Published:Updated:

”அழுதுவிட்டேன்!” கவர் பிக்சரில் இடம்பெற்ற ‘ப்ளஸ்-சைஸ்’ மாடல் டெஸ் ஹாலிடே

'தன் உடல்வாகை நேசிப்பது சரிதான். ஆனால், இது உடல்பருமனை ஊக்குவிப்பது போன்றுள்ளது. இப்படி செய்வது சரியில்லை!' என்று சமூக வலைதளங்களில் சிலர் விவாதிக்கின்றனர்.

”அழுதுவிட்டேன்!” கவர் பிக்சரில் இடம்பெற்ற ‘ப்ளஸ்-சைஸ்’ மாடல்  டெஸ் ஹாலிடே
”அழுதுவிட்டேன்!” கவர் பிக்சரில் இடம்பெற்ற ‘ப்ளஸ்-சைஸ்’ மாடல் டெஸ் ஹாலிடே

பிரபல அமெரிக்க ஃபேஷன் பத்திரிகையான ‘காஸ்மோபோலிடன்’ வெளியிட்ட ஓர் அட்டைப் படம், பெரும் வரவேற்பையும் சிறு கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உடல்பருமன் என்பது, உலகம் முழுவதும் மனிதர்களிடையே இருக்கும் பொது பிரச்னை. அதிலும், அமெரிக்கா போன்ற ‘வளர்ந்த’ நாடுகளில் இந்தச் சிக்கல் அதிகமாக இருக்கிறது. ஒபிசிட்டி ( Obesity) எனும் உடல்பருமன் நோய் பற்றி விழிப்பு உணர்வும் அக்கறையும் எந்தளவுக்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு உடல்பருமனாக இருப்பவர்களைக் கேலி செய்வதும் அவமதிப்பதும் சர்வசாதாரணமாக நடக்கும். இதில், மெத்த படித்த மேதாவி நாட்டு மனிதர்களும் விதிவிலக்கல்ல. 

இப்படிப் ‘பாடி -ஷேமிங்’ (Body-Shaming) செய்பவர்களுக்கு எதிராக, எதிர்ப்புக் குரல்கள் தொடர்ந்து எழும். ‘பாடி-பாசிஸ்டிவி’ என்ற எந்தவிதமான உடல்வாகையும் ஏற்றுக்கொண்டு, நேர்மறையாகப் பார்க்க வேண்டும் என்ற கருத்தும் அதற்கான செயல்களும் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கும். ஆனால், கடந்த சில வருடங்களாகவே பெண்கள் தொடர்பான பல பிராண்டுகள் ‘ப்ளஸ்-சைஸ்’ பெண்களை ஆதரித்துவருக்கின்றனர். இந்த விஷயத்தையே, பிரபல 'காஸ்மோபோலிடன்' பத்திரிகைப் பின்பற்றியுள்ளது. ‘பிளஸ்-சைஸ்’ மாடல் அழகியான, டெஸ் ஹாலிடே (Tess Holliday), என்பவரைத் தன் அட்டைப்படத்தில் வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து டெஸ் ஹாலிடே, “அந்த இதழிலிருந்து என்னை அழைத்தபோது முதலில் நான் நம்பவே இல்லை. 'நீங்கள் விளையாடுகிறீர்களா?' எனக் கேட்டேன். 'இல்லை, உங்களை எங்களது அட்டைப்பட மாடலாகத் தேர்வுசெய்திருக்கிறோம்' என்றார்கள். அதைக் கேட்டதும் அழுதுவிட்டேன். நான் சிறுவயதில் இருந்தபோது, இதுபோன்று ஓர் அட்டைப் படம் வெளியாகி இருந்தால், என் வாழ்க்கை வேறுமாதிரி இருந்திருக்கும்” என்று நெகிழ்கிறார்.

33 வயதாகும் ஹாலிடேவின் நிஜப் பெயர், ரியான் ஹொவன். இவர் 2011 முதலே மாடலிங் துறையில் இருக்கிறார். வோக் இத்தாலியா ( Vogue Italia), நிலோன் (Nylon), மரியே க்ளேரே (Marie Claire) ஆகிய பத்திரிகைகளில் இடம்பெற்றுள்ளார். 2015-ம் ஆண்டு, 'பீப்பிள்' என்ற பிரபல அமெரிக்க இதழிலும், 'உலகின் முதல் சைஸ் 22 சூப்பர் மாடல்' என்ற தலைப்புடன், அட்டைப்பட மாடலாக வந்துள்ளார். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு மில்லியன் ஃப்லோயர்ஸ் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், 'காஸ்மோபோலிடன்' பத்திரிகையில் இவரின் அட்டைப் படம் வெளிவந்ததும், நிறைய பாராட்டும் சில விமர்சனமுமாக மாறியிருக்கிறது ஹாலிடேயின் வாழ்க்கை. 'தன் உடல்வாகை நேசிப்பது சரிதான். ஆனால், இது உடல்பருமனை ஊக்குவிப்பது போன்றுள்ளது. இப்படிச் செய்வது எந்த வகையிலும் உடல்வாகை நேர்மறையாகப் பார்க்க உதவாது' என்று சமூக வலைதளங்களில் சிலர் விவாதிக்கின்றனர். சிலரோ, 'இது மிகவும் முற்போக்கான சிந்தனை. நிச்சயம் இதை ஆதரிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.

PC: instagram.com/tessholliday

"ஆமாம்! நான் குண்டாக இருப்பது அவர்களுக்கு எரிச்சலை உண்டாகுகிறது. இந்த விமர்சனங்களைத் தினமும் சந்திக்கிறேன். உண்மை என்னவென்றால், என்னை சமூக வலைதளங்களில் ஃபாலோ செய்பவர்களிடம், ‘நீங்கள் உங்கள் எடையைக் கூட்டுங்கள்' என்று கூறவில்லை. ‘நான் என்னை நேசிக்கிறேன்' என்பதை மட்டுமே சொல்லவருகிறேன். நான் உடல்பருமனை ஊக்குவிக்கவில்லை. நான் நோயாளியும் இல்லை. அப்படி இருந்தாலும், அவர்கள் இதைப் பற்றி விமர்சிக்கத் தேவையில்லை!” என்று நச் பதில் அளித்திருக்கிறார் டெஸ்.