும் தலைவர் மு.கருணாநிதியின் மறைவு, அரசியல் வட்டாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவரான தமிழிசை செளந்தரராஜன், கருணாநிதியுடனான தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

''கலைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்ததிலிருந்தே, என்னுடைய திருமணம் நிகழ்வுதான் நிழலாடிக்கொண்டிருக்கிறது. அந்தத் திருமண நிகழ்வில், அரசியல் கூட்டம்போல கரை வேட்டிகள் பலரும் அரசியல் பேசியபோது, கரகர குரலில் கூட்டத்தைக் கட்டிப்போட்டது ஒரு கதை. 'ஒரு குவளையில் ஒரு மடக்கு தண்ணீர் இருக்கிறது. அதை ஆண் மான் குடிக்கட்டும் எனப் பெண் மானும், பெண் மான் குடிக்கட்டும் என ஆண் மானும் தண்ணீர் குடிக்காமல், பாவனைச் செய்துகொண்டிருந்தன. இதுதான் வாழ்வை கட்டிப்போடச் செய்யும் அன்பு. அந்த மான்கள்போல நீங்களும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் உணர்வுடன்  இருக்க வேண்டும்" என வாழ்த்தினார் கலைஞர் கருணாநிதி. அதுபோலவே இத்தனை வருடங்களை கடந்திருக்கிறோம். 

என் அப்பா அரசியல்வாதி என்பதால், எப்போதும் அரசியல் பேச்சுக்களே என் காதில் விழுந்துகொண்டிருக்கும். அப்போது, என் வயதுடையவர்கள் தூர்தர்ஷனில் ஒலியும் ஒளியும் பார்க்க ஆவலுடன்  காத்திருப்பார்கள். நானோ, சட்டமன்ற நிகழ்வுகளைக் காண காத்திருப்பேன். தன்னுடைய கருத்துக்களை எளிமையாக எடுத்துரைக்கும் தலைவராகத்தான் கருணாநிதி எனக்கு அறிமுகமானார். நாளடைவில் அவரின் சொல்லாடலுக்கு  ரசிகை ஆகிப்போனேன். இதுதான் அரசியல் என்ற தெளிவு வருவதற்கு முன்பே, இவர்தான் கலைஞர் என என் மனதில் ஆழமாகப் பதிந்தவர் அவர். நான் இளநிலை மருத்துவம் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தபோது, தமிழ் மன்றத்தின் சார்பாக, கலைஞரைப் பேச அழைத்திருந்தோம். அப்போது சன்னல், காற்று என்ற இரு தலைப்புகளில் கவிதை கூற வேண்டியவர்கள் வரவில்லை. அதற்கு கருணாநிதி கூறிய உவமை, என்னை ஆச்சர்யத்தின் உச்சிக்குக் கொண்டுசென்றது. "இது குளிர்சாதன அறை. சன்னல் இல்லாததால் காற்றும் வரவில்லை" எனச் சூழலுக்கு ஏற்ப நகைச்சுவையுடன் விளக்கம் கொடுத்தார். இதுதான் அவர் எழுதிய புத்தகங்களை தேடவைத்தது. எனக்கான ஆளுமைத்திறனை, பாதி என் அப்பாவிடமிருந்தும், மீதி கலைஞரிடமிருந்தும் கற்றுக்கொண்டேன். 

அரசியல்வாதிகள் என்றாலே தங்கள் கட்சிக்கு ஆதாயம் இருந்தால் மட்டுமே, மற்றவர்களுக்கு உதவ முன்வருவர் என்ற கருத்தைத் தவிடுபொடியாக்கியவர் அவர். கட்சி வேறு கட்சியைத் தாண்டிய திறமையை ஊக்குவிப்பவர். அவரின் பேரன் அருள்நிதியின் திருமணத்துக்கு எனக்கு அழைப்பு வந்திருந்தது. மேடையில் கட்சியின் முன்னுரிமை மனிதர்கள் பலர் பேசிக்கொண்டிருந்தனர். எனக்கும் பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போது, 'எந்தக் கட்சி மேடையானாலும் தமிழுக்கு இடம் உண்டு. தமிழ் இருக்கும் இடத்தில் இந்தச் தமிழிசைக்கும் இடம் உண்டு' எனப் பேசினேன். மேடையிலிருந்து இறங்கியதும், 'அப்பா மாதிரி நல்லா பேச கத்துக்கிட்டே'னு தலையில் கைவைத்து வாழ்த்தினார். எத்தனைப் பேருக்கு இந்தப் பெருந்தன்மை இருக்கும். அதேபோல, என் மகன் திருமணத்துக்கும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார். இதுவே எங்கள் குடும்பத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாகப் பார்க்கிறேன்.

மருத்துவமனையில் அவரைச் சந்தித்தபோது, 'எங்கள் குடும்பத்தில் நடக்கும் மற்ற திருமணங்களுக்கும் நீங்கள் தலைமை தாங்குவீர்கள்' என்றேன். அவருக்கே உரிய தொனியில் புன்னகையை உதிர்த்தார். அந்தப் புன்னகையே எங்கள் குடும்பத்தில் நடக்கவிருக்கும் திருமணங்களுக்கு இனி ஆசிர்வாதமாக இருக்கும். நான் வேறு கட்சியில் இருக்கிறேன். கட்சிக்காகப் பாடுபடுகிறேன். ஆனால், அன்பு செலுத்த கட்சி, தலைமைபோன்ற எந்த வரையறையும் இல்லை எனப் புரியவைத்தவர், கலைஞர் கருணாநிதி. அவரை என் மனதின் உயரத்தில் வைத்திருக்கிறேன். அவரின் உடல்தான் மரணம் அடைந்துள்ளது. அவரின் சேவையும் பணியும், தமிழ் இருக்கும் வரை இருக்கும்'' என நெகிழ்ந்தார் தமிழிசை செளந்தரராஜன்.

அடுத்த கட்டுரைக்கு