Published:Updated:

சமூக வலைதளம், ரகசியம், நட்பு... எங்கு எப்படி நடக்க வேண்டும்?! - சில டிப்ஸ்

தவறான ஒன்றைத் தேர்வுசெய்தால், பல சரியான விஷயத்தை இழக்கவேண்டியிருக்கும் என்பதைப் புரிந்து செயல்படுங்கள்.

சமூக வலைதளம், ரகசியம், நட்பு... எங்கு எப்படி நடக்க வேண்டும்?! -  சில டிப்ஸ்
சமூக வலைதளம், ரகசியம், நட்பு... எங்கு எப்படி நடக்க வேண்டும்?! - சில டிப்ஸ்

பெண்களுக்கான ஆளுமைத்திறனை வளர்ப்பது தொடர்பாகவும்,சமூக வலைதளம் பற்றிய பயன்பாடு,  சமூகத்தில் உள்ள பிரச்னைகளை எதிர்கொள்வது தொடர்பான அடிப்படைத் தகவலைப் பகிர்கிறார், சென்னையைச் சேர்ந்த தன்னம்பிக்கைப் பேச்சாளர், சியாமாளா ரமேஷ் பாபு.

சமூக வலைதளங்கள்

உங்களின் கண்முன்னே சமூக வலைதளம் விரிவுபட்டுள்ளது. நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்புள்ள நேரத்தில், ஆபத்துகளும் அதிகம் உள்ளது. உங்களுடைய மனநிலையில் எப்போதும் உறுதியாகவும் தெளிவாகவும் இருப்பது அவசியம். சமூக வலைதளங்களைச் சரியான முறையில் கையாண்டு, முன்னேற்றத்துக்குப் பயன்படுத்துங்கள்.

உங்களுக்கான அடையாளம்:

பெண் என்றாலே, அடுத்தவரின் மனநிலைக்கு ஏற்பவும் சூழலுக்கு ஏற்பவும் தன்னை மாற்றிக்கொள்ளும் பொம்மை என உலகம் எண்ணுகிறது. அதைத் தவிடுபொடியாக்க உங்களை நீங்களே ரசிக்கப் பழகுங்கள். அப்போதுதான் உங்களுக்குச் சரியெனப்படுவதை துணிந்து செயல்படுத்த முடியும். உங்கள் எண்ணத்துக்கு உயிர் கொடுக்க முடியும். எனவே, பிறரின் அபிப்பிராயத்துக்காக உங்களின் அடையாளத்தைத் தொலைத்துவிடாமல், நீங்கள் நீங்களாகவே இருந்து வெற்றியை வசப்படுத்துங்கள்.

"நோ" சொல்லப் பழகுங்கள்:

'பெண் புத்தி பின் புத்தி' என்ற பழமொழி எல்லோராலும் பொதுவாகச் சொல்லப்படுகிறது. இது உண்மை இல்லை. எனினும், தவறான ஒன்றைத் தேர்வுசெய்தால், பல சரியான விஷயத்தை இழக்கவேண்டியிருக்கும் என்பதைப் புரிந்து செயல்படுங்கள். எந்த ஒரு செயலைச் செய்யும்முன், பலமுறை யோசித்துச் செயல்படுங்கள். உங்கள் மனதுக்கு தவறாகப் படும் சலுகைக்கோ, நட்புக்கோ, பழக்கத்துக்கோ துணிச்சலுடன் 'நோ' சொல்லப் பழகுங்கள். இது, உங்களுக்கான ஆளுமையை வளர்க்கும்.

பெற்றோர்கள் கருத்து :

பெண்களை இழிவுபடுத்த இந்தச் சமுதாயம் தயங்கியதே இல்லை. நமக்குச் சரியாகப்படும் விஷயம், பல நேரங்களில் சமுதாயத்துக்குச் சரியாகப்படுவதில்லை. குறிப்பாக, டீன் ஏஜ் பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். ஆண் நண்பர்கள், ஆடை கலாசாரம், நட்பு, ரகசியம் பகிர்தல் போன்றவை தற்போது இயல்பாகக் கடந்துவிடும் ஒன்றாக இருந்தாலும், பெற்றோரின் கருத்தையும் ஒருமுறை காது கொடுத்துக் கேளுங்கள். உங்களுடைய பர்சனல் விஷயங்களைப் பெற்றோர்களிடம் மனம் திறந்து பேசினாலே, பல பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.

பாஸிட்டிவ் எண்ணங்கள் :

குடும்பம், படிப்பு, வேலை என எந்த நிலையில் இருந்தாலும், பெண்களுக்கான டாஸ்க் இரண்டு மடங்கு வலிமையானதாகவே இருக்கும். பெண்கள் என்பதற்காகவே நிறைய தோல்விகள் துரத்தும். வாய்ப்புகள் விலகிப்போகும். இதுபோன்ற சூழலில், உங்கள் முன்பு வைக்கப்பட்டிருக்கும் சவாலை துணிந்து எதிர்கொள்ளுங்கள். எப்போதும் உங்களைச் சுற்றி பாஸிட்டிவ் எண்ணங்களை வளர்த்துக்கொண்டு ஊக்கத்துடன் செயல்படுங்கள். ஆண்கள் உலகமும் உங்களை அண்ணாந்துபார்க்கும்.

வெளியுலகத் தொடர்பு :

வெளியுலகச் சூழலை கையாளும் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். அதுதான் உங்களின் எல்லையை விரிவுபடுத்தும். வெளியுலகில் பழகும்போது, சரியான தெளிவு இல்லாத நபரிடம் உங்களைப் பற்றிய எந்த விஷயத்தையும் பகிர்ந்துகொள்ளாதீர்கள். அது உங்களுக்கே ஆபத்தாக முடியும். உங்கள்மீது அக்கறைகொண்டவர்களைச் சரியாக இனம் காண்பது மிக அவசியம். அதேநேரம், வெளியுலகில் உங்களுக்கான அடையாளத்தைத் தேடி, உங்களுக்கான துறையில் சாதியுங்கள்.

இலக்குகள்:

தற்காலிக சந்தோஷங்களில் கவனம் செலுத்தி, நீண்ட கால இலக்கைத் தொலைத்துவிடாதீர்கள். எந்த ஒரு நிகழ்விலும் வெற்றி, தோல்வியைச் சமமாகப் பார்க்கும் எண்ண ஓட்டத்தைத் தெளிவாக்குங்கள். வெற்றி தோல்வி இரண்டும் சமம் என்ற எண்ணம் வந்தால் மட்டுமே கூடுதல் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றிபெற முடியும்.

போராடி வெல்வோம்!