Published:Updated:

"எங்களைப் பொறுத்தவரை பெண்கள் என்றால்...?!" இப்படியும் சில அரசியல்வாதிகள்!

"எங்களைப் பொறுத்தவரை பெண்கள் என்றால்...?!" இப்படியும் சில அரசியல்வாதிகள்!
"எங்களைப் பொறுத்தவரை பெண்கள் என்றால்...?!" இப்படியும் சில அரசியல்வாதிகள்!

"எங்களைப் பொறுத்தவரை பெண்கள் என்றால்...?!" இப்படியும் சில அரசியல்வாதிகள்!

"எப்போது ஒரு பெண் நள்ளிரவில் சுதந்திரமாக சாலைகளில் செல்கிறாளோ.. அன்று தான் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது என்று கூறமுடியும்” இவை மகாத்மா காந்தியின் வார்த்தைகள். காந்தியாருடைய சொற்கள் படி பார்த்தால், இன்னமும் இந்தியா சுதந்திரம் அடையாத நாடுதான். ஆண்கள் எங்கே வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சுதந்திரமாகச் சுற்றலாம். ஆனால், இன்றளவிலும் வெளியில் அல்ல வீட்டில் கூட ஒரு பெண்ணால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை என்பதே நிதர்சனம்.

ஒவ்வொருமுறையும் பாலியல் வக்கிரங்கள் பற்றியச் செய்தி வெளியாகும் போதும், `பெண்கள் ஆடை அணியும் விதம்தான் காரணம்' என்று சிலர் கிளம்புவார்கள். ஒரு ஆண் பெண்ணொருவளிடம் தன் காதலை வெளிப்படுத்தினால் அந்தப் பெண் நிச்சயம் அதை ஏற்கவேண்டும், இல்லையெனில் அவள் முகத்தில் அமிலம் வீசுவதும், அவளைக் கடத்திச் சென்று கொல்வதும் செய்திகளாக உலா வருகின்றன. பெண்களுக்கு எதிரான செயல்களில் சாதாரண சாமானியனிலிருந்து, பெரும் பொறுப்பில் இருப்பவர்கள் வரை ஈடுபட்டு வருவதை மறுக்கவே முடியாது. 

சமீபத்தில், மும்பை கட்கோபார் பகுதியின் பி.ஜே.பி எம்.எல்.ஏ ராம் கதம், கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பேசிய வார்த்தைகள் பெரும் சர்ச்சையானது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் எழுந்து ``நான் ஒரு பெண்ணிடம் என் காதலைக் கூறினேன். ஆனால், அவள் அதை ஏற்க மறுக்கிறாள். எனக்கு உதவுங்கள்?" என்று கூற, அதற்கு எம்.எல்.ஏ. ராம் கதம் ``உங்கள் பெற்றோரைக் கூப்பிட்டு வாருங்கள். அவர்கள் உங்கள் விருப்பத்துக்குச் சம்மதித்தால், நீங்கள் சொல்லும் பெண்ணை நானே கடத்திக்கொண்டு வந்து உங்களிடம் சேர்க்கிறேன்" என்றார். மேலும், ``இதுபோன்ற உதவிகளுக்கு இந்த எண்ணில் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்" என்று ஒரு அலைபேசி எண்ணையும் கூட்டத்தில் உள்ளவர்களுக்குக் கொடுத்துவிட்டுச் சென்றார். 

பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் இடத்தில் இருக்கும் அரசியல்வாதிகளே பெண்களுக்கு எதிராக, அவர்களின் அடிப்படை சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் பல்வேறு கருத்துகளைக் கூறி வருவதை நாம் கண்டுள்ளோம். இதற்கு முன் யார் யார், என்ன மாதிரியான வன்மம் நிறைந்த வார்த்தைகளையெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்...

``என் எதிரிகளுக்கு (மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்) எச்சரிக்கை விடுக்கிறேன். எனது தாய்மார்களுக்கோ, சகோதரிகளுக்கோ, என் கட்சித் தொழிலாளர்களுக்கோ ஏதேனும் இன்னல் ஏற்படுத்தினால், நான் அவர்களை விட்டு வைக்க மாட்டேன். என் ஆட்களை அனுப்பி அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது பாலியல் வன்முறையை ஏவுவேன்” – திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தபஸ் பால்.

“அரைகுறை ஆடைகள், குட்டைப் பாவாடை போன்றவற்றைப் பெண்கள் அணிவதே பாலியல் வன்முறைகளில் ஆண்களை ஈடுபடவைக்கிறது” – திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிரஞ்சீட் சக்ரபோர்த்தி

``நள்ளிரவில் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது என்பதற்காக, இருட்டிய பின்பு பெண்கள் வெளியே போவது சரியல்ல” – முன்னாள் ஆந்திர காங்கிரஸ் கமிட்டி தலைவர் போட்சா சத்தியநாராயணா 

``பெண்கள், உறவினர் அல்லாத ஆண்களோடு வெளியே செல்லவே கூடாது.” – மகாராஷ்டிரா மாநில சமாஜ்வாடி கட்சித் தலைவர் அபு அசிம்.

``ஆண்கள் தவறு செய்யத்தான் செய்வார்கள். இதற்காக அவர்கள் தூக்கிலிடப்படக் கூடாது. நாங்கள் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான சட்டங்களைத் திரும்பப்பெறுவோம்”. – சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ்

``பெண்களுக்கு சிறுவயதில் திருமணம் செய்து வைத்தால் பாலியல் வன்முறைகளிலிருந்து பெண்களை அது காக்கும்” – ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா 

``பாலியல் வன்முறைகள் திட்டமிட்டு செய்யப்படுபவை அல்ல. அவை தற்செயலாய் நடக்கும் ஒன்று” – சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர் ராம்சேவக் பைக்ரா

``பாலியல் வன்முறைகள் நகரத்தில்தான் நடக்கின்றன. கிராமப்புறங்களில் நடப்பதில்லை. பெண்கள் உறவினர்கள் தவிர வேறு ஆண்களுடன் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். பாலியல் வன்முறைகள் மேற்கத்திய கலாசாரத்தினாலும், அரைகுறை ஆடை அணிவதாலும் நடக்கிறது.” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

``பெண்களுக்கெதிரான குற்ற விகிதம் என்பது, பெண்கள் எப்படி ஆடை அணிந்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே. பலாத்காரம் சில நேரங்களில் சரி, சில நேரங்களில் அது தவறு” – மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் பாபுலால் கவுர்.

``டெல்லியில் நடந்த ஒரு சின்னப் பாலியல் வன்முறை பெரிதாக்கப்பட்டதால், சுற்றுலாத் துறைக்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஆனது." - தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. (டெல்லி நிர்பயா வழக்கைக் குறிப்பிட்டுப் பேசியபோது)

மாநிலத்தில் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பது தொடர்பாக ஒரு பெண் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறிய பதில் :- ``நீங்கள் பாதுகாப்பாகத்தானே இருக்கிறீர்கள்? பிறகு நீங்கள் ஏன் அதைப்பற்றிக் கவலைப்படுகிறீர்கள்?”

``முன்பெல்லாம் ஆண்கள் மற்றும் பெண்கள் கைகோத்துக் கொண்டால் பெற்றோர்களால் கண்டிக்கப்பட்டனர். இப்போதெல்லாம் திறந்தவெளிச் சந்தை போல ஆண்களும், பெண்களும் ஒன்றாகச் சேர்ந்து திரிவதாலேயே பாலியல் வன்முறைகள் நடக்கின்றன.” - திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  

``நிர்பயா உண்மையிலேயே இரவு 11 மணிக்கு நண்பருடன் படம் பார்க்கச் சென்றாரா? சக்தி மில் சம்பவத்தை எடுத்துக்கொண்டால், பெண் பத்திரிகையாளர் 6 மணிக்கு அதுபோன்ற தனிமையான இடத்துக்கு ஏன் சென்றார்? எனவே, பெண்களின் ஆடைகள், நடத்தை மற்றும் அவர்கள் பொருத்தமற்ற இடங்களுக்குச் செல்வதாலும் பாலியல் வன்முறைகள் நடக்கின்றன” - தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகளிர் உரிமை ஆணைய உறுப்பினருமான ஆஷா மிர்கே.

நாட்டை வழிநடத்தும் இடத்தில் இருக்கும் அரசியல்வாதிகளே பெண்களுக்கெதிராக இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதும், பாலியல் வன்முறை குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்குவதும் ஒன்றுதான். அரைகுறை ஆடைகள் என்று குற்றச்சாட்டுகள் வைப்போர், பத்து மாதக்குழந்தைக்கு நடந்த பாலியல் வன்முறைகள் பற்றி என்ன சொல்வார்கள். உறவினர்களுடன் வேறு யாருடனும் பெண்கள் வெளியே செல்லக்கூடாதாம். டெல்லி, கேரளா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தன் தந்தையாலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தச் சம்பவங்களையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது. `பெண்களுக்குச் சிறு வயதில் திருமணம் செய்து வைத்தால் பாலியல் வன்முறைகள் குறைந்துவிடும்' என்று கூறுகிறார்கள். இதுமாதிரியான பிற்போக்குத்தனமான கருத்துகளை ஆண் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, பெண் அரசியல்வாதிகளும் கூறியிருக்கிறார்கள். 

இவற்றுள் சிலர் தங்கள் கருத்துகளுக்கு மன்னிப்பு தெரிவித்திருக்கலாம். `பெண்களைக் கடத்திக்கொண்டு வருகிறேன்' என்று கூறிய ராம் கதம் கூட மன்னிப்பு கேட்டிருக்கிறார். பெண் பத்திரிகையாளர்கள் பற்றி மிகவும் தரக்குறைவான வகையில் கருத்து பகிர்ந்திருந்த எஸ்.வி.சேகர் தனது பதிவை நீக்கியிருக்கிறார். என்னதான் இருந்தாலும், இதன் மூலம் அவர்களின் மனதில் உள்ள பிற்போக்கு சிந்தனையும், பெண்கள் குறித்த பார்வையும் அப்பட்டமாக வெளிப்பட்டது.. பட்டதுதான்.

அடுத்த கட்டுரைக்கு